Connect with us

இலங்கை

யாழ் தீவுகள் உருவான வரலாறு ; ஆய்வு ரீதியான கண்ணோட்டம்

Published

on

Loading

யாழ் தீவுகள் உருவான வரலாறு ; ஆய்வு ரீதியான கண்ணோட்டம்

இலங்கை தீவு இந்து சமுத்திரத்தின் முத்து என்று வர்ணிக்கப் படுகின்றது. இந்த சிறுதீவு நாடு இன்று உலகம் விரும்பும் மிக பெரிய சொத்தாகவும் திகழ்கின்றது. இந்த முத்தான இலங்கை தீவு எப்பொழுது தீவாக உருவாகியது என்பது பற்றிய ஒரு தெளிவான உறுதிப்படுத்தும் கருத்து சமூகவலைத்தளப்பதிவில் வெளியாகியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் இப்பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

Advertisement

பல வரலாற்று ஆசிரியர்கள் கடல் அழிவினால் இந்தியாவில் இருந்து பிரிந்தது என்ற கருத்தையும், கடல் அழிவால் குமரிகண்ட அழிவின் பின்னர் தீவானது இலங்கை என்ற கருத்தும் பலரால் முன்வைக்கப் படுகின்றது.

1898 இல் அத்திலாந்து சமுத்திரம் என்ற ஆய்வுநூல் எழுதிய மேலைத்தேச ஆய்வாளர் பெர்டினண்ட் கித்டேல் குறிப்பிட்டுள்ள கருத்தின்படி 11481 ஆண்டுகளுக்கு முன்னம் மிகப்பெரிய கடல் அழிவு வந்தது அந்த கடல் அழிவின் பின்னரே பல நாடுகள் புதிதாக உருவாகியது என்று அவர் கருத்தொன்றை முன்வைத்து சென்று இருக்கின்றார்.

இதே கருத்தை பேரறிஞர் எலியட் என்பவரும் lost lemuria /லொஸ்ட் லெமுரியா /என்ற நூலில் மேற்கோள் காட்டி இருக்கின்றார். எனவே இரண்டும் சமகாலத்தில் ஏற்பட்ட ஒரே மிக பெரும் கடல் அழிவாக இருக்கலாம்.

Advertisement

அத்திலாந்து சமுத்திரம் எழுதியவரின் கருத்தின்படி எனது கணிப்பு இன்றைக்கு/2013/ 11596 வருடங்களுக்கு முன்னம் அந்த கடல் அழிவு வந்ததாயின் அதுவே இன்றைக்கு சர்சைக்கு உரிய விடயமாக இருக்கும் முற்காலத்தில் இருந்ததாக பல ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தும் இரு பெரும் கண்டங்களான அத்லாந்திக் மற்றும் குமரிகண்ட கடல் அழிவாக கருத இடமுண்டு.

இந்த கடல் அழிவில் இந்த கண்டங்களில் பெரும் பகுதி கடலில் மூழ்கிப்போக உலகில் பல புதிய சிறிய நாடுகள் தோன்றியதாகக் கூறப்படுகின்றது. அவ்வாறே இலங்கையும் இந்தியாவும் குமரி கண்டத்தில் இருந்து தனியாக பிரிந்தது என்று கருதலாம். அதாவது கி மு 9583 இல் இலங்கையும் இந்தியாவும் குமரிகண்ட பகுதிகளின் அழிவின் பின்னர் பிரிந்தது என்று ஒரு கருத்தை முன்வைக்கலாம்.

இதுவே புராணங்கள் கூறும் ஊழி காலத்தில் ஏற்பட்ட பெரும் கடல் அழிவு என்றும் நாம் கூறலாம். இன்றைய யதார்த்தவாதிகளும் ஆன்மீக கருத்துக்களை எதிர்ப்பவர்களும் புராணங்கள் இதிகாசங்கள் முழுமையான புனைவுகள் என்று கடினமான எதிர்கருத்துக்களை முன்வைக்கும் அதேவேளை நாசா விஞ்ஞானிகளும் மேலைத்தேச ஆய்வாளர்களும் புராணங்களை தங்கள் மொழிகளில் மொழி பெயர்த்து அதில் உள்ள கருத்துக்களை ஆய்வு செய்கின்றார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

Advertisement

புராண வரலாற்றில் முன்னொரு காலத்தில் வாயுபகவானுக்கும் ஆதிசேஷனுக்கும் சண்டை நடந்ததாகவும் அதில் மேரு மலையின் சிகரம் வாயுபகவானால் பெயர்க்கபட்டு கடலில் வீசப்பட்டதாகவும் கடலில் வீசப்பட்ட இடத்தில் இலங்கை தோன்றியதாகவும் புராணம் கூறுகின்றது.

பெளத்தறிவு ரீதியாக எனது பார்வையில் சிந்தித்து பார்க்கையில் வாயு பகவான் காற்றோடு சம்பந்தப் பட்டவர், ஆதிசேஷன் நாகலோகத்து கடலோடு சம்பந்தப்பட்டவர். எனவே காற்றும் கடலும் அகோர தாண்டவம் ஆடி குமரி கண்டத்தில் இருந்த மகாமேரு மலை பெயர்க்கப்பட்டு தண்ணீரில் மூழ்கிய பகுதியின் மிச்சம் இலங்கையாக இருக்கலாம். மகேந்திர மலை, மணி மலை என்பன மிகப்பெரிய மகாமேரு மலையின் தொடர் மலையின் சிகரங்களாக இருக்கலாம்.

புராணங்கள் கூறும் தென் கைலாயம் என்பதும் இலங்கை தான் என்பது பல வரலாற்று ஆசிரியர்களின் கூற்று. எனவே இந்த நிகழ்வு நடந்தது ஆய்வாளர்கள் குறிப்பிடும் கூற்றுப்படி எனது /2013/கணிப்பில் இன்றைக்கு கி மு 9583 வருடங்களுக்கு முன் நடந்து இருக்கலாம்.
கி மு 9583 இல் உருவாகி சூரன் ராவணன் ஆண்ட இலங்கையில் சிறு தீவுகள் இருந்ததாக வரலாற்று குறிப்புக்கள் இல்லை.

Advertisement

இலங்கையின் வரலாற்றை முதல் முதலில் கந்த புராண வரலாற்றுக் குறிப்பில் தான் அறியப்படுகின்றது. பலர் இவை கற்பனை என்று வாதிட்டாலும், கந்தபுராணத்தை ஆய்வுசெய்து விளக்கவுரைகள் எழுதிய தமிழ் பண்டிதர்கள் அந்த கதையில் பல உண்மைகள் இருப்பதாகவே இதுவரை கருத்து கூறி இருக்கின்றார்கள்.

அந்தவகையில் அவர்கள் கருத்துபடி கந்தபுராண வரலாறு நடந்ததாக கருதப்படும் காலம் அண்ணளவாக, கி மு 9000 ஆக இருக்கலாம் என்று பண்டிதமணி சின்னதம்பி, பண்டிதமணி கணபதிபிள்ளை, பண்டிதர் ஸ்ரீலஸ்ரீ செந்திநாதையர் போன்றவர்கள் தங்கள் வரலாற்று குறிப்புக்களில் கூறி இருக்கின்றார்கள்.

இலங்கை என்று ஒரு தனிநாடும் முதன் முதலில் கந்தபுராண வரலாறு நடந்ததாக கூறப்படும் காலத்தில் தான் வருகின்றது.

Advertisement

சூரன் அரசாண்டதாக கூறப்படும் இலங்கையின் தலை நகராக மகேந்திர மலை தான் குறிப்பிடப்படுகின்றது.
சூரனுடைய மனைவியாக வரும் பதும கோமளை, மணிமலை நாகர்குல இளவரசி என்றே கூறப்படுகின்றது. மணிமலை வடகடலில் மூழ்கிய ஒரு மலையாக வரலாற்றில் கருதப்படுகின்றது அப்படியானால் ஈழத்தில் வட பகுதியை நாகர்கள் ஆண்டார்கள் என்ற கருத்தும் இங்கே முன்வைக்கப் படுகின்றது.

ஆனால் இந்த மகேந்திரமலை இன்று இல்லை அது அம்பாந்தோட்டைக்கு கீழ் கடலில் மூழ்கிவிட்டதாக கருதப்படுகின்றது. மணிமலை என்ற ஒரு மலை இன்றைய கீரிமலை சார்ந்த பிரதேசம் என்று சிலர் கருத்து கூறி இருக்கின்றார்கள். உண்மையில் மணிமலையின் எச்சமாக கீரிமலை இருக்கலாம்.

அதேவேளை இன்றைய நயினாதீவின் தென்கிழக்கு முனையின் உயரமான நிலப்பகுதி பகுதி மலை அடி என்றே காலம் காலமாக அழைக்கப்பட்டு வருகின்றது. அதை அண்மித்த காட்டு பகுதி மலையன்காடு என்ற பெயரிலும் அழைக்கபடுகின்றது. இதையும் ஒரு சிறு குறிப்பாக முன்வைக்கின்றேன்.

Advertisement

அத்தோடு இந்த மலை அடியை அண்மித்த அடுத்த தீவான புங்குடுதீவை கந்தபுராணத்தில் கிரவுஞ்சம் என்ற பெயரில் அழைகின்றார்கள் அதுவும் மலை சம்பந்தபட்ட ஒரு பெயராகும். எனவே மணிமலையும் நீண்டதொரு மலைத் தொடராக நாகநாட்டில் இருந்து இருக்கலாம்.
அடுத்து சங்ககால வரலாறுகளில் யாழ் குடாநாடு மணிபல்லவம் என்று அழைக்கப்பட்டது என்று கருத்துக்கள் இருக்கிறது.

மணிபல்லவம் என்பதற்கு சங்ககால வியாபாரிகளுக்கு நவமணிகள் கிடைத்த இடம் என்பதும் ஒரு காரண பெயர் என்றும் குறிப்பிடுகின்றார்கள். அதேவேளை மணிமேகலை காப்பியம் சொல்லும் மணிபல்லவம் நயினாதீவு தான் என்பதில் பல உறுதியான ஆதாரங்கள் இருக்கிறது. அதை இந்த கட்டுரையில் யாழ் தீவுகள் பிரிந்ததாக நான் முன்வைக்க போகும் கால்பகுதி மேலும் நிரூபிகின்றது.

அதனால் தீவுகள் பிரிந்தபின்னர் எழுந்த இலக்கியங்களில் வரும் மணிபல்லவம் நயினாதீவு என்று கொள்ளலாம். ஆனால் நாகதீபம் என்று நாகர்கள் ஆண்ட இடம் ஈழத்தின் வடபகுதி முழுவதையும் குறிக்கும்.

Advertisement

தீவுகள் பிரிவதற்கு முன்னர் எங்காவது இலக்கியத்தில் மணிபல்லவம் என்று குறிப்பிட்டு எழுதப்பட்டு இருந்தால் அந்த முழுமையான வரலாறும் இன்றைய நயினாதீவுக்கு சொந்தமானது அல்ல.

எமது பல வரலாற்று நூலாசிரியர்கள் /சப்த /ஏழுதீவுகள் என்ற கருத்தை கொண்டு இருக்கின்றார்கள். ஆரம்பத்தில் ஏழு என்று எழுதியவர்கள் தவறாக எழுதி இருக்க மாட்டார்கள் என்பதால் முதல் ஏழாக பிரிந்து பின்னர் மண்டை தீவு எட்டாவது தனித் தீவாக பிரிந்து இருக்கலாம். கடல் பிரிக்கும் தூர அளவுகளை வைத்து பார்க்கும் பொழுது இது சாத்தியமானது.

கச்சை தீவு 1974 வரை இந்தியாவின் இராமநாதபுரம் சேதிபதியின் சொத்தாக இருந்ததால் யாழ்தீவுகள் கணக்கில் வராமல் இருந்து இருக்கலாம்.

Advertisement

எனவே இன்றும் தீவுகள் ஏழு என்று தொடர்ந்தும் நூல்களில் எழுதுவதை தவிர்த்து கண்முன்னே இருக்கும் மண்டைதீவையும் 1974 இல் சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் இலங்கையின் சொத்தாகி இருக்கும் கச்சை தீவையும் சேர்த்து தீவுகள் 9 ஆக எழுத வேண்டும் என்ற கருத்தை எதிர்காலத்துக்கு முன்வைக்கின்றேன்.

ஊர தீவு , பால தீவு, காக்கைதீவு போன்ற நிர்வாக அலகுகள் இல்லாத மிக சிறு தீவுகளை அண்மையில் உள்ள நிர்வாக கட்டமைப்பு உள்ள தீவுகளோடு இணைத்து கருத்துக்களை எழுதலாம்.

எனவே இலங்கை இந்து சமுத்திரத்தின் முத்து அந்த முத்துக்கு புகழ் சேர்க்கும் நவமணிகள் யாழ் தீவுகள் என்று அழைக்கப்படும் நவதீவுகள் என்ற கருத்தை உறுதியாக முன்வைகின்றேன் என இப்பதவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன