இந்தியா
2000 கி.மீ கடந்து தாஜ்மஹால் சென்ற தமிழக தம்பதிக்கு நேர்ந்த சோகம்… அதிரடி காட்டிய லேடி இன்ஸ்பெக்டர்

2000 கி.மீ கடந்து தாஜ்மஹால் சென்ற தமிழக தம்பதிக்கு நேர்ந்த சோகம்… அதிரடி காட்டிய லேடி இன்ஸ்பெக்டர்
2000 கி.மீ கடந்து தமிழகத்தில் இருந்து தாஜ்மஹால் பார்க்க சென்ற தம்பதிக்கு நேர்ந்த சோகமும், அதனை நிவர்த்தி செய்ய லேடி இன்ஸ்பெக்டர் காட்டிய அதிரடியும் தெரியவந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் ஒரு சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தமிழ்நாட்டில் இருந்து ஒரு குழு தாஜ்மஹாலை பார்க்க ஆக்ரா சென்றுள்ளது. அப்போது, அந்தக் குழுவில் இருந்து ஒரு ஜோடி மட்டும் பார்க்க மிகவும் சோகமாக இருந்துள்ளனர். தம்பதியினர் மிகவும் மனமுடைந்து இருப்பதை அறிந்து ஆக்ரா சுற்றுலா போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து அவர்களை நேரில் விசாரித்தனர். பெண் இன்ஸ்பெக்டர் ஷில்பி தம்பதியிடம் விசாரணை நடத்தினார்.
அப்போது, நண்பர்களுடன் தாஜ்மஹாலைப் பார்க்க வந்ததை விவரித்த அந்த தம்பதி, தாஜ்மஹால் வரும்போது தங்களின் முக்கிய ஆவணங்கள் அடங்கிய பர்ஸ் வைத்திருந்த பையை தொலைத்துவிட்டதாகவும் அதனால் மனமுடைந்து இருப்பதாகவும் இன்ஸ்பெக்டர் ஷில்பியுடன் தெரிவித்துள்ளனர்.
ஆக்ரா கான்ட் ரயில் நிலையத்திலிருந்து தாஜ்மஹால் வரை ஆட்டோவில் வந்ததாகவும், அப்படி வந்தபோது பர்ஸ் காணாமல் போனதால், ஆட்டோவில் தவறுதலாக இருந்திருக்கலாம் என்றும் தம்பதி தெரிவித்துள்ளது. முக்கிய ஆவணங்கள் அடங்கிய அந்தப் பையை மிஸ் செய்ததில் வருத்தம் ஏற்பட்டது என்றும் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து தமிழக தம்பதியின் நிலையை புரிந்துகொண்ட இன்ஸ்பெக்டர் ஷில்பி, அவர்களுக்கு உதவ முன்வந்தார். அதன்படி, ஆக்ரா கான்ட் ரயில் நிலையத்திலிருந்து தாஜ்மஹால் வரை பொருத்தப்பட்டிருந்த சிசிடிவிகளை ஆய்வு செய்த போலீசார், பின்னர் சிசிடிவி உதவியுடன் தமிழக தம்பதி சென்ற ஆட்டோவைத் தேடத் தொடங்கினர்.
சில மணிநேரத்தில் ஆட்டோவை கண்டுபிடித்த போலீசார் ஆட்டோவை சோதனை செய்து ஆட்டோவில் இருந்த அவர்களின் பர்ஸ் இருந்த பையை மீட்டனர். இதைத்தொடர்ந்து, தம்பதியை காவல்நிலையத்துக்கு வரவழைத்து பையை இன்ஸ்பெக்டர் ஒப்படைத்துள்ளார். முக்கிய ஆவணங்கள் அடங்கிய அந்தப் பையை பார்த்த தம்பதியினர் கண்ணீருடன் போலீசாருக்கு நன்றி தெரிவித்தனர்.