இந்தியா
School Leave: சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை..!

School Leave: சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை..!
வங்கக்கடலில் நிலவிவந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறுமா என்ற கேள்வி இருந்துவந்த நிலையில், அது புயலாக வலுபெறாது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து நாளை காலை புதுச்சேரி கடலோரப் பகுதியில் காரைக்கால் – மகாபலிபுரம் இடையே கரையைக் கடக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய இடங்களுக்கு இன்று ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் எச்சரித்திருந்தது.
இதனிடையே கடலூர், விழுப்புரம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டிருந்தார்கள்.
இந்த நிலையில், சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டு மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.