இந்தியா
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : திமுக முதல் விஜய்யின் தவெக வரை… நிலைப்பாடு என்ன?

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : திமுக முதல் விஜய்யின் தவெக வரை… நிலைப்பாடு என்ன?
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று (ஜனவரி 7) அறிவித்துள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டு நடந்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர் முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன். இவர் கடந்த மாதம் உடல்நலக்குறைவால் காலமானதை அடுத்து ஈரோடு கிழக்கு காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் டெல்லி சட்டமன்ற தேர்தலுடன், தமிழகத்தின் ஈரோடு கிழக்கு மற்றும் உத்தரபிரதேசத்தின் மில்கிபூர் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கான வேட்புமனுத் தாக்கல் ஜனவரி 10ஆம் தேதி தொடங்க நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட தமிழக அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு என்ன என்று கேள்வி எழுந்துள்ளது.
மேலும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 15 மாதங்களே உள்ள நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் மீது அதிக எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் உருவாகியுள்ளது.
கடந்த 2021 மற்றும் 2023ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் முறை திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டு வெற்றி பெற்றது. எனினும் இந்த முறை காங்கிரஸ் கட்சி போட்டியிடுமா என்பதை காங்கிரஸ் தலைமை மற்றும் முதல்வர் ஸ்டாலினுடன் ஆலோசித்த பிறகே அறிவிக்கப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை இன்று அறிவித்துள்ளார்.
இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை வரும் 11ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். எனினும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலைப் போல் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலையும் அதிமுக புறக்கணிக்க வாய்ப்புள்ளதாக கடந்த 27ஆம் தேதி நமது மின்னம்பலம்.காம் தளத்தில் வெளியான டிஜிட்டல் திண்ணை: ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்… எடப்பாடி முக்கிய முடிவு! எனற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
!
அதே வேளையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும், பாஜக தேசியப் பொதுச்செயலாளர் தருண் சுக் தலைமையில் நாளை நடைபெறும் பாஜக மையக் குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் வேட்பாளர் யார் என்பது முடிவு செய்யப்படும் எனவும் அக்கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2026 சட்டமன்ற தேர்தல் தான் இலக்கு என்று அறிவித்து அரசியல் களத்திற்கு வந்த விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
நாம் தமிழர் கட்சி சார்பில் 2021-ல் கோமதி போட்டியிட்டு 11,629 வாக்குகளும், 2023 இடைத்தேர்தலில் மேனகா போட்டியிட்டு 10,827 வாக்குகள் பெற்று 3வது இடத்தை பிடித்தனர். இந்த நிலையில் தற்போது நடைபெற தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி நிச்சயம் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.