இந்தியா
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது… கோவையில் பரபரப்பு

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது… கோவையில் பரபரப்பு
கோவையில் அல் உம்மா இயக்க தலைவர் பாட்ஷா இறுதி ஊர்வலத்திற்கு அனுமதி அளித்த காவல் துறையை கண்டித்தும், தமிழக அரசை கண்டித்தும் அனைத்து இந்து இயக்க கூட்டமைப்பு சார்பில் கருப்பு தின பேரணி இன்று மாலை காந்திபுரம் பகுதியில் நடைபெற்றது. இதில் இந்து முன்னணி, பா.ஜ.க, விஸ்வ ஹிந்து பரிஷத் உட்பட பல்வேறு இந்து அமைப்புகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கருப்பு பேட்ஜ் அணிந்தபடியும், கருப்பு கொடி அணிந்தபடியும் பங்கேற்றனர்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற இந்த கருப்பு தின பேரணியில், அக்கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் ஆகியோர் பங்கேற்றனர்.
பேரணி துவங்கும் முன்பு வாகனத்தில் இருந்த படி தலைவர்கள் பேசினர். இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பேசும் போது, “உதயநிதி ஸ்டாலின் கிறிஸ்தவ கூட்டத்தில் போய் பேசியிருக்கின்றார் எனவும், கிறிஸ்தவன் என்பதில் பெருமை என்கின்றார் எனவும் தெரிவித்த அவர், பாதிரியாராக போக வேண்டியதுதானே” எனவும் தெரிவித்தார். துணை முதல்வரை செருப்பால் அடிக்க வேண்டும் என சர்ச்சைக்குரிய வகையில் பேசிய காடேஸ்வரா சுப்பிரமணி, இதற்கு வழக்கு போட்டாலும் பார்த்துக்கொள்ளலாம் என தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூட்டத்தினர் மத்தியில் பேசினார். அப்போது, நேரடியாக முதல் 5 நிமிடம் முதல்வர் ஸ்டாலினை பார்த்து பேசுகின்றேன் எனக்கூறிய அவர், “2022ம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதி உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் பகுதியில் கார் குண்டு வெடித்தது. NIA அறிக்கையில் அந்த காரை மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் துணிக்கடையில் வைக்க திட்டமிட்டு இருக்கின்றனர். அதற்காக கொண்டு வரப்பட்ட கார் ஈஸ்வரன் கோவில் அருகே வரும் போது ஸ்பீடு பிரேக்கர் அருகில் நின்றது. அதை சரி செய்யும் போது வெடித்துள்ளது. இதை சிலிண்டர் வெடி விபத்து என்று தமிழக முதல்வர் சொல்கின்றார்.
2022 ம் ஆண்டு பிப்ரவரி 7 ம் தேதி சத்தியமங்கலம் காட்டில் உமர்பாரூக் என்பவர் தலைமையில் 8 பேர் சேர்கின்றனர். அதில், முபினும் இருக்கின்றார். அந்த கூட்டத்தில் உமர்பாரூக் முடிவு பண்ணியபடி ஒவ்வொருவரும் செயல்படுகின்றனர். மார்ச் மாதம் 750 கிலோ அம்மோனியம் நைட்ரேட் வாங்குகின்றார். முபினின் இரண்டாவது டார்கெட் போலீஸ் கமிஷனர் அலுவலகம். முதல் அட்டாக் துணிக்கடை, இரண்டாவது அட்டாக் கமிஷனர் அலுவலகம்.
முதல் சம்பவம் முடிந்து 6 நாள் கழித்து அதே வண்டியை கொண்டு கமிஷனர் அலுவலகம் வெடிக்க வைக்கனும் என்பதுதான் அவர்கள் பிளான். முபின் 7 நிமிடம் வீடியோ ரெக்கார்ட் பண்ணி வைத்து இருக்கான். அந்த வீடியோ விரைவில் வெளிவரும். தீவிரவாதிகள் செய்து வரும் அதன் பெயர் பையத். முபின் அக்டோபர் 19 ம் தேதி பையத் எடுக்கின்றான். காவல் துறை நல்ல வேலை பாக்குறீங்க, வயிறு எரிந்து பேசுகின்றேன், முன்னாள் காவல் துறை என்ற அடிப்படையில் பேசுகின்றேன். இதுவரை இந்த வழக்கில் 18 பேரை NIA கைது செய்து இருக்கின்றனர். கோவைக்கு NIA கொண்டு வர பரிசீலனை செய்வதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று சொல்லி இருக்கிறார்.
சீமான், திருமாவளவன், தனியரசு போன்றவர்கள் ஓட்டு பிச்சைக்காக இருக்கின்றனர். மக்கள் விழிக்க வேண்டும்; மோடியின் நேரடி கட்டுப்பாட்டில் இந்த ஊர் இருக்கனும். நாங்கள் அமைதியை விரும்புபவர்கள், அமைதியா கைதாவோம். நரேந்திர மோடி கோவை வந்தால் கொன்றுவிடுவேன் என பாட்ஷா 2003ல் சொன்னார். ஆனால் மோடி கோவை வந்தார், ரோடு ஷோ நடத்திட்டு போயிட்டார்.
கிறிஸ்துமஸ் வந்தாலே உதயநிதிக்கு குதுகுலம் வந்துவிடும். நான் ஒரு இந்து என்று சொல்ல மட்டும் உதயநிதிக்கு வாய் வராது. மோடி கோவை குண்டு வெடிப்பில் உயிரிழந்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்தினார். அதில் இஸ்லாமியர்களும் அடக்கம். எங்களுக்கு இந்தியர், தமிழர் என்பது மட்டுமே அடையாளம்.
தமிழர்களின் மிகப்பெரிய வியாதி மறதி. இது இருக்கும் வரை ஓட்டு பிச்சை எடுப்பவன் வந்து கொண்டே இருப்பான். கோவை காவல் துறை நேர்மையா இருக்கனும், தயவு செய்து தவறான கட்டளையை யார் சொன்னாலும் அதை ஏற்க மறுங்கள்.
வேலூரில் பா.ஜ.க தொண்டன் கொலை தொடர்பாக இரண்டு பேரை காவல் துறை தாமதமாக கைது செய்து இருக்கிறது. காவல் துறை ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும். ஒருமுறை தொண்டன் கட்டுப்பாடு இழந்துவிட்டால் ஒன்றும் செய்ய முடியாது. கோவை மக்களின் மனசாட்சியாக இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது. காவல் துறை கடமையை சரியாக செய்ய வேண்டும். வரும் தேர்தலில் கோவைக்கு 6க்கு 6 பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்வாக வேண்டும். வானதி அக்காவுடன் இன்னும் 5 பேர் சட்டமன்றத்திற்கு செல்ல வேண்டும்” என்று பேசினார்.
இதனைத் தொடர்ந்து கருப்பு தின பேரணியில் ஊர்வலமாக செல்ல முயன்றனர். ஆனால் காவல்துறையினர் அவர்கள் செல்ல அனுமதி மறுத்து தடுத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. இதனைத் தொடர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் அவருடன் வந்தவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதனிடையே பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட பெண்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட அவர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், பின்னர் அவர்களும் கைதாகினர். அப்போது பேட்டி அளித்த வானதி சீனிவாசன், “இந்த நாட்டிற்கு எதிராக செயல்படுபவர்களுக்கு அரசியல் கட்சியினர் ஆதரவு கொடுக்க கூடாது என்பதை உணர்த்துவதற்காக இந்த பேரணி நடத்தப்பட்டது. அவர்களுக்கு அரசியல் கட்சியினர் ஆதரவு கொடுக்க கூடாது. இத்தனை உயிர்களை கொன்று குவித்தவருக்கு மன்னிப்பு கொடுக்க கூடாது. தீவிரவாதிகளை தியாகிகளாக சித்தரிப்பது என்பது கண்டிக்கத்தக்கது. அதற்கு அரசு ஒத்துழைப்பு அளிக்க கூடாது, தேச துரோகிகளுக்கு ஊர்வலம் நடத்த அனுமதி கொடுக்கும் இந்த அரசு, தேசத்தை நேசிப்பவர்களுக்கு ஊர்வலம் நடத்த அனுமதி அளிப்பதில்லை” என குற்றம் சாட்டினார்.
பாஜகவினர் நடத்திய கருப்பு தின பேரணி மற்றும் மறியல் சம்பவங்களால் காந்திபுரம் பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பரபரப்பான சூழல் நிலவியது.