இந்தியா
மதுரை டங்ஸ்டன் சுரங்கம் உரிமைத்தை ரத்து செய்ய முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம்

மதுரை டங்ஸ்டன் சுரங்கம் உரிமைத்தை ரத்து செய்ய முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம்
மதுரையில் டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை ரத்து செய்யக் கோரியும், மாநில அரசின் அனுமதியின்றி சுரங்க உரிம ஏலங்களை மேற்கொள்ளக் கூடாது என்றும், பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு உரிமம் வழங்கியதால் ஏற்பட்டுள்ள பதற்றமான நிலைமையை சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக, டங்ஸ்டன் சுரங்கத்திற்கு அனுமதி வழங்கிய பகுதிகளில் உள்ள அரிட்டாபட்டி என்ற கிராமம், ஒரு பல்லுயிர்ப் பெருக்க வரலாற்று தலம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
குடைவரைக் கோயில்கள், சிற்பங்கள், சமணச் சின்னங்கள், தமிழ் பிராமி எழுத்துகள் மற்றும் பஞ்சபாண்டவர் கல்படுக்கைகள் உள்ளிட்ட தொல்பொருள் நினைவுச் சின்னங்களுக்கு அரிட்டாபட்டி கிராமம் பிரபலமானது என்றும் முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பகுதியில், எந்தவொரு சுரங்க நடவடிக்கை மேற்கொண்டாலும், அது ஈடு செய்ய முடியாத அளவிற்கு சேதங்களை ஏற்படுத்தும் என்று மு.க.ஸ்டாலின் கவலை தெரிவித்துள்ளார்.
மேலும், மக்கள் தொகை அதிகம் உள்ள கவட்டையம்பட்டி, எட்டிமங்கலம், வல்லாளப்பட்டி, கிடாரிப்பட்டி, நரசிங்கம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் வணிக ரீதியாக சுரங்கம் தோண்டுவது அப்பகுதி மக்களை வெகுவாக பாதிக்கும் என்றும் முதலமைச்சர் தனது கடிதம் வாயிலாக பிரதமருக்கு தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:
இன்று உருவாகிறது புயல்… நாளை மதியம் வரை வெளியே வரவேண்டாம்… இந்த 5 மாவட்ட மக்களுக்கு தனியார் வானிலை ஆய்வாளர் அலர்ட்
எனவே, மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று மு.க.ஸ்டாலின் உறுதிப்படக் கூறியுள்ளார். பிரதமர் மோடி இதில் உடனடியாக தலையிட்டு, டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு வழங்கிய உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் மாநில அரசின் அனுமதியின்றி சுரங்கம் தோண்டுவதற்கான ஏலங்களை மத்திய அரசு மேற்கொள்ளக் கூடாது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.