
நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer
Published on 05/03/2025 | Edited on 05/03/2025

வடிவேலு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிங்கமுத்து மீது மான நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்தார். அதில் தன்னை பற்றி சிங்கமுத்து யூடியூப்-ல் தரக்குறைவாகப் பேசியதால் ரூ.5 கோடியை நஷ்டஈடாக வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் இனிவரும் காலங்களில் சிங்கமுத்து தன்னை பற்றி அவதூறு பரப்பத் தடை விதிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது சிங்கமுத்து இரண்டு வாரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. பின்பு அடுத்து நடந்த விசாரணையில் சிங்கமுத்து இனிமேல் வடிவேலு குறித்து அவதூறு கருத்து தெரிவிக்க மாட்டேன் என உத்தரவாத மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும் வடிவேலு பற்றி ஏற்கனவே பேசியிருந்த வீடியோக்களை யூடியூப்பிலிருந்து நீக்க வேண்டும் என்றும் கூறியது. அதன்படி சிங்கமுத்து சென்னை உயர்நீதி மன்றத்தில் உத்தரவாத மனுத் தாக்கல் செய்தார். அதில் வாய்மொழியாகவோ, எழுத்துப்பூர்வமாகவோ, டிஜிட்டல் முறையிலோ தவறான எந்த தகவலையும் தெரிவிக்கப் போவதில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கின் சாட்சியங்களை பதிவு செய்வதற்காக விசாரணையை மாஸ்டர் நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் மாற்றியது. அப்போது இந்த வழக்கு தொடர்பாக வடிவேலு மாஸ்டர் நீதி மன்றத்தில் சாட்சி விசாரணைக்காக நேரில் ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி வடிவேலு சென்னை உயர்நீதி மன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதி மன்றத்தில் இன்று நேரில் ஆஜரானார். அவரிடம் குறுக்கு விசாரணை நடத்த உயர்நீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளதாக சிங்கமுத்து தரப்பு வழக்கறிஞர் முறையிட்டார். மேலும் வழக்கை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொண்டார். இதை பதிவு செய்துகொண்ட மாஸ்டர் நீதிமன்ற நீதிபதி, வழக்கை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பிவைத்து அங்கே முறையீட்டு கொள்ளுங்கள் எனக் கூறி உத்தரவிட்டார்.