இந்தியா
வாஜ்பாய் 100-வது பிறந்தநாள்… திரவுபதி முர்மு, மோடி மரியாதை!

வாஜ்பாய் 100-வது பிறந்தநாள்… திரவுபதி முர்மு, மோடி மரியாதை!
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 100-ஆவது பிறந்தநாள் இன்று (டிசம்பர் 25) கொண்டாடப்படுகிறது.
வாஜ்பாயின் பிறந்தநாளை ஒட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “முன்னாள் பிரதமர் வாஜ்பாயிக்கு வீரவணக்கம்.
வலிமையான, வளமான மற்றும் தன்னம்பிக்கை கொண்ட இந்தியாவை உருவாக்க அவர் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். அவரது தொலைநோக்கு பார்வையும், வளர்ச்சியடைந்த இந்தியாவவை உருவாக்குவதற்கான உறுதிப்பாடும் எங்களுக்கு தொடர்ந்து பலம் அளிக்கும்” என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “சிறந்த பேச்சாளரும், கவிஞருமான வாஜ்பாய், சுதந்திர இந்தியாவின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கொள்கைகளை வடிவமைத்ததில் முக்கியப் பங்கு வகித்தவர்.
பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சர், நாடாளுமன்ற நிலைக் குழுக்களின் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் எனப் பல பதவிகளிலும் திறம்படப் பணியாற்றியவர்.
இந்தியாவை அணு ஆயுத நாடுகளில் ஒன்றாக உருவாக்கி, வல்லரசுகளின் வரிசையில் இடம்பெறச் செய்தவர். கார்கில் போரில் எதிரிகளைத் தோற்கடித்து, நம் நாட்டின் வலிமையை வெளிப்படுத்தியவர்.
சமத்துவம், சமூக நீதி, பெண்கள் முன்னேற்றம் ஆகியவற்றிற்காக அயராது உழைத்தவர். அவரது தலைமையும், தொலைநோக்கு பார்வையும் கோடிக்கணக்கான நம் நாட்டு மக்களை இன்றும் வழி நடத்துகிறது.
தேசத்திற்கான அவரது பங்களிப்பு என்றும் மறக்க முடியாதது. தேசத்தின் மீது கொண்ட அன்பால், நாட்டிற்காக அவர் ஆற்றிய தன்னலமற்ற சேவைகளைக் கருத்தில் கொண்டு, வாஜ்பாய் பிறந்த தினம், கடந்த 2014 ஆம் ஆண்டு தேசிய நல்லாட்சி தினமாக அறிவிக்கப்பட்டுக் கொண்டாடப்பட்டு வருகிறது. வாஜ்பாய் அவர்களது புகழைப் போற்றி வணங்குகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.