இந்தியா
ரசாயன டேங்கர் மீது லாரி மோதி விபத்து.. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 14ஆக அதிகரிப்பு!

ரசாயன டேங்கர் மீது லாரி மோதி விபத்து.. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 14ஆக அதிகரிப்பு!
ஜெய்பூர்-அஜ்மீர் சாலையில் உள்ள பான்கிரோட்டா என்ற இடத்தில் ரசாயனம் ஏற்றி சென்ற டேங்கர் லாரி மீது மற்றொரு லாரி மோதியது. இதில் டேங்கர் வெடித்து தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தின் போது அருகில் சென்றுக்கொண்டிருந்த 30க்கும் மேற்பட்ட வாகனங்களிலும் தீப்பற்றியது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. 80 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 30 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி தீவிபத்து குறித்து பேசுகையில், சம்பவம் ஆழ்ந்த வருத்தத்தை அளிப்பதாகவும் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாகவும் கூறியுள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தீவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரண நிதியாக வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், ஜெய்ப்பூர் – அஜ்மீர் நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை பெட்ரோல் பங்க் ஒன்றின் அருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த எல்பிஜி டேங்கர் மீது லாரி ஒன்று மோதி விபத்து ஏற்பட்டதாக கூறியுள்ளது. மேலும், டேங்கரில் ரசாயனம் இருந்ததால் அதன் மீது லாரி மோதிய வேகத்தில் தீ பிடித்ததாகவும் டேங்கர், லாரியில் பிடித்த தீ அருகில் இருந்த பெட்ரோல் பங்க்-க்கும் பரவி பெரும் தீ விபத்தாக மாறியதாக தெரிவித்துள்ளது.
இதனிடையே, ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன்லால் சர்மா, சுகாதாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் கிம்சார் மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்தவர்களை சந்தித்தனர். அப்போது, காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு மருத்துவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் முதலமைச்சர் அறிவுறுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் கிம்சார், தீ விபத்தில் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டவர்களில் பாதி பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறியுள்ளார். பலியானவர்கள் குடும்பத்துக்கு ராஜஸ்தான் அரசு சார்பில் தலா 5 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் அறிவிக்கப்பட்டுள்ளது.