இந்தியா
சபரிமலை ஐயப்பன் கோயில் 18ம் படி மீது நின்று குரூப் போட்டோ எடுத்த விவகாரம்.. விசாரணை நடத்த ஏடிஜிபி அதிரடி உத்தரவு!

சபரிமலை ஐயப்பன் கோயில் 18ம் படி மீது நின்று குரூப் போட்டோ எடுத்த விவகாரம்.. விசாரணை நடத்த ஏடிஜிபி அதிரடி உத்தரவு!
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பதினெட்டாம் படி மீது நின்று கொண்டு குரூப் போட்டோ எடுத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த ஏடிஜிபி ஸ்ரீஜித் உத்தரவிட்டுள்ளார்.
சபரிமலையில் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்ய 18ம் படி வழியாக சென்று தரிசனம் செய்வதை பக்தர்கள் புனிதமாக கருதுகின்றனர். இருமுடி கட்டுடன் செல்லும் பக்தர்களுக்கு மட்டுமே 18 படிகள் வழியாக சென்று தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. சபரிமலையின் மேல் சாந்தி மற்றும் பந்தளம் மன்னர் குடும்பத்தினருக்கு மட்டுமே. இதில் விதிவிலக்கு உண்டு. இதற்கிடையே, லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்யும் நிலையில், அவர்களை படிகளில் ஏற்றி விடுவதற்கான பணிகளை காவல்துறையினர் செய்து வருகின்றனர்.
Also Read:
“வெற்றி பெற்றால் சந்தேகம் வராது..” – வாக்குச் சீட்டு முறை கேட்டு தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்
இந்த நிலையில் ஐயப்பனுக்கு பின்புறமாக முதுகை காட்டி நிற்கக் கூடாது என்ற மரபும் இங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சபரிமலை பணிகளில் ஈடுபடும் போலீசார் 12 நாட்களுக்கு ஒரு முறை மாற்றப்படுவது வழக்கம். இந்த நிலையில் கோயில் நடை திறக்கப்பட்ட 15ஆம் தேதி முதல் பணியாற்றிய முதல் குழுவினர் பணி முடிந்து திரும்பியுள்ளனர். தாங்கள் பணி முடிந்து செல்லும்போது கோயில் நடை சாத்தப்பட்டிருந்த மதியம் நேரத்தில் படியில் நின்று கொண்டு ஐயப்பனுக்கு முதுகை காட்டியபடி குழுவாக புகைப்படம் எடுத்துள்ளனர். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Also Read:
மகாராஷ்டிரா முதல்வர் பதவியை ராஜினாமா செய்த ஏக்நாத் ஷிண்டே.. இடைக்கால முதல்வராக இருப்பார் என்று அறிவிப்பு!
போலீசாரின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். விதி மீறல்களில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு கேரள காவல்துறை கூடுதல் இயக்குனர் ஸ்ரீஜித் சபரிமலையில் பணியில் உள்ள எஸ்.பி. பைஜுவிற்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் பணி முடிந்து திரும்பி உள்ள காவல்துறையினரும் விசாரணைக்கு ஆஜராகவும் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.