Connect with us

சினிமா

விமர்சனம்: பரோஸ்!

Published

on

Loading

விமர்சனம்: பரோஸ்!

இந்தியாவில் ‘மை டியர் குட்டிச்சாத்தான்’ தொடங்கி நிறைய 3டி படங்கள் வந்திருக்கின்றன. அவற்றில் பெரியவர்களுக்கான படங்களும் உண்டு. சாதாரணமாகப் பார்க்கும் படங்களைக் காட்டிலும், கதை நிகழும் களங்களுக்கு நம்மை அழைத்துச் செல்லும் உணர்வை ஒரு படி அதிகமாகக் காட்டுவதே அப்படங்களின் சிறப்பு. அதுவும் விஎஃப்எக்ஸ் நுட்பங்கள் சிறப்பாக அமையப்பெற்ற ‘அவதார்’ போன்ற படங்கள் 2டி, 3டி என்று இரு வகையிலும் நல்லதொரு அனுபவத்தைத் தந்தன.

அந்த வரிசையில் நம்மூரில் 3டி படங்கள் வெளியாகுமா என்ற கேள்விக்கான பதிலாக, நடிகர் மோகன்லால் ‘பரோஸ்’ தந்திருக்கிறார். இது, அவர் இயக்கியிருக்கும் முதலாவது திரைப்படம். அதனால், இப்படம் கூடுதல் சிறப்பைப் பெற்றிருக்கிறது.

Advertisement

சரி, ‘பரோஸ்’ தரும் 3டி அனுபவம் எப்படி இருக்கிறது?

ஒரு பூதம். அது ஒரு மன்னருக்குச் சொந்தமான புதையலைக் காத்து வருகிறது. அந்த மன்னரின் குடும்பத்தினரிடம் அதனை ஒப்படைத்துவிட்டால், அது தனது பிறவிக்கடனை அடைத்துவிடும். ஆனால், அது நிகழ்வதாக இல்லை.

நானூறு ஆண்டுகள் கழித்து, அந்த மன்னர் குடும்பத்தின் பதிமூன்றாவது தலைமுறையைச் சேர்ந்த சிறுமி ஒருவர் அந்த பூதம் இருக்குமிடத்திற்கு வருகிறார். அதன்பின் என்ன நடந்தது? அவரது வரவால் அந்த பூதம் விடுதலை அடைந்ததா என்று சொல்கிறது ‘பரோஸ்’.

Advertisement

கோவாவில் இக்கதை நிகழ்வதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதனால், போர்ச்சுக்கீசிய மன்னர், அவரது செல்வம், குடும்பம், கலாசாரம் என்று பல விஷயங்கள் இதில் காட்டப்பட்டிருக்கின்றன. அந்த மன்னரின் தீவிர விசுவாசி ஒருவர் தான் அந்த பூதமாக மாறியிருக்கிறார். அது எப்படி என்பது இடையிடையே சொல்லப்பட்டிருக்கிறது. அவரது பெயரே ‘பரோஸ்’.

இப்படியொரு கதையில், புதையலை அபகரிக்கும் வில்லன்கள் வேண்டுமே? அவர்களும் இதில் இருக்கின்றனர். ஆனால், வில்லத்தனத்தை எந்த அளவுக்கு வலுவாகக் காட்ட வேண்டுமோ, அதற்கு நேரெதிராக அமைந்திருக்கிறது வில்லன்களின் இருப்பு.

திரைக்கதை முழுக்கவே அந்த பூதத்தையும் அந்தச் சிறுமியையும் சுற்றி வருகிறது. இதர பாத்திரங்கள் ‘அம்போ’வென விடப்பட்டிருக்கிறது. அது, இப்படத்தில் நிறைந்திருக்கும் பிரமாண்டத்தைக் கடுகளவாக மாற்றிவிடுகிறது.

Advertisement

மோகன்லால் நடிப்பைப் பற்றிச் சிலாகிப்பது ‘க்ளிஷே’ ஆகிவிடும். அதனால், தமிழ் டப்பிங்கில் அவரது உச்சரிப்பு மலையாள வாடை இல்லாமல் இருப்பது இப்படத்தின் சிறப்புகளில் ஒன்று. அவர் மட்டுமல்லாமல், இதர நடிகர்களின் குரலும் பொருத்தமாக வெளிப்பட்டுள்ளது. டப்பிங்கை கவனித்திருக்கும் ஆர்.பி.பாலாவுக்கு அந்த பெருமை சாரும்.

சிறுமி இஸா மற்றும் இஸபெல்லாவாக வரும் மாயா ராவ் வெஸ்ட் மனம் கவர்கிறார். எதிர்காலத்தில் ஒரு நாயகி ஆவாரா என்று சொல்ல முடியாதபோதும், நல்லதொரு ஆளுமையாக வருவார் என்ற நம்பிக்கையைத் தருகிறது அவரது திரை இருப்பு.

இந்தப் படத்தில் குரு சோமசுந்தரம் மட்டுமே நமக்குத் தெரிந்தவராக இருக்கிறார்.
பெரும்பாலானவர்கள் வெளிநாட்டவர்களாக இருப்பதால், கதாபாத்திரங்களைக் கவனித்து ஒன்ற முடியவில்லை. அதற்கான அவகாசத்தையும் திரைக்கதை தரவில்லை.

Advertisement

இந்தப் படத்தின் மிகப்பெரிய ப்ளஸ், சந்தோஷ்சிவனின் ஒளிப்பதிவு. ஒரு 3டி படத்தில் காட்சிகளில் இடம்பெறும் களங்கள், கதாபாத்திரங்கள், அவற்றின் அசைவுகள், இவையனைத்தையும் மையப்படுத்திய கேமிரா கோணங்களோடு விஎஃப்எக்ஸும் முப்பரிமாணத்தை அடிக்கோடிட்டுக் காட்டுவதில் முக்கியப் பங்கு வகிக்கும்.

அது போக ஆடை வடிவமைப்பு, கலை வடிவமைப்பு, ஒப்பனை என்று பலவற்றையும் சரியாக ஒருங்கிணைத்து, அவை எப்படித் திரையில் வெளிப்படுவது என்று ஒரு ‘கணக்கை’ தெளிவாக வரையறுக்க வேண்டும். இந்தப் படத்தில் அது சாத்தியப்படுத்தப்பட்டிருக்கிறது.

ஒரு இயக்குனராக, இது மோகன்லாலுக்குப் பெருமை சேர்க்கும் விஷயமாகும். ஏனென்றால், சமீபத்தில் வந்துபோன பல 3டி படங்களில் தொடக்கமும் கிளைமேக்ஸும் மட்டுமே முப்பரிமாணத்திற்கு அர்த்தம் சேர்க்கும்விதமாகப் படைக்கப்பட்டிருக்கும். இடைப்பட்ட காட்சிகளை படக்குழு மறந்து போயிருக்கும். இதில் அந்தக் குறை இல்லை. அதற்காகவே தயாரிப்பு வடிவமைப்பைக் கையாண்ட சந்தோஷ் ராமனையும், விஎஃப்எக்ஸ் மேற்பார்வையாளர் பிரைன்லி கேட்மேனையும் தனியாகப் பாராட்ட வேண்டும்.

Advertisement

அதே நேரத்தில், காட்சிகள் சுவாரஸ்யமாக இருக்கின்றனவா என்பதில் கவனம் செலுத்த மறந்திருக்கிறார் மோகன்லால்.

நடிகர் மோகன்லாலை மனதில் வைத்து, மாயா ராவ் வெஸ்ட் சம்பந்தப்பட்ட காட்சிகளை மட்டுமே மீண்டும் மீண்டும் காட்டுவதாகத் திரைக்கதை அமைத்திருப்பது இப்படத்தின் மைனஸ்.

இதில் படத்தொகுப்பாளர் பி.அஜித்குமார் மற்றும் சண்டைக்காட்சி வடிவமைப்பாளர்கள், ஒலி வடிவமைப்பாளர்கள், ஒப்பனையாளர் என்று பலரது உழைப்பு, இயக்குனரின் 3டி கனவுக்கு வலுவூட்டும் விதமாக உள்ளது.

Advertisement

இளம் கலைஞர் லிடியன் நாதஸ்வரம் இதில் மூன்று பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார். அவரது திரை அறிமுகமாக இந்தப் படம் அமைந்துள்ளது.
மார்க் கிலியனின் பின்னணி இசை காட்சிகளைத் தாங்கி நிற்கிறது. ஆங்கில மேடை நாடகம் பார்க்கும் உணர்வைத் தருகிறது (இது நிச்சயம் பாராட்டுதான்).

உண்மையைச் சொன்னால், இது குழந்தைகளுக்கான ‘அட்வெஞ்சர் பேண்டஸி’ கதை. இதில் பெரியோர்கள் பார்க்கும் வகையில் சென்டிமெண்ட் காட்சிகள், ‘எல்லோரும் சமம்’ எனும் சமத்துவ வசனங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

ஆனால், சுமார் 3 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளே இப்படத்தின் இலக்கு என்பதை மறந்திருக்கிறார் மோகன்லால். ஒரு காட்சியில், அவர் அரை நிர்வாணமாக இருப்பது போன்று சித்தரிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கதையில் அப்படியொரு ‘டீட்டெய்லிங்’ தேவையே இல்லை.

Advertisement

இதில் வூடு எனும் அனிமேஷன் பாத்திரம் மோகன்லாலுடன் பயணிப்பதாகக் காட்டப்பட்டிருக்கிறது. அதன் பேச்சு, உடல்மொழி ஆகியவற்றைச் சிறப்பாக வடிவமைத்திருக்கின்றனர்.

அதே போன்ற சுவாரஸ்யத்தை மாயா ராவ் கதாபாத்திரத்தின் அருகாமையில் நிகழ்வதாக அமைத்திருந்தால், இதர பாத்திரங்களுக்கு இப்படத்தில் என்ன முக்கியத்துவம் என்பதைச் சரியாகத் தீர்மானித்திருந்தால், திரைக்கதை இன்னும் செறிவு பெற்றிருக்கும்.

அனைத்துக்கும் மேலாக, இப்படத்தின் யுஎஸ்பியாக 3டி நுட்பம் இருக்க வேண்டுமென்பதை மனதில் வைத்தே முன்தயாரிப்பு மற்றும் பின்தயாரிப்பு பணிகள் நடைபெற்றிருக்கின்றன. அதன் விளைவாக, ‘3டி படம்னா இப்படியிருக்கணும்’ என்று நாம் கமெண்ட் அடிக்கும் வகையில் பிரமிப்பைத் தருகிறது.

Advertisement

இந்தக் ‘கூவல்’ உண்மையா இல்லையா என்பதை அறியவாவது, தியேட்டருக்குச் சென்று ஒருமுறை ‘பரோஸ்’ படத்தைக் காண வேண்டும். மோகன்லால் என்ற பெருங்கலைஞன் வரவேற்பைக் குவிக்கும் தனது நடிப்பாற்றலைத் தள்ளிவைத்துவிட்டு, இயக்குனர் நாற்காலியில் அமர்ந்ததற்கான மரியாதையாகவும் அது இருக்கும்…!

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன