இந்தியா
Red Alert for TN | மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்… இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்?

Red Alert for TN | மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்… இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்?
மாதிரி படம்
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஃபெங்கல் என்ற புயலாக, இன்று காலைக்குள் மாறும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே கணித்திருந்தது.
இந்நிலையில், வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நேற்று இரவு 11.30 மணி நிலவரப்படி, முந்தைய 6 மணிநேரங்களில் மணிக்கு 9 கிலோமீட்டர் வேகத்தில் வடகிழக்கு திசையில் நகர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை திரிகோணமலையிலிருந்து வடகிழக்கில் 200 கிலோமீட்டர் தொலைவிலும், நாகப்பட்டினத்திலிருந்து 330 கிலோமீட்டர் கிழக்கு, தென்கிழக்கிலும், சென்னையிலிருந்து 430 கிலோமீட்டர் தென்கிழக்கிலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இது வடக்கு நோக்கி நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு, வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், வடமேற்கு திசையில் நகர்ந்து, வடதமிழ்நாடு, புதுச்சேரி கடலோரப் பகுதியில் காரைக்கால் – மகாபலிபுரம் இடையே நாளை காலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையைக் கடக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரையைக் கடக்கும்போது, மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், வெள்ளிக்கிழமை செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும் பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.
அதேபோல சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
சனிக்கிழமை அன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் அதி கன மழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, காரைக்காலில் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, கரூர் மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
இதனிடையே, வடதமிழக கடலோரம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பலத்த தரைக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.