இந்தியா
குடியரசு தின அணிவகுப்பில் அலங்கார ஊர்தி நிராகரிப்பு? – தமிழ்நாடு அரசு மறுப்பு…

குடியரசு தின அணிவகுப்பில் அலங்கார ஊர்தி நிராகரிப்பு? – தமிழ்நாடு அரசு மறுப்பு…
டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்படும். குடியரசு தின விழாவையொட்டி, அன்றைய தினம் டெல்லி ராஜபாதையில் நடைபெறும் விழாவில், பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் கலாச்சாரங்களை குறிக்கும் மாதிரிகள் இடம்பெற்ற ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெறும்.
இந்நிலையில், டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டதாக வதந்தி பரப்ப வேண்டாம் என தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.
அதிமுக ஆட்சியில் ஆண்டுதோறும் குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி இடம்பெற்றதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், 2025ஆம் ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு அரசின் ஊர்தி இடம் பெறாததற்காக தமிழ்நாடு அரசுக்கும், அனுமதி வழங்காததற்கு மத்திய அரசுக்கும் கண்டனம் என பதிவிட்டு இருந்தார்.
இது குறித்து, தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகம், 2025ஆம் ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டதாக பரவும் தகவல் உண்மைக்கு புறம்பானது என தெரிவித்துள்ளது. மேலும், 2025ஆம் ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு அரசின் ஊர்தி பங்கேற்க இயலாது எனவும் கூறி உள்ளது.
குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க 15 மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் அலங்கார ஊர்திகள் சுழற்சி முறையில் தேர்ந்தெடுக்கப்படும் எனவும், 2024ஆம் ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு அரசின் ஊர்தி பங்கேற்றதால், இனி 2026ஆம் ஆண்டுதான் பங்கேற்க முடியும் எனவும் தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.