இந்தியா
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய முக்கிய நிர்வாகிகள்; தருமபுரி மாவட்டத்தில் ஷாக்

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய முக்கிய நிர்வாகிகள்; தருமபுரி மாவட்டத்தில் ஷாக்
தருமபுரி மாவட்டம், அரூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சியின் தலைவர் இளையராஜா, பொருளாளர் சுரேஷ், துணை செயலாளர் வேடியப்பன், இணை செயலாளர் முருகேசன், பாப்பிரெட்டிப்பட்டி பொருளாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட ஒன்றிய நிர்வாகிகள் 10 பேர், நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.
தொடர்ந்து கடந்த சில காலங்களாக நாம் தமிழர் கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் விலகிவருகின்றனர். கடந்த நவம்பர் மாதம், 7-ம் தேதி நாம் தமிழர்க் கட்சியின் திருப்பத்தூர் வடக்கு மாவட்டச் செயலாளர் தேவேந்திரன் கட்சியின் தலைமை மீது அதிருப்தி தெரிவித்தும் பல்வேறு புகார்களை கூறியும் கட்சியில் இருந்து விலகினார்.
அதனைத் தொடர்ந்து நவம்பர் 14-ம் தேதி நெல்லை மாவட்ட நாதக இளைஞரணி தலைவர் பர்வீன் தன்னுடைய கருத்துகளை பேச அனுமதி கேட்டபோது, அவரை சீமான் ஒருமையில் பேசி வெளியேற்றியதால், பர்வீனின் ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும், நவம்பர் 18-ம் தேதி 15 வருடமாக நாம் தமிழர் கட்சியில் இருந்து வந்த சேலம் மாநகர மாவட்ட செயலாளர் அழகாபுரம் தங்கம், அக்கட்சியிலிருந்து விலகினார்.
இப்படி பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்வேறு முக்கிய நிர்வாகிகள் தொடர்ந்து விலகுவதும், கட்சியில் இருந்து விலகும் நபர்கள் மாற்றுக்கட்சியில் இணைவதுமாக இருந்துவருகிறது. இது தொடர்பாக கடந்த நவம்பர் மாதம் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “நாதகவில் இருந்து விலகுபவர்கள் எங்களின் ஸ்லீப்பர் செல். யாரும் கட்சியில் இருந்து விலகவில்லை. நாங்கள் தான் அனுப்பி வைக்கின்றோம். மற்ற கட்சிகளில் உளவு பார்ப்பதற்காக நாங்கள் தான் எங்கள் கட்சியினரை அனுப்பி வைக்கிறோம்” என்று பேசினார்.