இலங்கை
பிரதமர் ஹரிணி பெயரில் கிரிப்டோ நாணய வணிகங்கள் ; விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

பிரதமர் ஹரிணி பெயரில் கிரிப்டோ நாணய வணிகங்கள் ; விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் பிற பிரபல இலங்கை நபர்களின் பெயர்களைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களில் மோசடியான கிரிப்டோ நாணய வணிகங்கள் விளம்பரப்படுத்தப்படுகின்றதாக பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.
லிதுவேனியாவில் இருந்து செயல்படும் இந்த மோசடி கணக்குகள் மூலம் இந்த விளம்பரங்கள் பேஸ்புக் பயனர்களை குறிவைத்து தீவிரமாக செயல்படுகின்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் அரசாங்க அதிகாரிகள் மற்றும் பிரபலங்களின் ஒப்புதல் இருப்பதாக பொய்யாக கூறி கிரிப்டோ நாணய முதலீடுகளை விளம்பரப்படுத்தும் ஆன்லைன் விளம்பரங்கள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பிரதமர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
எந்த அரசாங்க அதிகாரியோ அல்லது அமைச்சகமோ எந்த கிரிப்டோ நாணய முதலீட்டு திட்டத்தையும் அங்கீகரிக்கவில்லை. புகார்கள் மற்றும் அகற்றுதல் கோரிக்கைகள் இருந்தபோதிலும், இந்த மோசடிகள் சமூக ஊடக தளங்களில் தொடர்ந்து காணப்படுகின்றன.
அதேசமயம் இந்த மோசடி வணிகங்கள் பரவுவதைத் தடுக்கவும், இலங்கை பயனர்களை நிதி மோசடிகளிலிருந்து பாதுகாக்கவும் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பேஸ்புக் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்தை பிரதமர் அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.