விளையாட்டு
தமிழக பள்ளிகளில் செஸ்: உடற்கல்வி பாடத் திட்டத்தை மாற்றி அமைக்க முடிவு

தமிழக பள்ளிகளில் செஸ்: உடற்கல்வி பாடத் திட்டத்தை மாற்றி அமைக்க முடிவு
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று வெள்ளிக்கிழமை தொடங்கியது. சட்டசபையில் இன்று கூடிய முதல் நாள் கூட்டத்தில் 2025-2026 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.அப்போது அவர் தமிழக பள்ளிப் பாடத்திட்டத்தில் சதுரங்க விளையாட்டு சேர்க்கப்படும் என அறிவித்தார். இதுகுறித்துநிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:- 44-வது செஸ் ஒலிம்பியாட்-2022, கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகள்-2023, தெற்காசிய இளையோர் தடகள சாம்பியன்ஷிப், ஆசிய ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஸ் கோப்பை-2023 போன்ற பல்வேறு சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாடு அரசால் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளன. சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கங்களை வென்ற 4554 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு இதுவரை 151 கோடி ரூபாய் உயரிய ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. இன்று உலக அரங்கில் சதுரங்க விளையாட்டின் தலைநகராகத் தமிழ்நாடு விளங்குகிறது. இதுவரை இரண்டு உலக சாம்பியன்கள் மற்றும் 31 கிராண்ட் மாஸ்டர்கள் தமிழ் மண்ணிலிருந்து உருவாகியுள்ளனர். இந்த வெற்றியைத் தக்கவைத்துக் கொள்ளும் பொருட்டும். மாணவர்களிடையே சதுரங்க விளையாட்டை ஊக்குவித்து பல சாம்பியன்களை எதிர்காலத்தில் உருவாக்கும் வகையிலும், பள்ளிப் பாடத்திட்டத்தில் சதுரங்க விளையாட்டினைச் சேர்த்திடும் விதமாக, உடற்கல்விப் பாடத்திட்டம் உரிய வகையில் மாற்றியமைக்கப்படும்” என்று அவர் தெரிவித்தார்.