இலங்கை
ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக்கோரி மூதூர் மக்கள் போராட்டம்

ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக்கோரி மூதூர் மக்கள் போராட்டம்
திருகோணமலை மூதூர் வலயக்கல்வி அலுவலகத்துக்குட்பட்ட பாட்டாளிபுரம் பாமகள் தமிழ் வித்தியாலயத்தில் மிக நீண்ட காலமாக கணிதம் விஞ்ஞானம் ஆங்கிலம் உள்ளடங்கலான முக்கிய பாடங்களுக்காக 11 ஆசிரியர்களுக்கான பற்றாக்குறை நிலவுகின்றது
இதனால் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக்கோரி கொட்டும் மழைக்குள் மூதூர் மக்கள் பேராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பாடசாலையில் பல வருடங்களாக இரண்டு ஆசிரியர்கள் கடமையினைச் செய்யாது ஓய்வெடுக்கின்றமைக்கு எதிராக சட்ட நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு கோரியும் பாடசாலையில் காணப்படும் ஏனைய சில பிரச்சனைகள் உள்ளடங்கலான 11 கோரிக்கைகளுக்குத் தீர்வு வழங்குமாறு கோரியும் பாட்டாளிபுரம் பாடசாலைக்கு முன்பாக பெற்றோர் இன்றைய தினம் கொட்டும் மழையினையும் பொருட்படுத்தாது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாட்டாளிபுரம் பாமகள் தமிழ் வித்தியாலயமானது 352 பிள்ளைகள் கற்கின்ற தரம் 11 வரையான வகுப்புக்களைக் கொண்ட அதிகஸ்ர பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலையாகும்.
பெற்றோர் தமது பிள்ளைகளது கல்வியுரிமை மறுக்கப்பட்டு அநீதி இழைக்கப்படுவதான பதாதைகளை ஏந்தியவாறு பாடசாலைக்கு முன்பாகத் திரண்டு கோசங்களை எழுப்பியவாறு சுமார் இரண்டு மணித்தியாலங்களாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் மூதூர் வலயக்கல்விப் பணிமனையின் உதவிக் கல்விப்பணிப்பாளர் மற்றும் சம்பூர் போலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோர் கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன் ஆர்ப்பாட்டக்காரர்களினால் கல்வியமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களிடம் கையளிப்பதற்கான மகஜரை உதவிக் கல்விப் பணிப்பாளரிடம் கையளித்திருந்தனர்.
தமது நியாயமான கோரிக்கைகள் குறுகிய கால அவகாசத்துக்குள் தீர்க்கப்படாவிட்டால் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வலயக்கல்வி அலுவலகம் மற்றும் மாகாணக்கல்வி அலுவலகம் போன்றவற்றை முடக்கி நீதி கோருவோம் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர் எச்சரித்ததுடன் கலைந்து சென்றனர்