நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 20/12/2024 | Edited on 20/12/2024

அரசாங்கத்துக்கு எதிராக போராட்டம் நடத்தும் மக்கள் படையின் தலைவர் பெருமாள் வாத்தியார் விஜய் சேதுபதியை கடைநிலை கான்ஸ்டபிள் குமரேசன் என்கிற சூரி கைது செய்வதோடு விடுதலை படத்தின் முதல் பாகம் முடிந்திருந்தது. அப்பொழுது இரண்டாம் பாகத்திற்கான லீடில் கைது செய்த விஜய் சேதுபதியை போலீசார் எவ்வாறு விசாரித்தனர் என்ற க்ளிம்சோடு படத்தை முடித்திருந்தனர். தற்பொழுது வெளியாகி இருக்கும் விடுதலை இரண்டாம் பாகத்தில் விட்ட இடத்தில் இருந்து விஜய் சேதுபதி யார்? அவருடைய பின்புலன் என்ன? அவரை போலீசார் என்ன செய்தனர்? போன்ற கேள்விகளுக்கு விடையாக படம் விரிகிறது… அது எந்த அளவு ரசிகர்களை கவர்ந்தது என்பதை பார்ப்போம்….

விஜய் சேதுபதியை கைது செய்த போலீசார் சட்ட ஒழுங்கை காப்பாற்ற அவரை காட்டுக்குள் அழைத்து செல்கின்றனர். காட்டுக்கு நடுவே இருக்கும் போலீஸ் கேம்பில் அவரை அடைத்து வைக்க போலீசார் அழைத்து செல்லும் வழியில் விஜய் சேதுபதி தான் யார், தான் எதற்காக இந்த போராட்டத்தில் ஈடுபடுகிறேன், அவருடைய பின் வாழ்க்கை என்ன? போன்ற விவரங்களை கூறிக் கொண்டே காட்டில் பயணிக்கிறார். இதற்கிடையே அதேநேரம் அரசு அதிகாரிகள் இந்த விஷயத்தை எப்படியாவது மேலதிகாரிகளிடமிருந்தும், மீடியாக்களிடமிருந்தும் மறைப்பதற்கு போராடுகின்றனர். ஆனால் விஷயம் வெளியே கசிந்து விட போலீசார் ஒரு அதிரடி முடிவு எடுக்கின்றனர். அந்த அதிரடி முடிவு என்ன? வாத்தியார் விஜய் சேதுபதி இவர்களிடமிருந்து தப்பித்தாரா, இல்லையா? வாத்தியாரின் கொள்கை கோட்பாடு ஆகியவைகளின் நிலை என்னவானது? இவர்களுக்கு நடுவே சிக்கிக் கொண்ட சூரியின் நிலை என்னவானது? என்பதே விடுதலை பாகம் 2 படத்தின் மீதி கதை.

Advertisement

மலை கிராமங்களில் தேடுதல் வேட்டை என்ற பெயரில் போலீசார் அத்துமீறிய பாலியல் சம்பவங்களை இந்த படத்தின் முதல் பாகத்தில் அப்படியே கண்முன் கொண்டு வந்து காட்டியிருப்பார் இயக்குநர் வெற்றிமாறன். இந்த பாகத்தில் அதன் பின் தொடரும் தேடுதல் வேட்டைக்கு நடுவே பண்ணையார்கள் எளிய மக்களை எப்படி அடிமைப்படுத்தினர், அவர்கள் வீட்டுப் பெண்களை பண்ணையார்கள் தன் வக்கிர புத்தியால் எப்படி பாலியல் வன்கொடுமை செய்தனர், கூலி உயர்வு கேட்ட கிராம மக்களை எப்படி கொடூரத்தனமாக கொலை செய்தனர் போன்ற விஷயங்களை அப்படியே கண்முன் கொண்டு வந்து காட்டி இருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன்.

ரத்தமும் சதையுமாக ஒவ்வொரு ஏழை மக்களின் வாழ்வியலையும், கண்ணீரையும், கைதையும், கொடூரமான மரணங்களையும் அவர்கள் வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றங்களையும் மிக தத்துரூபமாகவும் நேர்மையாகவும் அதேசமயம் ரசிக்கும் படியும் காண்பித்து பார்ப்பவர்கள் மனதை கனமாக்கி இருக்கின்றார். குறிப்பாக களப்போராளிகளின் தனிப்பட்ட வாழ்வியலும், நாட்டு மக்களுக்காக அவர்கள் சிந்தும் ரத்தத்துக்கு பின்னால் இருக்கும் நியாயமும், அவர்களின் தியாகமும், வலிகளையும் உருக்கமாக பதிவு செய்திருக்கிறார். அதேபோல் இடதுசாரி மற்றும் சிவப்பு, கருப்புக்கு பின்னால் இருக்கும் அரசியலை போல்டாகவும் அதேசமயம் எதார்த்தமாகவும் நேர்மையாக பேசி மக்களுக்கு நிதர்சன உண்மைகளை தெள்ளத் தெளிவாக வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார்.

ஒவ்வொரு போராளியும் அகிம்சையை விட்டுவிட்டு ஏன் ஆயுதப் போராட்டத்தில் இறங்குகிறார்கள், அவர்கள் பின் இருக்கும் நியாயம் என்ன, போன்ற விஷயங்களுக்கு நியாயம் செய்திருக்கும் இயக்குநர் வெற்றிமாறன் அதேசமயம் எதற்குமே வன்முறை தீர்வாகாது என்ற கோட்பாடையும் ஆணித்தனமாக நெற்றி பொட்டில் அடித்தது போல் கூறி படத்தையும் சிறப்பாக கொடுத்து மீண்டும் ஒரு பிளாக்பஸ்டர் வெற்றி படத்தை கொடுத்திருக்கிறார். சாதிய வன்கொடுமை, மனித உரிமை மீறல், போலிஸ் அராஜகம் போன்ற இன்றளவும் ட்ரெண்டிங்கில் இருக்கும் விஷயத்தை துணைவன் சிறுகதையை மையமாக வைத்து உருவாக்கிய விடுதலை படத்தின் மூலம் சமகால உண்மைகளை வெட்ட வெளிச்சம் போட்டு காட்டி பார்ப்பவர்களுக்கு கைத்தட்டல் பெரும்படியான காட்சி அமைப்புகள் மூலம் நல்ல படம் பார்த்த உணர்வை கொடுத்திருக்கிறார். படத்தின் நீளமும் மற்றும் ஆழமான கம்யூனிச கொள்கைகள் அடங்கிய வசன காட்சிகளும் சற்றே அயற்சி ஏற்படுத்தும் படி இருப்பதை மட்டும் கவனித்து சற்று நீளத்தை குறைத்திருக்கலாம்.

Advertisement

பெருமாள் வாத்தியாராக வரும் விஜய் சேதுபதி வழக்கம் போல் தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். குறிப்பாக காதல் காட்சிகளிலும், தன் சகாக்கள் இழந்த ஒருவரின் வலியை வெளிப்படுத்தக்கூடிய காட்சிகளிலும் மிக மிக உலக தரமான நடிப்பை சிறப்பாகவும் வித்தியாசமாகவும் காண்பித்து தான் ஒரு தேர்ந்த நடிகர் என்பதை மீண்டும் மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார். மைந்து மைந்து வசனங்கள் பேசுவதை தவிர்த்து முகபாவனைகளிலும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தக்கூடிய காட்சிகளிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறார். இன்னொரு நாயகனாக வரும் சூரி படம் முழுவதும் அமைதியாக இருந்து கொண்டு பேக்ரவுண்ட் வாய்ஸ் மூலம் கதை சொல்கிறார். இறுதி கட்ட காட்சிகளில் வழக்கம் போல் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் பெற்று இருக்கிறார். போராட்டப் பெண்மணியாக வரும் கம்யூனிச போராளி மஞ்சு வாரியர் தனக்கு கொடுத்த வேலையை மிகச் சிறப்பாக செய்து கவனம் பெற்று இருக்கிறார்.

சில காட்சிகளே வந்தாலும் இளவரசு மனதில் பதிகிறார். அவருடன் வரும் சரவண சுப்பையா, பாலாஜி சக்திவேல், ராஜீவ் மேனன், கௌதம் வாசுதேவ மேனன் ஆகியோர் அவரவர் வேலையை சிறப்பாக செய்திருக்கின்றனர். குறிப்பாக வில்லத்தனத்தில் மிக பயங்கரமாக மிரட்டி பார்ப்பவர்களுக்கு அவர் மேல் எரிச்சல் ஊட்டும் படியான சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி விருது வாங்கும் அளவிற்கு கைதட்டல் பெற்று இருக்கிறார் வில்லன் சேத்தன். காட்சிக்கு காட்சி அவர் காட்டும் வில்லத்தனம் அவர் மேல் வெறுப்பை உண்டாக்குகிறது. அந்த அளவு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் பெற்று இருக்கும் சேர்த்தனுக்கு விருதுகள் நிச்சயம். இறுதிக்கட்ட காட்சிகளில் வந்தாலும் மனதில் பதிகிறார் நடிகர்,  இயக்குநர் தமிழ். மற்றொரு களப்போராளியாக வரும் கிஷோர் தன் அனுபவம் நடிப்பின் மூலம் கவர்கிறார். அதிரடியாக கலக்கியிருக்கும் கென் கருனாஸ் மனதில் பதியும் படியான நடிப்பை நடித்துவிட்டு சென்றிருக்கிறார். சின்ன சின்ன வேடங்களில் வரும் பாவலர் நவகீதன், சுப்பிரமணிய சிவா உட்பட பலரின் பங்களிப்பு படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. 

இந்தப் படத்தின் இன்னொரு நாயகனாக பார்க்கப்படுவது இசைஞானி இளையராஜாவின் பின்னணி இசை. நீண்ட இடைவெளிக்கு பிறகு தான் ஒரு ராஜாதி ராஜா என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் இசைஞானி இளையராஜா. எந்தெந்த காட்சிகளுக்கு எந்தெந்த அளவு எங்கெங்கு இசை வேண்டுமோ அங்கங்கே அவ்வளவு இசையை சிறப்பாக கொடுத்து அதேசமயம் எங்கு அதிரடி காட்ட வேண்டுமோ அங்கு காட்டி படத்திற்கு வேறு ஒரு வர்ணம் பூசி உலக தரத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறார். அதேபோல் பாடல்களும் மிக சிறப்பாக கொடுத்து ரிப்பீட் மோடில் கேட்க வைத்திருக்கிறார். 

Advertisement

இந்த சமூகத்தில் இந்த சமகாலகட்டத்தில் நடக்கின்ற அநீதிகள் அனைத்தையும் கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஓடக்கூடிய இந்த விடுதலை படத்தின் மூலம் சுட்டிக்காட்டும் படியான திரைக்கதை அமைத்து அதன் மூலம் ‘தத்துவம் இல்லாத தலைவர்கள் ரசிகர்களை மட்டும் தான் உருவாக்குவார்கள். அது முன்னேற்றத்துக்கு உதவாது’ போன்ற ஆழமான வசனங்கள் மூலம் இக்கால ட்ரெண்டுக்கு ஏற்ற விஷயங்களை நேர்த்தியாக காட்சிப்படுத்தி பார்ப்பவர்களை உணர்ச்சி பொங்க ரசிக்க வைக்கும் ஒரு வெற்றி படமாக இந்த விடுதலை 2 படத்தையும் கொடுத்திருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன்.

விடுதலை 2 – எழுச்சி!