இந்தியா
ஸ்தம்பித்த திருச்சி-மதுரை ஹைவே… தானா சேர்ந்த பிரம்மாண்டக் கூட்டம்… எதற்காக?

ஸ்தம்பித்த திருச்சி-மதுரை ஹைவே… தானா சேர்ந்த பிரம்மாண்டக் கூட்டம்… எதற்காக?
மதுரையில் டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள், விவசாயிகள் பேரணியாக சென்று கொண்டிருக்கின்றனர்.
மதுரை மாவட்டம், மேலூர் அருகே அரிட்டாபட்டி உள்ளிட்ட கிராமங்களில் டங்ஸ்டன் கனிமத்தை வெட்டி எடுப்பதற்கான ஏலத்தில் வேதாந்தாவின் துணை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் தேர்வானதாக மத்திய அரசு தெரிவித்தது.
இந்நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதுபோன்று டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக மதுரை மேலூர் தாலுகாவைச் சேர்ந்த கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
அந்தவகையில், முல்லை பெரியாறு ஒரு போக பாசன விவசாய சங்கம் சார்பில் மதுரை நரசிங்கம்பட்டி பகுதியில் இருந்து வாகன பேரணியாக புறப்பட்டு 4000க்கும் மேற்பட்ட விவசாயிகள் வணிகர்கள் பொதுமக்கள் மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள தலைமை தபால் நிலைய அலுவலகத்தில் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போலீசாரிடம் அனுமதி கேட்டிருந்தனர்.
இதற்கு அனுமதி வழங்கப்பட்டு, பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
ஆனால் நரசிங்கம்பட்டியில் இருந்து மதுரை தபால் நிலையம் நோக்கி சுமார் 16 கிமீ டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக வாகன பேரணியாக செல்லாமல், பொதுமக்கள் நடந்தே பேரணியாக சென்றனர்.
இதற்கு போலீசார் அனுமதி மறுத்து பொதுமக்களை ஆங்காங்கே தடுத்து நிறுத்த முயன்ற நிலையில் போலீசாருக்கும் பொது மக்களுக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு மோதல் உருவாகும் சூழ்நிலை உருவானது. இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது.
எனினும் போலீசாரின் தடையை மீறி விவசாயிகளும் பொதுமக்களும் தல்லாகுளம் நோக்கி ஊர்வலமாக சென்று கொண்டிருக்கின்றனர்.
ஆட்டோ, டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் கூட்டம் கூட்டமாக வந்த மக்கள் சாலையோரங்களில் வாகனத்தை நிறுத்திவிட்டு மதுரை திருச்சி நெடுஞ்சாலையில் நடைபயணமாக சென்றனர்.
இதனால் மதுரை – திருச்சி சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
மேலூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று கடையடைப்பு போராட்டமும் நடைபெற்று வருகிறது
.