நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 07/03/2025 | Edited on 07/03/2025

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பைசன்’. பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வரும் இப்படத்தில் அனுபமா பரமேஷ்வரன், லால், பசுபதி, ரஜிஷா விஜயன், கலையரசன் உள்ளிட்டோர் நடித்து வந்தனர். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கும் இப்படம் அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி வருதாக கூறப்படுகிறது.  

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கி விறுவிறுப்பாகப் பல கட்டங்களாக நடந்து வந்தது. கடந்த மாதம் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்தது. இது தொடர்பாக துருவ் விக்ரம், இந்த படத்திற்கான படப்பிடிப்பும் தயாரிப்பும் என் வாழ்க்கையை மாற்றியுள்ளது என்றும் என் ஆன்மாவை வலுப்படுத்தி, வாழ்நாள் அனுபவத்தை வழங்கியதற்காக நன்றி மாரி செல்வராஜ் என்றும் நெகிழ்ச்சியுடன் கூறியிருந்தார். 

Advertisement

இந்த நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. அதை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட மாரி செல்வராஜ், “நான் எங்கிருந்து வருகிறேன் என்று உனக்கு தெரியும். ஏன் வருகிறேன் என்றும் உனக்கு தெரியும். வந்து சேர்ந்தால் என்ன செய்வேனென்றும் உனக்கு தெரியும். ஆதலால்… நீ கதவுகளை அடைக்கிறாய் நான் முட்டிமோதி மூர்க்கமாய் உடைக்கிறேன் — பைசன் (காளமாடன்)” எனக் குறிப்பிட்டுள்ளார். போஸ்டரில் துருவ் விக்ரம், களத்தில் விளையாட தயாராக இருப்பது போல் காட்சியளிக்கிறார். மேலும் விளையாண்டு கலைத்து நிற்பது போலும் நிற்கிறார். இன்று மாரி செல்வராஜ் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.