Connect with us

இந்தியா

பேரவையில் ஆளுநர் கருத்து சொல்லலாமா? விதி என்ன சொல்கிறது?

Published

on

Loading

பேரவையில் ஆளுநர் கருத்து சொல்லலாமா? விதி என்ன சொல்கிறது?

சட்டமன்றத்தில் உரையை வாசிப்பது தவிர ஆளுநருக்கு கருத்து சொல்ல எந்த உரிமையும் கிடையாது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

இந்த ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டம் இன்று (ஜனவரி 6) தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஆளுநர் உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறிய நிலையில் சபாநாயகர் அப்பாவு அச்சிடப்பட்ட ஆளுநர் உரையை தமிழில் வாசித்தார்.

Advertisement

ஆளுநர் உரையின் போது நடந்தவை குறித்து அவை முன்னவர் துரைமுருகன் விளக்கம் அளித்தார். அவர் கொண்டு வந்த தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு முதல்நாள் அவை நிறைவடைந்தது.

பின்னர் சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அவர் பேசுகையில், “மறைந்த சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருக்கு நாளை ஜனவரி 7ஆம் தேதி சட்டமன்றத்தில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவை ஒத்தி வைக்கப்படும்.

Advertisement

அதைத் தொடர்ந்து ஜனவரி 8ஆம் தேதி புதன்கிழமை முதல் 11ஆம் தேதி சனிக்கிழமை வரை நான்கு நாட்கள் சட்டமன்ற கூட்டத் தொடர் நடைபெறும். நான்காவது நாள் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதல்வர் பேசி நிறைவு செய்வார். என்று தெரிவித்தார்.

அதிமுக உறுப்பினர்களை வெளியேற்றியது தொடர்பாக விளக்கம் அளித்த அப்பாவு, “இன்று பேரவைக்கு காங்கிரஸ் கட்சியினர் கறுப்பு பேட்ஜ் அணிந்து வந்தனர். அதிமுக உறுப்பினர்கள் கையில் பதாகைகளுடன் இன்று அவைக்கு வந்தனர். நான் பேசும் போதோ, முதல்வர் ஸ்டாலின் பேசும்போதோ அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆளுநர் பேசும் போது தான் அவர்கள் முழக்கமிட்டனர். அண்ணா பல்கலைக்கழகத்தின் வேந்தராக உள்ள இன்றைய ஆளுநருக்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள் என்று தான் நினைக்கிறேன். ஆளுநர் உரைக்கு குந்தகம் விளைவிக்கும் வண்ணம் கலவர நோக்கத்துடன் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்கள் செயல்பட்டதால் வெளியேற்றிவிட்டோம்.

ஆளுநர் உரை வாசிக்காமல் வெளியேறியது குறித்து அவை முன்னவர் ஏற்கெனவே தெளிவாக விளக்கமளித்துள்ளார். இந்திய அரசியலமைப்பு சட்டம் 186(1)ன் படி சட்டமன்றத்தில் ஆளுநர் உரை நிகழ்த்த வேண்டும் என்று கூறுகிறது. ஆளுநர் இந்த ஜனநாயக கடமையை நிறைவேற்றியிருக்க வேண்டும். தொடர்ந்து மூன்றாவது வருடமாக இதை செய்துள்ளார். அதற்காக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து கண்டிக்கப்பட்டது.

Advertisement

தமிழ்நாடு, அன்றைய மதராஸ் மாகாணமாக இருக்கும்போது, 1921ல் நடந்த முதல் சட்டமன்ற கூட்டத்தொடரில் இருந்து அதன் தொடர்ச்சியாக மரபுப்படி சட்டமன்றம் செயல்பட்டு வருகிறது.

ஆளுநர் உரை நடந்த நாள் சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்த நாளாக கருதப்படாது. உரை வாசிக்கும் ஆளுநர் கருத்து சொல்ல உரிமை கிடையாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 234 உறுப்பினர்கள் தான் கருத்து சொல்ல உரிமை உண்டு.

ஆனால் ஆளுநர் ஆர்.என்.ரவி, உரை வாசிப்பதற்கு விருப்பம் இல்லாத காரணத்தால், முதலில் தேசிய கீதம் பாடவில்லை என்பதை ஒரு சாக்காக சொல்லி சென்றுள்ளார்.

Advertisement

ஆளுநரை அழைப்பது என்பது தமிழக சட்டமன்றத்தின் மரபு. அங்கு எங்களுக்கு சிறப்பான வரவேற்பும், உபசரிப்பும் அளிக்கப்பட்டது. அப்போது எங்களுக்குள் எந்த கருத்து முரண்பாடும் ஏற்படவில்லை. அதே போன்று இன்று சட்டப்பேரவை வந்த ஆளுநருக்கும் உரிய மரியாதை அளிக்கப்பட்டது.

ஆனால் தொடர்ந்து அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக ஆளுநர் செயல்படுகிறார். சட்டப்பேரவைக்கு என்று ஒரு மரபு உள்ளது. அதன்படி தான் நடக்க முடியும். சட்டத்தில் ஆளுநர் கோரிக்கை வைத்தபடி எங்குமே குறிப்பிடப்படவில்லை. இந்தியாவில் பாஜக ஆளும் மாநிலத்தில் இதுபோன்று எங்குமே நடைபெறவில்லை. தமிழ்நாட்டில் மட்டும் தான் இப்படி நடக்கிறது.

இங்கு மட்டுமல்ல அரசு நிகழ்ச்சிகள் அனைத்திலும் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும், இறுதியில் தேசிய கீதமும் பாடப்படுகிறது. அடுத்த ஆண்டும் தமிழக சட்டமன்ற மரபுப்படி ஆளுநருக்கு அழைப்பு விடுப்போம். வாசிப்பதும் வாசிக்காததும் அவர் விருப்பம்” என்று சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன