இந்தியா
“ஒரு குகேஷின் வெற்றி லட்சக்கணக்கான குகேஷ்களை உருவாக்க வேண்டும்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்

“ஒரு குகேஷின் வெற்றி லட்சக்கணக்கான குகேஷ்களை உருவாக்க வேண்டும்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்
உலக சாம்பியன்ஷிப் வென்ற குகேஷை பாராட்டி, அவருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ. 5 கோடி பரிசுத் தொகை வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது.
இந்த விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் செஸ் உலக சாம்பியன்ஷிப் வென்ற விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குகேஷுக்கு ரூ. 5 கோடி பரிசுக்கான காசோலையை வழங்கினார்.
பிறகு நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “18 வயதில் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ள நம் சென்னை குகேஷுக்கு எனது பாராட்டு. இங்கே அமர்ந்திருக்கும் அவரது பெற்றோர்போல் நானும் மகிழ்ச்சியில் இருக்கிறேன்.
வெற்றிபெற்றதும், விளையாட்டு திறமையோடு, சிறந்த குணம், மன உறுதி ஆகியவை இருந்ததால் வென்றதாக சொன்னார். ஆனால், இதனுடன் சேர்ந்து அவரின் புன்னகை முகமும், விமர்சனங்களைத் தாங்கும் உள்ளமும்தான் அவரின் வெற்றிக்குக் காரணம்.
7 வயதில் பயிற்சியைத் துவங்கி 9 வயதில் கேண்டிடேட் பட்டம் வென்று, 12 வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று, இன்று உலக சாம்பியன் ஆகியிருக்கிறார். இவை அனைத்தையும் சாதிக்க குகேஷ் எடுத்துக்கொண்டது வெறும் 11 ஆண்டுகள்தான். இதற்குப் பின்னால் இருக்கும் விடாமுயற்சி, உழைப்பு, தன்னம்பிக்கை, இலக்கை நோக்கிய பயணம் இவற்றைத்தான் நம் தமிழ்நாடு இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டியது.
ஒரு குகேஷின் வெற்றி லட்சக்கணக்கான குகேஷ்களை உருவாக்க வேண்டும். குகேஷ் உலக சாம்பியனானதைப் பாராட்டும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் அவருக்கு ரூ. 5 கோடி பரிசு அறிவித்து அதனை வழங்கியிருக்கிறோம்.
2001-ல் விஸ்வநாதன் ஆனந்த் உலக சாம்பியன்ஷிப் வென்றபோது அன்றைய முதல்வர் கலைஞர் அவருக்கு இதேபோல், சென்னையில் பாராட்டு விழா எடுத்தார். மேலும், தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் அவருக்கு வீடு வழங்கிப் பாராட்டினார். 2006-ல் இரண்டாவது முறையாக செஸ் சாம்பியன் வென்றபோது ஆனந்திற்கு ரூ. 25 லட்சம் நிதி வழங்கிக் கலைஞர் பாராட்டினார். ஆனந்த் இரு முறை வென்றபோதும், தற்போது குகேஷ் உலக சாம்பியன் வென்றபோதும் அவர்களுக்கு உரிய மரியாதை கொடுத்துப் பாராட்டி பெருமைப்படுத்துகிற வாய்ப்பு நமது கழக அரசிற்குக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்தியாவின் விளையாட்டுத் தலைநகர் என தமிழ்நாட்டைச் சொல்லும் அளவிற்கு விளையாட்டுத் துறையை சிறப்பாகக் கவனித்து வரும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கும், அவருக்குத் துணையாகச் செயல்பட்டு வரும் அரசு அலுவலர்களுக்கும் எனது பாராட்டுகள்.
இந்தியாவின் 85 கிராண்ட் மாஸ்டர்களில் 31 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இப்படி இன்னும் திறமைவாய்ந்த சதுரங்க வீரர், வீராங்கனைகளை உருவாக்க இந்த விழாவில் புதிய திட்டத்தை அறிவிக்கிறேன். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் ‘Home of Chess’ எனும் சிறப்பு அகாடமி உருவாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இது குகேஷுக்கான பாராட்டு விழா மட்டும் கிடையாது. விளையாட்டுத் துறையில் சாதிக்க விரும்பும் எல்லோருக்கும் ஊக்கமளிக்கும் விழா. எதிர்காலத்தில் இந்த மேடையில் உங்களுக்கான பாராட்டு விழா நிச்சயம் நடக்கும்.
கல்வி, விளையாட்டு என இரண்டிலும் நம் தமிழ்நாட்டு இளைஞர்கள் சாதிக்க வேண்டும். அதனால், தான் “நான் முதல்வன்”, “புதுமைப்பெண்”, “தமிழ்புதல்வன்” என உயர்க்கல்வியை ஊக்குவிக்கும் திட்டங்களை செயல்படுத்திக்கொண்டு இருக்கிறோம். இதனை மாணவர்களும் இளைஞர்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
செஸ் என்பது மன விளையாட்டு மட்டும் அல்ல. நம் வாழ்க்கைக்கு தேவையான ஏராளமான பாடங்களை வழங்கக்கூடியது. இங்கு செஸ் விளையாட்டு நுணுக்கங்களை அறிந்தவர்கள் ஏராளமானோர் இருக்கிறீர்கள். எனக்கும் செஸ் விளையாட்டு நுணுக்கங்கள் ஓரளவுக்கு தெரியும்.
வெற்றிக்காக சில நேரங்களில் செஸ்சில் சக்தி வாய்ந்த இராணியைக்கூட தியாகம் செய்ய வேண்டியிருக்கும். நாம் விரும்பி நம் காய்களை வெட்டுக்கொடுத்து வெற்றி பெறுவோம். அதுபோல், நம் வாழ்க்கையிலும், இலட்சியத்திலும் வெற்றி பெற நம் வாழ்வில் எத்தகைய தியாகத்திற்கும் தயாராக இருக்க வேண்டும்.
அதேபோல், செஸ் விளையாட்டில் ஆற்றல் குறைந்த காய் என்பது சிப்பாய். ஆனால், பொறுமையாகவும், சரியான முறையிலும் நகர்த்தினால் சிப்பாயைக் கூட இராணியாக மாற்றலாம்.
அதுபோல், நம் வாழ்வில் பொறுமையும் விடாமுயற்சியும் இருந்தால் நிச்சயம் வெல்லலாம். நம் இளைஞர்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புவது, வெற்றி, தோல்வி முக்கியமில்லை, பங்கேற்பதுதான் முக்கியம். பங்கேற்பதே பெரிய வெற்றிதான். எனவே போட்டியிட்டு நீங்கள் யார் என காட்டுங்கள்.
கொரட்டூரில் பிறந்த குகேஷ், இன்று உலகம் போற்றும் சதுரங்க வீரராக வளர்ந்திருப்பது உங்களுக்கு வழிகாட்டும். உழைப்புதான் சாதனையாளர்களை உருவாக்குகிறது. வாழ்க்கை உங்களுக்கு வைக்கும் ஒவ்வொரு செக்கும் ஒரு பாடம். எனவே வாய்ப்பை பயன்படுத்தி, உழைப்பை செலுத்தி வெற்றி பெறுங்கள்” என்று பேசினார்.