இந்தியா
பிடிக்காத வேலை.. விரல்களை வெட்டிக்கொண்ட இளைஞர்! குஜராத்தில் பகீர் சம்பவம்

பிடிக்காத வேலை.. விரல்களை வெட்டிக்கொண்ட இளைஞர்! குஜராத்தில் பகீர் சம்பவம்
குஜராத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனக்கு பிடிக்காத வேலையிலிருந்து விலகுவதற்காக தனது விரல்களை தானே வெட்டிக்கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தை சேர்ந்தவர் 32 வயதான மயூர் தாராபரா. கடந்த 8-ந் தேதி, தனது விரல்களை யாரோ வெட்டி எடுத்துச் சென்று விட்டதாக புகார் கூறியதைக் கேட்டு போலீசார் அதிர்ந்து போயினர்.
அம்ரோலி பகுதி அருகே தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்துவிட்டதாகவும், கண் விழித்து பார்த்தபோது தனது இடது கையில் 4 விரல்கள் துண்டிக்கப்பட்டு இருந்தாகவும் தராபரா வேதனையுடன் கூறியுள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், மாந்திரீகம் உள்ளிட்ட காரணங்களுக்காக விரல்களை யாராவது வெட்டி எடுத்துச் சென்றிருப்பார்களோ? என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணையை தொடர்ந்தனர்.
தாராபரா சொன்ன இடத்தில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து பார்த்த போது மயூர் தாராபரா தனது விரல்களை தானே வெட்டிக் கொண்டார் என்ற அதிர்ச்சித் தகவல் போலீசாருக்கு தெரியவந்துள்ளது. போலீசார் மயூர் தராபராவை அழைத்து விசாரித்தபோது அவர் உண்மையை ஒப்புக்கொண்டார்.
மயூர் தாராபரா தனது உறவினர் ஒருவரின் வைரம் பட்டை தீட்டும் நிறுவனத்தில் கணக்கு பிரிவில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்துள்ளார். அந்த வேலை அவருக்கு பிடிக்காத நிலையில், வேலையை விட்டு விலக நினைத்துள்ளார். ஆனால் அதுகுறித்து தனது உறவினரிடம் கூற அவருக்கு தைரியம் வரவில்லை. எனவே, விரல்களை வெட்டிக் கொண்டு தன்னை கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பணிக்கு தகுதியற்றவராக மாற்றிக் கொள்வதற்காக திட்டம் போட்டுள்ளார்.
அதன்படி தனது விரல்களை தானே வெட்டிக் கொள்ள முடிவெடுத்து, புதிய கத்தி ஒன்றை வாங்கிக் கொண்டு கடந்த 8ம் தேதி இரவு அம்ரோலி சாலை அருகே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்குச் சென்றுள்ளார். அங்கு தனது இடது கையில் முழங்கை பகுதியில் கயிறு ஒன்றை இருகக் கட்டிக் கொண்டு தனது விரல்களை தானே வெட்டிக் கொண்டுள்ளார்.
பின் வெட்டப்பட்ட விரல்கள் மற்றும் கத்தியை ஒரு பையில் போட்டு தூக்கி வீசியுள்ளார். பின்னர் தனது நண்பர்களை அழைத்து, தன்னுடைய விரல்களை யாரோ வெட்டிவிட்டதாக கூறி மயூர் தாராபரா கதறியிருக்கிறார். அவரது நண்பர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்த பின் போலீசாருக்குத் தகவல் அளித்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்தது .
இதையடுத்து, மயூர் தாராபரா கூறிய இடத்திற்குச் சென்று ஆய்வு செய்த போலீசார், அங்கு ஒரு பையில் வெட்டப்பட்ட விரல்கள் மற்றும் ஒரு கத்தியை கண்டெடுத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.