இலங்கை
அலையலையாக மக்கள் வெள்ளம் தாயகம் எங்கும் சுடர்விட்டன தீபங்கள்!

அலையலையாக மக்கள் வெள்ளம் தாயகம் எங்கும் சுடர்விட்டன தீபங்கள்!
தாயகக் கனவுடன் வித்தாகிப்போன மாவீரர்களை, தமிழர் தாயகத்தில் உள்ள அனைத்து மாவீரர் துயிலுமில்லங்களிலும் பல்லாயிரக் கணக்கான மக்கள் ஒன்றுதிரண்டு கொட்டும் மழைக்கு மத்தியிலும் கண்ணீர் மல்க அஞ்சலித்தனர்.
நாடெங்கும் அசாதாரணமாக காலநிலை நிலவிவரும் நிலையிலும், மக்கள் குடும்பம் குடும்பமாக ஒன்றுதிரண்டு வித்தாகிப்போன தமது பிள்ளைகளின் – உறவுகளின் – சகோதரர்களின் பெயர்களைச் சொல்லிக் கதறியழுத காட்சிகள் இதயங்களை கனக்க வைத்தன.
தாயகத்தில் கோப்பாய், கொடிகாமம், எள்ளங்குளம், உடுத்துறை, சாட்டி, கனகபுரம், முல்லைத்தீவுக் கடற்கரை, இரட்டை வாய்க்கால், தேவிபுரம், களிக்காடு, கொக்குத்தொடுவாய், சுதந்திரபுரம், அலம்பில், வன்னிவிளான்குளம், முள்ளியவளை, ஆலங்குளமம், இரணைப்பாலை, முள்ளிவாய்க்கால், இரணைப்பாலை, சுப்பர்மடம், ஆட்காட்டிவெளி ஆகிய பகுதிகளில் உள்ள துயிலுமில்லங்களில் சரியாக மாலை 06.05 மணிக்கு நினைவு ஒலி எழுப்பப்பட்டது, 06.06 மணிக்கு ஒரு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டது, 06.07 மணிக்கு ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலிக்கப்பட்டது.
துயலுமில்லங்களில் மாவீரர்களுக்கான ‘தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே…’ என்ற பாடல் ஒலிக்கவிடப்பட்டது.
இந்தப் பாடலின் போது உறவுகள் மாவீரர்களை நினைத்து கண்ணீர்விட்டுக் கதறி அழுதனர். சுமார் 30க்கும் மேற்பட்ட மாவீரர் துயிலுமில்லங்களில் இந்த அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன. (ப)