இந்தியா
Thirukkural Paintings: “இணையத்தை கலக்கும் திருக்குறள் ஓவியங்கள்” – தினமொரு குறளை ஓவியமாக மாற்றி அசத்தும் சௌமியா இயல்…

Thirukkural Paintings: “இணையத்தை கலக்கும் திருக்குறள் ஓவியங்கள்” – தினமொரு குறளை ஓவியமாக மாற்றி அசத்தும் சௌமியா இயல்…
சௌமியா இயல்
உலக பொதுமறையென அழைக்கப்படும் திருக்குறள் மனித வாழ்விற்கான அத்தனை மாண்புகளையும் பேசுகிறது. நம் வாழ்வில்தவிர்க்க முடியாத இலக்கியம் திருக்குறள் என்றாகிவிட்டப்போதிலும். நமக்கெல்லாம் மதிப்பெண்கள் பெறும் செய்யுளாக மட்டுமென நினைத்து பள்ளி காலங்களில் படித்து கடந்து வந்திருப்போம். ஆனால் இவரோர் ஆச்சர்யம்.
தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றிக்கொண்டே தன்னுள் உற்றெடுத்த தமிழ் ஆர்வத்தை சம கால தலைமுறைகளுக்கு கற்றுத்தர முனைந்து அவர் கையிலெடுத்த ஆயுதம் தான் திருக்குறள். “வரையுறதுங்கிறது சின்ன வயசுல இருந்தே எனக்குள்ள கலந்த ஒன்னு.வரையுறது ரொம்ப பிடிக்கும். 25 வயது வரைக்கும் தமிழார்வம் இல்லாத சூழல்ல வளர்ந்து அப்புறம் முனைவர் பட்டம் பெற ஆராய்ச்சிக்காக சங்க இலக்கியங்களை ஆராய்ச்சி பண்ண ஆரம்பிச்சேன். அப்போ படிக்குற நம்முடைய தொன்மையும், வரலாறும் உண்மையிலேயே சிலிர்க்க வச்சுது.
அப்போ முடிவானது தான் ஏன் என்னோட தமிழார்வத்தையும் & ஓவியத்தையும் ஒன்னா சேர்க்கக்கூடாதுன்னு?? இந்த முயற்சிக்கான யோசனை சரியாக இருந்தாலும் எப்படி எதை முன்னிறுத்தி வரையுறதுங்கிற குழப்பம் இருந்துச்சு. அப்போ திருக்குறள் சம்மந்தமா அதிகமா படிக்க ஆரம்பிச்சேன். நிறைய பேரு எழுதுன உரையையும் படிச்சு ஓவியமா மாத்த முடிவு பண்ணுனேன். திருக்குறள் நம்முடைய வாழ்க்கைக்கான அத்தனை விஷயங்களையும் பேசுது. அன்பு, அறம், மனிதம், காதல், காமம், உடல்நலம், மனநலம்னு எல்லாமே. இத 1,333 நாட்கள்ல 1333 ஓவியங்களா கொண்டு சேர்க்கணும்னு நினைச்சேன்.
எனக்குமே ஒரு பிம்பம் இருந்துச்சு. அறத்துப்பால்,பொருட்பால் முடிச்சு காமத்துப்பால் எடுத்தப்போ என்ன பெருசா இருந்திடப்போகுதுன்னு..ஆனா அந்த முதல் திருக்குறளே பிரமிக்க வச்சுது. ஏன்னா திருவள்ளுவர் அங்க பெண்ணை அணங்குன்னு குறிப்பிட்டுருப்பாரு. அழகா இருக்குற, தனக்கு விருப்பமான பெண்ணை தெய்வ பெண்ணா நினைக்குறது தான் ‘அணங்கு’. அது உண்மையிலேயே பிரமிக்க வச்சுது. அதே நேரம் திருக்குறள்ள எனக்கு சில முரண்களுமே உண்டு. புலால் உண்ணாமை, மடலேறுதல், வரைவின் மகளிர், போன்ற அதிகாரங்கள்ல பெண்களை சாடியே எழுதிருக்க மாதிரி இருக்கும். பெண்களை சொன்ன அளவுக்கு ஆண்களை அதிகமா சொல்லிருக்க மாட்டாரு.
இந்த மாதிரி குறளை வரையும் போது அந்த குறளோடு அடிநாதம் குறையாமலும், அதே நேரம் பெண்களுக்கு முக்கியத்துவமும் கொடுத்து வரைந்திருக்கேன் இந்த முயற்சிக்கு மிக முக்கிய காரணம் என்னோட அம்மா,அப்பா, பொண்ணு, தம்பி தான். நான் எந்த இடையூறும் இல்லாம வரைய அவங்க நிறைய சிரத்தை எடுத்தாங்க. நான் நினைச்ச விஷயம் நடந்து முடிஞ்சதுக்கு அவங்க தான் மிக முக்கிய காரணம். திருக்குறள் மூலமா நானடைந்த எல்லாம் அனுபவங்களையும் ஒரு ‘Course’ ஆ மாத்தி நம்முடைய இலக்கியங்களை ஓவியங்களா மாத்த குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கலாங்கிற எண்ணமும் இருக்கு. ஏன்னா நம்முடைய வரலாறுகளை காலத்திற்கு தகுந்தாற் போல் கடத்தி சேர்த்து விடுவது தான் என்னுடையமொழிக்கு நான் செய்யும் கடமையா பார்க்குறேன்.
தொடர்ந்து ஓவியக் கண்காட்சி, திருக்குறள் ஓவியம் சம்மந்தமான புத்தகம்னு நிறைய முன்னெடுப்புகள்ல இருக்கும். வெகு விரைவில் எல்லாமே நடக்கும்னு நம்புறேன். இப்ப வரைக்கும் என்னோட ஓவியங்களை பார்த்து பாராட்டி எனக்கு இந்த குறள் பெரிய ஊக்கத்தை தருது. அப்புறமா நான் நிறைய தேடி படிச்சேன்னு சொல்றவங்க Social media ல நிறைய பேரு அவங்க கொடுக்குற வரவேற்பு தான் தொடர்ந்து இது மாதிரியான நிறைய முன்னெடுப்புகள் எடுக்க காரணமே. இது என்னோட முயற்சியா மட்டும் இல்லாம நிறைய பேருக்கு திருக்குறள் போயி சேருதுங்கிறது தான் இதுக்கொடுத்த நிறைவா நான் பார்க்குறேன்” என திருக்குறளின் பெருமையை ஓவியமாக தீட்டிய சௌமியா பெருமை பொங்க தெரிவித்துள்ளார்.