இந்தியா
மகாராஷ்டிரா தேர்தல் எதிரொலி! காங்கிரஸ் தலைவர் நானா படோல் ராஜினாமா?

மகாராஷ்டிரா தேர்தல் எதிரொலி! காங்கிரஸ் தலைவர் நானா படோல் ராஜினாமா?
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 தொகுதிகளுக்கு கடந்த 20ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில், காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து மகா விகாஸ் அகாடி எனும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது.
அதேபோல், பாஜக, ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆகியவை இணைந்து மகாயுதி எனும் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தது. இந்தத் தேர்தலில், பாஜக கூட்டணியே எதிர்பாராத அளவிற்கு 232 தொகுதிகளை வென்று ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்த வெற்றி குறித்து பேசிய பாஜக தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ், “நாங்களே இதை எதிர்பார்க்கவில்லை” என்று தெரிவித்திருந்தார்.
இந்தச் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் இடம் பெற்ற கூட்டணியே, இந்த ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் கூட்டணி அமைத்திருந்தது. இதில் மகாராஷ்டிராவில் உள்ள 48 நாடாளுமன்றத் தொகுதிகளில் காங்கிரஸ் மட்டும் 17 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில், 13 தொகுதிகளை காங்கிரஸ் வென்றது. ஆனால், தற்போது நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் 103 தொகுதிகளில் போட்டியிட்டு, வெறும் 16 இடங்களை மட்டுமே அதனால் வெல்ல முடிந்துள்ளது.
அதிலும், காங்கிரஸ் கட்சியின் மகாராஷ்டிரா மாநிலத் தலைவராக உள்ள நானா படோல் இந்தச் சட்டமன்றத் தேர்தலில் சோகாலி தொகுதியில் போட்டியிட்டு வெறும் 208 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். இது தற்போது மகாராஷ்டிராவில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
கட்சி அடைந்துள்ள படுதோல்வியின் காரணமாக அவர் தனது மாநிலத் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், இது குறித்து விளக்கம் அளித்துள்ள நானா படோல், “நான் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவைச் சந்திக்க செல்கிறேன். நான் ராஜினாமா கடிதம் கொடுக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள் :
“அதிமுக கள ஆய்வுக் கூட்டத்தில் மோதல் இல்லை, பணி புரிவதில் போட்டி” – நத்தம் விஸ்வநாதன்
மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவராக இருந்த பாலாசாகேப் தோரட் கடந்த 2021ம் ஆண்டு மாற்றப்பட்டு, அந்தப் பொறுப்பு நானா படோலுக்கு வழங்கப்பட்டது. அப்போதில் இருந்து நானா படோல் மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவராக செயல்பட்டுவருகிறார். இவர் தலைமையில் தான் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் 13 தொகுதிகளை மகாராஷ்டிராவில் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.