Connect with us

விளையாட்டு

டெஸ்ட்டில் ஓரம் கட்டப்பட்ட ரோகித்: ஒருநாள் அணியின் அடுத்த கேப்டன் யார்?

Published

on

Hardik Pandya to lead India in Champions Trophy 2025 if BCCI removes Rohit Sharma as captain Tamil News

Loading

டெஸ்ட்டில் ஓரம் கட்டப்பட்ட ரோகித்: ஒருநாள் அணியின் அடுத்த கேப்டன் யார்?

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்தியா ஒரு வெற்றி, இரண்டு தோல்விகள், ஒரு டிரா என பின்தங்கிய நிலையில் இருக்கிறது. பெர்த்தில் நடந்த தொடக்கப் போட்டிக்கான அணியை வழிநடத்திய பும்ரா வெற்றிக்கு அழைத்துச் சென்றார். ஆனால், அதன்பிறகு நடந்த  3 போட்டிகளுக்கான அணியை இந்திய கேப்டன் ரோகித் வழிநடத்தினார். அடிலெய்டில் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி, பிரிஸ்பேன் போட்டி டிரா, மெல்போர்னில் 184 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி என இந்தியா பெரும் பின்னடைவை சந்தித்தது. கேப்டனாக அணியை திறம்பட வழிநடத்திட தவறிய ரோகித், வீரராகவும் பெரிதும் சோபிக்கவில்லை. இந்த தொடரில்  ஐந்து இன்னிங்ஸ்களில் ஆடிய அவர் வெறும் 31 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். மேலும், அவரது கடைசி எட்டு டெஸ்ட்களில் சராசரி 10.93 ஆக உள்ளது.மெல்போர்னில் பெற்ற தோல்வியைத் தொடர்ந்து, கேப்டன் ரோகித் மீது அதிருப்தி நிலவியது. குறிப்பாக ட்ரெஸ்ஸிங் ரூமில் நடந்த உரையாடல்கள் ஊடகங்களுக்கு கசிந்தன. இதனிடையே,  இந்திய அணி தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் தேர்வாளர்களின் தலைவர் அஜித் அகர்கர் ஆகியோரிடம் ரோகித் சிட்னியில் நடந்து வரும் 5-வது மற்றும் கடைசி போட்டியில் இருந்து விலகுவதற்கான தனது முடிவை தெரிவித்தார். இதையடுத்து, இப்போட்டிக்கு கேப்டனாக பும்ரா செயல்பட்டு வருகிறார். இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்து பார்டர் – கவாஸ்கர் கோப்பையை தக்கவைத்துக்கொள்ளும். அத்துடன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பிலும் நீடிக்கும். ஒருவேளை இந்தியா டிரா அல்லது தோல்வியுற்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி கனவு தகர்ந்துவிடும். அதேநேரத்தில், அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சிக்கான இந்திய அணியில்  ரோகித் இடம் பெற தேர்வாளர்கள் விரும்பவில்லை. அதனால், ரோகித் இனி வரும் காலங்களில் டெஸ்ட் அணியில் இருந்து ஓரம் கட்டப்பட அதிக வாய்ப்புள்ளது. பும்ரா அணியின் கேப்டனாக தொடரலாம் . டி20 உலகக் கோப்பையை இந்தியா கைப்பற்றிய பிறகு, கடந்த ஜூன் மாதம் சர்வதே டி20 போட்டியில் இருந்து ரோகித் ஓய்வு பெற்றார். மேலும் ஒரு மாதம் கழித்து சூர்யகுமார் யாதவ் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.இந்திய மண்ணில் நடந்த ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் இந்தியா இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி கண்டு கோப்பையை பறிகொடுத்தது. தற்போது, டெஸ்ட்டில் முக்கிய தொடராக பார்க்கப்படும் அதே ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் – கவாஸ்கர் தொடரில் இந்தியா பெரும் பின்னடைவை கண்டுள்ளது. அதனால், ரோகித் அணியில் இருந்து கழற்றி விடப்பட்டுள்ளார். ரோகித் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து இன்னும் அறிவிக்காத நிலையில், வரவிருக்கும் ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபிக்கான கேப்டன்சி விருப்பங்கள் குறித்து பி.சி.சி.ஐ ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது. ஒருநாள் கேப்டனாக ரோகித்தின் பங்கு ஆய்வுக்கு உட்பட்டால் அல்லது அவரின் சுமையை குறைக்க தேர்வாளர்கள் முடிவு செய்தால், ஹர்திக் பாண்டியா அடுத்த கேப்டனாக உருவாகலாம் என்றும் கூறப்படுகிறது. ஹர்திக் ஒயிட் -பால் கிரிக்கெட்டில் இந்திய அணியை வழிநடத்திய அனுபவம் கொண்டவர். அத்துடன், இந்திய டி20 அணி கேப்டன் சூரியகுமார் யாதவ், ஒருநாள் போட்டிகளில் பெரிதும் சோபிக்கவில்லை. இதேபோல், சுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் போன்ற வீரர்கள் ரோகித் இடத்திற்கு மாற்று வீரர்களாக மட்டுமே பார்க்கப்படுகிறார்கள். இந்திய அணியை வழிநடத்திட போதிய அனுபவம் அவர்களுக்கு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை ரோகித் தனது ஓய்வு முடிவை சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு  முன் அறிவித்தால், அடுத்த கேப்டனாக ஹர்திக் பாண்டியா அறிவிக்கப்படலாம். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன