இந்தியா
கேஸ் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து : பள்ளிகளுக்கு விடுமுறை!

கேஸ் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து : பள்ளிகளுக்கு விடுமுறை!
கோவை உப்பிலிப்பாளையம் மேம்பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த கேஸ் டேங்கர் லாரி விபத்தில் சிக்கியதை அடுத்து முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக அதனை சுற்றியிருக்கும் பள்ளிகளுக்கு இன்று (ஜனவரி 3) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் கொச்சி பகுதியில் இருந்து கோவை பீளமேடுக்கு எல்பிஜி கேஸ் ஏற்றி வந்த பாரத் நிறுவன டேங்கர் லாரி சென்று கொண்டிருந்தது. உப்பிலிபாளையம் மேம்பாலத்தின் மீது ஏறி திரும்பும் பொழுது லாரியிலிருந்து டேங்கர் மட்டும் கழன்று விழுந்துள்ளது. இதனால் டேங்கரில் சேதம் ஏற்பட்டு கேஸ் வெளியேறி வருகிறது.
அதிகாலை 3 மணியளவில் நடந்த விபத்தை அறிந்த தீயணைப்பு துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று தனியாக சாலையில் கிடக்கும் டேங்கரை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
டேங்கரில் இருந்து வெளியேறும் கேஸ் காற்றில் கலப்பதை தடுக்க தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீச்சி அடித்து வருகின்றனர். மேலும், அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, பொறியாளர்கள், காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக மேம்பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
கடந்த 5 மணி நேரமாகியும் கேஸ் தொடர்ந்து வெளியேறி வரும் நிலையில், விபத்து நடந்த இடத்திற்கு 500 மீட்டர் சுற்றளவில் அமைந்திருக்கும் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அறிவித்துள்ளார்.
இந்த சம்பவம் அதிகாலையில் நடந்ததால், பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.