இந்தியா
“தினமும் காவல் நிலையத்துக்கு வர விலக்கு கேட்டு இருக்கிறேன்…” – நடிகை கஸ்தூரி பேட்டி

“தினமும் காவல் நிலையத்துக்கு வர விலக்கு கேட்டு இருக்கிறேன்…” – நடிகை கஸ்தூரி பேட்டி
“சீரியலில் நடித்து வருகிறேன்; வேலை பாதிப்பதால் காவல் நிலையத்தில் வந்து கையெழுத்து போடும் நடைமுறையில் தளர்வு வேண்டும்” என நடிகை கஸ்தூரி கோரிக்கை விடுத்திருக்கிறார்.
சென்னையில் கடந்த 3-ந் தேதி நடந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த காவலர்கள், கஸ்தூரியை தனிப்படை அமைத்து தேடி வந்தனர். ஐதராபாத்தில் நடிகை கஸ்தூரியை கைது செய்த காவலர்கள் அண்மையில் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதன்பின் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பிறகு எழும்பூர் காவல் நிலையத்தில் தினமும் காலை 10 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை அடிப்படையில் நடிகை கஸ்தூரிக்கு எழும்பூர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. அதன் அடிப்படையில் தினமும் காலை 10 மணிக்கு எழும்பூர் காவல் நிலையத்தில் நடிகை கஸ்தூரி கையெழுத்திட்டு வருகிறார்.
இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகை கஸ்தூரி, “கடந்த 4 ஆண்டுகளாக ஹைதராபாத்தில் வசித்து வருகிறேன்; இரண்டு படம் மற்றும் இரண்டு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறேன். படப்பிடிப்பு தடைப்பட்டதோடு மட்டுமல்லாமல் எனது மகனின் கல்வியும் தடைப்பட்டு உள்ளது. எனவே காவல் நிலையத்தில் வந்து கையெழுத்து போடும் நடைமுறையில் தளர்வு கோரி உள்ளேன்; திங்கட்கிழமை தான் அந்த மனு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட உள்ளது” என தெரிவித்தார்.
மீண்டும் சர்ச்சையாக பேச விரும்பவில்லை என்ற அவர், அதே நேரத்தில் இசைவாணி விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை; இதன் மூலம் அரசின் செயல்பாட்டை புரிந்து கொள்ளலாம் என தெரிவித்தார்.
ஏற்கனவே தெலுங்கு பேசும் மக்களை அவதூறாக பேசிய வழக்கில் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ள நடிகை கஸ்தூரி, இசைவாணி விவகாரத்தில், வெளிப்படையாக குற்றச்சாட்டுகளை முன் வைக்காமல் அரசை மறைமுகமாக சாடியுள்ளார்.