விளையாட்டு
போராட்டம் நடத்திய ராஜஸ்தான் ராயல்ஸ்… எப்படியோ தாய் வீடு திரும்பிய அஸ்வின்

போராட்டம் நடத்திய ராஜஸ்தான் ராயல்ஸ்… எப்படியோ தாய் வீடு திரும்பிய அஸ்வின்
சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினை வாங்க ராஜஸ்தான் அணி கடும் போராட்டம் நடத்தினாலும் இறுதியில் சென்னை அணி அவரை ஏலத்தில் எடுத்தது.
அஸ்வின் கடந்த 2009 முதல் 2015 வரை சிஎஸ்கே அணியில் இடம் பெற்றிருந்தார். அஸ்வின் இளம் வயது முதல் சேப்பாக்கம் மைதானத்தில் அதிக போட்டிகளை ஆடியதால் அவரது விருப்பமான மைதானமாக பார்க்கப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு ரவிச்சந்திரன் அஸ்வின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உயர் திறன் செயல் மையத்தின் பதவியிலும் நியமிக்கப்பட்டார்.
அப்போதே அவர் சிஎஸ்கே அணிக்கு திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. அதற்கேற்ப சிஎஸ்கே அணி ஏலத்தில் அஸ்வினை கடைசி வரை போராடி வாங்கி உள்ளது. இவரை 9.75 கோடிக்கு சென்னை அணி வாங்கியுள்ளது. ராஜஸ்தான் அணி 9.50 கோடி வரை ஏலம் கேட்டது . கடைசியில் சென்னைக்கே அஸ்வினை விட்டுக் கொடுத்து விட்டது.
தன்னை ஏலம் எடுத்ததற்காக சென்னை அணி நிர்வாகத்துக்கு அஸ்வின் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது, ‘பாருங்கள் வாழ்க்கை ஒரு வட்டம். 2008 முதல் 2015 ஆம் ஆண்டு வரை சென்னை அணிக்காக விளையாடினேன். சென்னை அணியில் நான் கற்றுக் கொண்ட விஷயம்தான் எனது சர்வதேச போட்டிகளுக்கும் உதவியது. இன்று வரை நான் அந்த உத்திகளை பயன்படுத்துகிறேன். தாய் வீடு திரும்புவதன் மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரித்து விட முடியாது.
எனக்காக போராடிய சென்னை அணி நிர்வாகத்துக்கு நன்றி. சென்னை அணியில் இருந்து நான் ராஜஸ்தானுக்கு விளையாடினாலும் , சென்னை அணி ரசிகர்கள் என்னை வேறு அணி வீரராக பார்த்தது கிடையாது. சென்னை அணிக்கு எதிராக பேட் செய்யவோ, பந்து வீசவோ செய்தாலும் எனக்கு எதிராக சென்னை ரசிகர்கள் ஒரு போதும் கோஷம் போட்டது கிடையாது. தற்போது, மீண்டும் அந்த அணிக்காக தோனியுடன் சேர்ந்து விளையாடப் போவது எனக்கு அலாதியான விஷயம் ‘என்று தெரிவித்துள்ளார்.
அஸ்வின் வெளியிட்ட இந்த வீடியோவை சென்னை அணி தனது சமூகவலைத் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளது.