இந்தியா
Ilayaraja: இளையராஜா விவகாரம்: ஆண்டாள் கோயில் விளக்கமும்.. ஆகம அறிஞர் கருத்தும்.. எது உண்மை?
Ilayaraja: இளையராஜா விவகாரம்: ஆண்டாள் கோயில் விளக்கமும்.. ஆகம அறிஞர் கருத்தும்.. எது உண்மை?
இளையராஜா இசையில் உருவான “திவ்ய பாசுரம் நாட்டியாஞ்சலி” நிகழ்ச்சி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக மாநிலங்களவை உறுப்பினரும், இசையமைப்பாளருமான இளையராஜா வருகை தந்தார். அவரை கோயில் நிர்வாகத்தினர் வரவேற்றனர். இதைத்தொடர்ந்து இளையராஜா ஆண்டாள் ரங்கமன்னாரை தரிசனம் செய்ய அர்த்த மண்டபத்திற்குள் செல்ல முயன்றார். அப்போது அருகே இருந்த ஜீயர் மற்றும் பட்டர்கள் இளையராஜாவை அர்த்த மண்டபத்திற்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர்.
அதைத்தொடர்ந்து அர்த்த மண்டப நுழைவு வாயிலில் நின்றவாறு இளையராஜா சாமி தரிசனம் செய்தார். மேலும் திவ்ய பாசுரம் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியையும் கண்டு ரசித்தார். ஆண்டாள் கோயிலில் அர்த்த மண்டபத்திற்குள் நுழைய யாருக்கும் அனுமதி கிடையாது என்றும் அதனடிப்படையிலேயே இளையராஜா தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் கோயில் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
இதற்கிடையே, இளையராஜா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள விளக்கத்தில், “தன்னை மையமாக வைத்து சிலர் பொய்யான வதந்திகளைப் பரப்பி வருவதாக குறிப்பிட்டுள்ளார். தான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல, விட்டுக்கொடுக்கவும் இல்லை” எனவும் விளக்கமளித்துள்ளார். நடக்காத செய்தியை நடந்ததாகப் பரப்புவதாகவும், இந்த வதந்திகளை ரசிகர்களும், மக்களும் நம்ப வேண்டாம் எனவும் இளையராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்கிடையே, ஆண்டாள் கோயில் அர்த்த மண்டபத்துக்கு அனைவரும் வரலாம் என்று ஆகம அறிஞர் சத்தியவேல் முருகனார் கருத்து தெரிவித்து, அதற்கு விளக்கமும் கொடுத்துள்ளார். நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் சொல்லதிகாரம் நிகழ்ச்சியில், ஆசிரியர் கார்த்திகைச்செல்வன் உடனான விவாதத்தின் போது, அவர் இதை குறிப்பிட்டார்.
ஆண்டாள் கோயிலில் இளையராஜா சர்ச்சை விவகாரம் தொடர்பாக பேசிய ஆகம அறிஞர் சத்தியவேல் முருகனார், “வைணவத்தை பொறுத்தவரை இரண்டு ஆகமங்களே இருக்கின்றன. ஒன்று வைகானசம், இன்னொன்று பாஞ்சராத்ரா. ஸ்ரீவில்லிப்புதூர் ஆண்டாள் கோயில் வைகானசம் அடிப்படையில் இருந்தாலும், பாஞ்சராத்ரா வழிபாட்டு முறைகளை தழுவிக்கொண்டு தான் இயங்குகிறது.
அர்த்த மண்டபத்தில் இருந்து அரையர்கள் பாடுவார்கள். அர்த்த மண்டபத்துக்கு மடாதிபதிகள் வரலாம் என்கிறார்கள். மடாதிபதிகள் என்ன பிராமண குலத்தைச் சேர்ந்தவர்களா?. மடாதிபதிகளில் முக்கால்வாசி பேர் பிராமணர் அல்லாதவர்கள் தான். அவர்கள் எல்லாம் அர்த்த மண்டபத்துக்கு வருகிறார்களே எப்படி?. ஆகம விதிக்கும் இதற்கு சம்பந்தமே இல்லை.
பாஞ்சராத்ரா முறையில் ஆகம விதி என்று ஒன்றை காட்டவே முடியாது. எனவே, அர்த்த மண்டபத்துக்கு அனைவரும் வரலாம். நான் என்னோட சிறிய வயதில் அர்த்த மண்டபத்தில் பல நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளேன்” என்றும் கூறினார்.
பாஞ்சராத்ரா முறையில் ஆகம விதி என்று ஒன்றை காட்டவே முடியாது என்று ஆகம அறிஞர் சத்தியவேல் முருகனார் தெரிவித்துள்ள நிலையில், அப்படியெனில் இளையராஜா வேண்டுமென்றே தடுக்கப்பட்டாரா.. ஆண்டாள் கோயில் நிர்வாகம் அளித்த விளக்கம் தவறா என்று சர்ச்சை எழுந்துள்ளது.