உலகம்
நெதன்யாகுவுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் – காமெனெய்!

நெதன்யாகுவுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் – காமெனெய்!
சா்வதேச குற்றவியல் நீதிமன்றம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுக்கு எதிராக கைது உத்தரவை பிறப்பித்திருப்பதற்கு பதிலாக, மரண தண்டனையை விதித்திருக்க வேண்டும் என்று ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயத்துல்லா அல் காமெனெய் தெரிவித்துள்ளார்.
ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் நேற்று முன்தினம் பசீஜ் ஆயுதப்படை உறுப்பினா்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், போர்க் குற்றத்தில் ஈடுபட்டதற்காகக் குறிப்பிட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அவரது முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் யோவ் காலண்ட் ஆகியோருக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், அவர்கள் செய்த குற்றத்துக்கு அந்த தண்டனை போதாது. அந்த இருவருக்கும் சர்வதேச நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
காஸா மீதான போரில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும், அவரது பாதுகாப்பு அமைச்சராக இருந்த யோவ் காலண்டும் போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி, அவர்களைக் கைதுசெய்ய ஹேக் நகரிலுள்ள ஐ.நா.வின் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை உத்தரவிட்டது. காஸா பகுதியில் பொதுமக்கள் மீது கடுந்தாக்குதல் நடத்துவது, உயிர் வாழ்வதற்குத் தேவையான உணவுப் பொருட்கள் அவா்களுக்குக் கிடைப்பதை வேண்டுமென்றே தடுத்து, பட்டினியை ஒரு போர் ஆயுதமாகப் பயன்படுத்தியது போன்ற போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக அவர்கள் மீது நீதிமன்றம் குற்றஞ்சாட்டியுள்ளது.