இந்தியா
பெரியாருக்கு பனையூரில் அஞ்சலி செலுத்திய விஜய்

பெரியாருக்கு பனையூரில் அஞ்சலி செலுத்திய விஜய்
பெரியாரின் 51வது நினைவு தினத்தை ஒட்டி, அவருடைய புகைப்படத்துக்கு தவெக தலைவர் விஜய் இன்று(டிசம்பர் 24) அஞ்சலி செலுத்தினார்.
திராவிட இயக்கத்தின் தலைவர் பெரியார் டிசம்பர் 24, 1973 ஆம் வருடம் காலமானார். அவர் இறக்கும் போது அவருக்கு வயது 94.
இன்று அவருடைய 51வது நினைவு தினத்தை ஒட்டி தமிழக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, எம்.பிகள் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில் தவெக தலைவர் விஜய் பனையூரில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் பெரியாரின் புகைப்படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் “சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை அகற்றி, சமத்துவம் மலர, பெண்களுக்குச் சம உரிமை கிடைக்க வாழ்நாள் முழுவதும் பெரும்பாடுபட்ட சுயமரியாதைச் சுடர் எங்கள் கொள்கைத் தலைவர் தந்தை பெரியாரின் 51ஆவது நினைவு தினத்தையொட்டி,
எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன். அறிவார்ந்த, சமத்துவச் சமுதாயம் அமைக்க, தந்தை பெரியார் வழிகாட்டிய உண்மையான சமூக நீதிப் பாதையில் பயணிக்க அனைவரும் உறுதியேற்போம்” என்று பதிவிட்டுள்ளார்.
கடந்த செப்டம்பர் 17 பெரியாரின் பிறந்த நாளான்று, சென்னை பெரியார் திடலில் உள்ள அவரது நினைவிடத்திற்கு நேரில் சென்று விஜய் மரியாதை செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
.