நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 26/12/2024 | Edited on 26/12/2024

சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் விஷ்ணு தியோ சாய் தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டைப் போலவே, இந்த மாநிலத்தில் உள்ள திருமணமான பெண்களுக்கு மஹ்தாரி வந்தன் யோஜனா திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 வங்கி கணக்கில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் தகுதியான பயனாளிகள் குறித்து பொறுப்பு அதிகாரி அதிகாரிகள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில், இந்த தொகை டெபாசிட் செய்யப்பட்ட கணக்கு ஒன்று பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் பெயரில் இருப்பது தெரியவந்தது. இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், சத்தீஸ்கரின் பஸ்தர் பகுதியில் உள்ள தலூர் கிராமத்தைச் சேர்ந்த வீரேந்திர ஜோஷி என்பவர் சன்னி லியோன் பெயரில் போலி கணக்கை உருவாக்கி ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்தது. 

Advertisement

இதனையடுத்து, வீரேந்திர ஜோஷி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகை பெயரில் போலி கணக்கை உருவாக்கி அரசு திட்டத்தில் மோசடி செய்த விவகாரம், அம்மாநிலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சர்ச்சை குறித்து சன்னி லியோன் பேசியுள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “எனது பெயரை​யும் அடையாளத்​தை​யும் தவறாகப் பயன்​படுத்தி மோசடி​யில் ஈடுபட்​டிருப்பது துரதிர்​ஷ்ட​வச​மானது. பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும், பயன்பெறவும் உருவாக்கப்பட்ட திட்டம் இவ்வாறு தவறாகப் பயன்படுத்தப்படுவதும், தவறாக சித்தரிப்பதும் வருத்தமளிக்கிறது. இந்தச் செயலை நான் வன்மையாகக் கண்டிப்பதோடு, இந்த விவகாரத்தை முழுமையாக ஆராய்ந்து தீர்வு காணும் அதிகாரிகளின் முயற்சிகளுக்கு முழு ஆதரவைத் தருமாறு தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.