விநோதம்
ஃபேஷியல் ஸ்டீமிங் உங்கள் சருமத்திற்கு ஆரோக்கியமானதா..? அவசியம் தெரிஞ்சிக்கோங்க!

ஃபேஷியல் ஸ்டீமிங் உங்கள் சருமத்திற்கு ஆரோக்கியமானதா..? அவசியம் தெரிஞ்சிக்கோங்க!
பொதுவாக சருமப் பராமரிப்பில் க்ளென்சர், மாய்ஸ்சரைசர், சன் ஸ்கிரீன் லோஷன், ஃபேஸ் வாஷ், வீட்டு வைத்தியம் போன்றவற்றை மக்கள் பயன்படுத்துகின்றனர். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் சருமத்தை ஆரோக்கியமாக்கவும், பராமரிப்புக்காகவும் ஃபேஷியல் ஸ்டீமிங் செய்து வருகின்றனர். ஃபேஷியல் ஸ்டீமிங் என்பது முகத்தில் வெந்நீரைக் கொண்டு நீராவி எடுக்கும் செயல்முறையாகும். இதனால் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி சருமம் சுத்தமாகும். ஃபேஷியல் ஸ்டீமிங் சருமத்திற்கு ஆரோக்கியமானதா? ஃபேஷியல் ஸ்டீமிங் என்றால் என்ன? அதன் நன்மைகள் மற்றும் தீமைகள் என்ன? என்பதை பற்றி பார்ப்போம்.
சிலர் ஃபேஷியல் ஸ்டீமிங்கிற்காக பியூட்டி பார்லருக்குச் செல்கிறார்கள். ஆனால் இப்போதெல்லாம் மக்கள் வீட்டிலும் நீராவி எடுக்கத் தொடங்கியுள்ளனர். இது வீட்டில் 4 முதல் 5 நிமிடங்கள் செய்யப்படுகிறது. ஃபேஷியல் ஸ்டீமிங் என்பது ஒரு கிண்ணத்தில் சூடான நீரை ஊற்றி, ஒரு டவல் அல்லது பெட்ஷீட் மூலம் முகம் மூடப்பட்டிருக்க வேண்டும். கிண்ணத்தின் மேல் முகத்தை மட்டும் வளைத்துக் காட்டி 5 நிமிடங்கள் நீராவி முகத்தில் படும்படி இருக்க வேண்டும்.
முகத்தில் நீராவி பிடிப்பதன் மூலம், முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்குவதற்கு இது உதவுகிறது. நீராவி பிடிப்பதால் முகத்தில் உள்ள துளைகள் திறக்கப்பட்டு, துளைகளின் உள்ளிருக்கும் அழுக்குகள் மற்றும் எண்ணெய் பிசுக்குகள் வெளியேற்றப்படுகின்றன. மேலும் இது சருமத்திற்கு புத்துணர்ச்சியைத் தருகிறது. சருமத்தில் உள்ள வெடிப்புகள் போன்றவற்றை சரி செய்வதற்கு இந்த நீராவி பிடித்தல் பராமரிப்பு முறை உதவுகிறது. சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு வாரத்திற்கு ஒருமுறை இவ்வாறு செய்யலாம்.
முகத்தில் நீராவி பிடிப்பதன் மூலம் சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. உங்கள் சருமத்தை எவ்வளவு கவனித்துக் கொண்டாலும், சில சமயங்களில் அது மந்தமானதாகவும், நீரிழப்புடனும் காணப்படும். இந்த சூழலில், நீராவி பிடிக்கலாம். இது சருமத்தின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நீராவிலிருந்து வரக்கூடிய வெப்பம் நமது இரத்த ஓட்டத்தை அதிகரித்து சருமத்தில் ஆக்ஸிஜன் சீராக செல்ல உதவுகிறது.
இது சருமத்திற்கு பளபளப்புத் தன்மையை தருவது மட்டுமல்லாமல், இயற்கையான முறையில் சருமத்தில் உள்ள பாதிப்புகளை சரி செய்யவும் உதவுகிறது. மேலும், நீராவி பிடிப்பதன் மூலம் கொலாஜன் மற்றும் எலாஸ்டின் உற்பத்தி அதிகரித்து சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இது தவிர, முகம் இளமையாகவும், பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்க உதவுகிறது.
ஃபேஷியல் ஸ்டீமிங் செய்வதால் ஏற்படும் தீமைகள்:
நீராவியின் அதிகப்படியான வெப்பமானது கண்களில் எரிச்சல், சிவத்தல் மற்றும் வீக்கம் போன்ற கண் பிரச்சனைகளை அதிகரிக்கும். இது மட்டுமின்றி தோல் அரிப்பு மற்றும் சிவத்தல் போன்ற தோல் ஒவ்வாமைகளை அதிகரிக்கும்.
இதையும் படிக்க:ஹைப்போ தைராய்டிசம் .. நீங்கள் அலட்சியம் செய்யக்கூடாத 5 அறிகுறிகள்..
ஃபேஷியல் ஸ்டீமிங் செய்வதற்கான வழிகள்:
ஒரு கிண்ணத்தில் சூடான நீர், ஒரு டவல் மற்றும் விருப்பமான மூலிகைகள் அல்லது அத்தியாவசிய எண்ணெய்களைப் பயன்படுத்தி ஃபேஷியல் ஸ்டீமிங்கை வீட்டிலேயே செய்யலாம். ஃபேஷியல் ஸ்டீமரை வாங்கி வீட்டிலேயே ஃபேஷியல் ஸ்டீமிங்கை செய்யலாம். இது சூடான நீரில் இருந்து எரியும் அபாயத்தையும் குறைக்கிறது. ப்ரோஃபஷ்னல் ஃபேஷியல் ஸ்டீமிங் சிகிச்சைக்காக ஸ்பா அல்லது பார்லருக்குச் செல்லலாம்.
ஃபேஷியல் ஸ்டீமிங்க்குப் பிறகு, உங்கள் துளைகளை மூடுவதற்கு டோனரையும், உங்கள் சருமத்தை ஹைட்ரேட் செய்ய மாய்ஸ்சரைசரையும் பயன்படுத்தலாம். உங்களுக்கு குறைந்த உணர்திறன் கொண்ட சருமம் இருந்தால் வாரத்திற்கு 2 முதல் 3 முறையும் அல்லது தோல் வறண்ட அல்லது மெல்லிய சருமமாக இருந்தால் வாரத்திற்கு ஒரு முறையும் ஃபேஷியல் ஸ்டீமிங் செய்யலாம்.
இதையும் படிக்க:
மூல நோய் அறிகுறிகள் என்ன..? சரியான சிகிச்சை பெறுவது எப்படி? முழுமையான விளக்கம்.!
தற்காப்பு நடவடிக்கைகள்:
1. நீராவியின் வெப்பநிலை அதிகமாக இருக்கக்கூடாது.
2. நீராவி பிடிக்கும்போது முகத்தையும், உடலையும் டவல் அல்லது பெட்ஷீட் மூலம் மூடி வைக்கவும்.
3. உங்களுக்கு குறைந்த உணர்திறன் அல்லது வறண்ட சருமம் இருந்தால், நீராவியைப் பயன்படுத்துவதற்கு முன்பு மருத்துவரை அணுகவும்.