இலங்கை
‘தூய இலங்கை’ வேலைத்திட்டம் ஆரம்பம்!

‘தூய இலங்கை’ வேலைத்திட்டம் ஆரம்பம்!
“தூய இலங்கை” (க்ளீன் ஶ்ரீலங்கா) தேசிய வேலைத் திட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் நேற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
புதிய வருடத்தின் முதல்நாளான நேற்று, ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற ‘தூய இலங்கை’ வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வுக்கு நிகராக அனைத்து அரச நிறுவனங்களிலும் உத்தியோகபூர்வ ஆரம்ப நிகழ்வுகள் நடைபெற்றன. நிகழ்வில் ‘தூய இலங்கையை’ உருவாக்குவதற்கான உறுதியுரையை அனைத்து அரச உத்தியோகத்தர்களும் எடுத்துக்கொண்டனர்.
அரச துறை மற்றும் தனியார் துறையினரால் முன்னெடுக்கப்படும் இந்த வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வுகளை அனைத்து அரசு மற்றும் தனியார் இலத்திரனியல் அலைவரிசைகள் ஊடாக ஒளிபரப்புவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதியின் செயலாளர் என்.எஸ்.குமாநாயக்க, பதில் பொலிஸ்மா அதிபர் மற்றும் முப்படைகளின் தளபதிகள் உட்பட 18 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணி ஒன்று அணிமையில் உருவாக்கப்பட்டுள்ளது.
‘தூய இலங்கை’ திட்டத்தைத் திட்டமிடல், வழிகாட்டுதல், நடைமுறைப்படுத்துதல், முன்னேற்றத்தை மீளாய்வு செய்தல் மற்றும் குறிப்பிட்ட கால எல்லைக்குள் நிறைவு செய்தல் என்பன இந்த ஜனாதிபதி செயலணியின் பொறுப்புகள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் தேசிய வேலைத்திட்டம் இலங்கையின் சுற்றுச்சூழல் மற்றும் சமூக ஆரோக்கியத்தை மேம்படுத்தும் முயற்சி என்று கருதப்படுகின்றது.