இந்தியா
ரூ. 20 கொடுத்தா வழுக்கை தலையில் முடி.. இளைஞர்களை மோசடி செய்து லட்சங்களை சுருட்டிய நபர்

ரூ. 20 கொடுத்தா வழுக்கை தலையில் முடி.. இளைஞர்களை மோசடி செய்து லட்சங்களை சுருட்டிய நபர்
சதுரங்க வேட்டை படத்தில், ‘ஒருத்தன ஏமாத்தனும்னா, முதல்ல அவன் ஆசையை தூண்டனும்’ எனும் வசனம் வரும். சதுரங்க வேட்டை படம் வெளியாகி 10 ஆண்டுகளாகியும், இந்த டயலாக்குக்கு இன்னும் Value உண்டு என நிரூபித்துள்ளார் உத்தரப்பிரதேச மாநிலம், மீரட்டைச் சேர்ந்த சல்மான்.
ரூ.20 கொடுத்து, தான் தரும் எண்ணெய்யைத் தேய்த்தால், வழுக்கை தலையிலும், அடர்த்தியாக முடி வளரும் என்பதே அவரது அறிவிப்பு. வேலைவாய்ப்பு இன்மை உள்ளிட்ட பல பிரச்சனைகளை கடந்து, வழுக்கைத் தலையே இன்றைய இளைஞர்களின் பெரும் பிரச்சனையாக உள்ள நிலையில், சல்மான் வீட்டுமுன்பு அணி அணியாக திரண்டனர்.
தன்னிடம் வந்தவர்களுக்கு தலையில் பிரஷ் மூலம், தனது விசேஷ எண்ணெய்யைத் தேய்த்துவிட்டார் சல்மான். ஆனால், முடிதான் வளரவில்லை. அதேநேரத்தில் பலருக்கு தலையில் அரிப்பு மற்றும் அலர்ஜி ஏற்பட்டுள்ளது.
இதில், ஷதாப் என்பவர் போலீஸில் புகார் அளிக்க, சல்மானையும் அவரது இரு உதவியாளரையும் அள்ளிக் கொண்டு வந்தது காவல்துறை. விசாரணையில் முடி வளரும் என “புருடா” விட்டு, சல்மான் ஏதோ ஒரு எண்ணெயைப் பூசி வந்தது தெரியவந்தது.
உத்தரப்பிரதேசம் மட்டுமன்றி டெல்லி, ஹரியானா, உத்தராகண்ட் என பல இடங்களில் முகாம்கள் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சுருட்டியதும் அம்பலமானது. இதில் முக்கியமான ஹைலைட் என்னவென்றால், வழுக்கை தலையில் முடிவளரும் என கூறி எண்ணெய் விற்ற சல்மானுக்கே வழுக்கைத் தலைதான்.