இந்தியா
ஆண்டாள் கோயிலில் இளையராஜாவிற்கு நடந்தது என்ன? கோவில் நிர்வாகம் விளக்கம்

ஆண்டாள் கோயிலில் இளையராஜாவிற்கு நடந்தது என்ன? கோவில் நிர்வாகம் விளக்கம்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அர்த்த மண்டபத்திற்குள் செல்ல முயன்ற இசையமைப்பாளர் இளையராஜாவை வெளியே அனுப்பியதாக சர்ச்சை எழுந்த நிலையில் இது தொடர்பாக கோயில் நிர்வாகத்திடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்கப்பட்டது. அப்போது, ஆண்டாள் கோயிலில் கருவறைக்கு முன்பு உள்ள அர்த்த மண்டபத்தையும் கருவறை போன்றே பாவித்து வருவதாகத் தெரிவித்தனர்.
அர்த்த மண்டபத்திற்குள் ஜீயர்களை தவிர பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை என்றும் சம்பவத்தன்று ஜீயருடன் இளையராஜாவும் அர்த்த மண்டபத்திற்குள் தவறுதலாக நுழைந்ததாகவும் தெரிவித்தனர். கோயில் நிர்வாகம் தரப்பில் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இளையராஜா வெளியே சென்றதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இளையராஜாவிற்கு கோயில் யானையை வைத்தோ, வெண்குடை பிடித்தோ வரவேற்பு அளிக்கப்படவில்லை என்றும் ஆண்டாள் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் அர்த்த மண்டபத்தில் இருந்து இளையராஜா வெளியேற்றப்பட்டது குறித்து விருதுநகர் ஆட்சியர் ஜெயசீலனுக்கு இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் செல்லத்துரை கடிதம் எழுதி உள்ளார். அதில், அர்த்த மண்டபத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார், கருடாழ்வார் உற்சவரும் எழுந்தருளி உள்ளதாகவும் கோயில் மரபு படியும், பழக்க வழக்கபடியும் அர்த்த மண்டபம் வரை இதர நபர்கள் அனுமதிக்கப்படும் வழக்கமில்லை என்றும் விளக்கி உள்ளார்.
Also Read :
ரயில் பயணம் முதல் ஒபாமா அழைப்பு வரை.. தபேலா மன்னன் ஜாகிர் உசேனின் இசை பயணம்
அர்த்த மண்டபம் வரை அர்ச்சகர், பரிசாரகர், மடாதிபதிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் இணை ஆணையர் விளக்கம் அளித்தார். ராமானுஜ ஜீயருடன் இளையராஜா வருகை தந்ததாகவும், அவரை அர்த்த மண்டப வாசல் முன்பிரிந்து சாமி தரிசனம் செய்ய சக ஜீயர்கள் மற்றும் கோயில் மணியம் கூறியதாக விவரித்துள்ளார். அதை இளையராஜாவும் ஏற்றுக் கொண்டதாகவும் இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் செல்லத்துரை விவரித்துள்ளார்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து இசை அமைப்பாளர் இளையராஜா தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அவர் தெரிவித்திருப்பதாவது; “என்னை மையமாக வைத்து சிலர் பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். நான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் என்னுடைய சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல, விட்டுக்கொடுக்கவும் இல்லை. நடக்காத செய்தியை நடந்ததாகப் பரப்புகின்றார்கள். இந்த வதந்திகளை ரசிகர்களும், மக்களும் நம்ப வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.