Connect with us

விளையாட்டு

KKR Vs RCB: ‘அவர் டாப் ஆடரில் ஆடினால் இன்னும் சூப்பரா இருக்கும்’… வர்ணனையாளர் முத்து பேட்டி

Published

on

Pradeep Muthu cricket commentator on IPL 2025 KKR vs RCB Tamil News

Loading

KKR Vs RCB: ‘அவர் டாப் ஆடரில் ஆடினால் இன்னும் சூப்பரா இருக்கும்’… வர்ணனையாளர் முத்து பேட்டி

10 அணிகள் பங்கேற்கும் ஐ.பி.எல். 2025 டி20 தொடரின் 18-வது சீசன் இன்று சனிக்கிழமை (மார்ச் 22) முதல் தொடங்கி நடைபெற உள்ளது. இரவு 7.30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டனில்  நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் மோதுகிறது. இந்நிலையில், இந்த இரு அணிகள் மற்றும் அவர்களின் வீரர்கள் ஆட்டம் எப்படி இருக்கும் என்பது குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியின் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து தனது கருத்தை ‘தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்’ இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டார். இதுகுறித்து அவர் பேசுகையில், “வழக்கம் போல் இந்த சீசன் ரொம்பவும் பரபரப்பாக இருக்கும். இத்தனை நாள் இந்திய கிரிக்கெட் அணிக்கு உற்சாகமாக நாம் ஆதரவு கொடுத்து வந்தோம் ஆனால், இன்று முதல் உனக்கு சென்னை, எனக்கு மும்பை என பிரிந்து ஆதரவு தெரிவிப்போம். நடப்பு சாம்பியனான கொல்கத்தா இம்முறை அவர்களது பட்டத்தை தக்க வைக்க வாய்ப்புகள் இருக்கு. ஆனால், கடந்த சீசனைப் போல், அணி இப்போது இல்லை. கேப்டன் ஸ்ரேயாஸ், ஆலோசகர் கம்பீர் அவர்கள் வசம் இல்லை. தங்களுக்கு வெற்றி தேடித் தந்த கேப்டனைக் கூட அவர்கள் தக்க வைக்கவில்லை. புதிய கேப்டன் ரஹானே சிறந்த வீரர் என்றாலும், அவருக்கு கேப்டன் பதவி கொடுப்பது, அவர்கள் ஒரு ஸ்டேப் பின்னோக்கி செல்வது போல் எனக்கு தோன்றுகிறது. ஏனெனில், அவரின் கேப்டன்சி ரெக்கார்ட் அவ்வளவு சிறந்ததாக இல்லை. அவர் ராஜஸ்தான் அணிக்கு கேப்டனாக இருந்தபோது, பாதி தொடரில் அவரின் கேப்டன்சி பறிக்கப்பட்டு ஸ்மித் வசம் கொடுக்கப்பட்டது. அதனால், அதுபோன்று எதுவும் இப்போது நடக்கக் கூடாது. எனினும், அவர்கள் அணியின் வீரர்கள் திறமைசாலிகளாக இருக்கிறார்கள்.  தொடக்க வீரர் சுனில் நரைன் வழக்கம் போல் வருவார். கடந்த சீசன் போல் தொடர்ந்து ஓப்பனராக ஆடுவாரா? என்றால், முதல் மூன்று போட்டிகளில் அவருக்கு அந்த வாய்ப்பு கொடுக்கப்படலாம். தோல்வியுறும் பட்சத்தில் அவரை அவர்கள் மாற்றலாம். சிறப்பாக ஆடினால் அப்படியே தொடருவார்கள். அதனால், அவர் கண்டிப்பாக தொடக்க வீரராக களமாடுவார். அவரோடு களமிறங்கப் போகும் மற்றொரு தொடக்க வீரர் குயின்டன் டி காக்-கா அல்லது  ரஹ்மானுல்லா குர்பாஸா என்பது தான் கேள்வி. ரிங்கு சிங்குவை டாப் ஆடரில் ஆட வைப்பார்களா? என்றால், அப்படி அவர்கள் செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அவர் களத்திற்குள் வருவதற்குள் ஆட்டம் முடிந்து விடுகிறது. அல்லது, அணி இக்கட்டான சூழலில் இருக்கும் போது வருகிறார். அப்படியான நிலையில் கூட அவர் நன்றாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டெடுக்கிறார். இந்த சீசனில் நிதிஷ் ராணா அவர்களிடம் இல்லை. அதனால், 6-வது, 7-வது வீரராக ஆடும் ரிங்குவை, 5-வது வீரராக களமிறங்கினால் இன்னும் நன்றாக இருக்கும்.   பவுலிங்கைப் பொறுத்தவரை, ஸ்பின் பிரிவில் வருண் சக்கரவர்த்தி, சுனில் நரைன் இருக்கிறார்கள். சீம் பிரிவில் தான் கொஞ்சம் குறைகள் இருப்பதாக தெரிகிறது. கடந்த சீசனில் அவர்களுக்கு ஸ்டார்க் இருந்தார். இந்த சீசனில் அவர்கள் வசம் அன்ரிச் நார்ட்ஜே உள்ளார். அவர் எவ்வளவு சிறப்பாக இருக்கப் போகிறார் என்று தெரியாவில்லை. ஸ்பென்சர் ஜான்சன் இப்போதுதான் வளர்ந்து வருகிறார். அவரைத் தவிர ஹர்ஷித் ராணா அவர்களின் நல்ல தேர்வு. கடந்த சீசனில் நன்றாக இருந்த அவர் இந்தியாவுக்காக எல்லா ஃபார்மெட்டுகளிலும் ஆடி விட்டார். பவர் பிளேயில் நல்ல ஸ்பின் பவுலராக வைபவ் அரோரா இருப்பார். ஆனால், டெத் ஓவர்களில் அவர்கள் எப்படி செயல்பட  போகிறார்கள் என்பதைப் பார்ப்பதில்  சுவாரசியமாக இருக்கும், கடந்தாண்டு வருண் 18, 19 ஓவர்களில் பந்துவீசி விக்கெட் எடுத்தார். கொல்கத்தா எனக்கு பிடித்த அணி, அவர்கள் ஆட்டத்தைப் பார்க்க நானும் ஆவலுடன் இருக்கிறேன்.   ஐ.பி.எல் அதன் 18-வது வயதை எட்டியிருக்கிறது. ஆனால், ஆர்.சி.பி இன்னும் கோப்பை வெல்லவில்லை என்பதைப் பொறுத்தவரை, அவர்கள் இரண்டு முறை வெற்றிகரமாக இறுதிப் போட்டி வரை முன்னேறி இருக்கிறார்கள். இறுதிப் போட்டியில் எந்த அணி சிறப்பாக செயல்படுகிறோதோ அவர்கள் தான் வெற்றி பெறுவார்கள். 2022 சீசனில் கோலி 978 ரன்கள் அடித்தார். கிட்டத்தட்ட ஆயிரம் ரன்கள் என அவர் குவித்தும் அவர்களால் கோப்பை வெல்ல முடியவில்லை.  அவ்வப்போது அதிர்ஷ்டம் இல்லாதவர்களாகவும் அவர்கள் இருந்துள்ளனர். தவிர எப்போதும் 3 பெரிய வீரர்களை நம்பித்தான் இறங்குவார்கள். ஆனால், இந்த முறை, அந்த பார்முலாவில் இருந்து கொஞ்சம் வெளியே வந்துள்ளார்கள் எனத் தெரிகிறது. பேட்ஸ்மேன்கள் மட்டுமல்லாது மற்ற பிரிவிலும் அவர்கள் கவனம் செலுத்தி இருக்கிறார்கள். ஆர்.சி.பி-யில் தொடக்க வீரர்கள் கோலி – பிலிப் சால்ட் வருவார்கள். கடந்த  வருடம் கொல்கத்தா அணியில் சால்ட் சிறப்பாக ஆடினார். அவருக்குப் பின், லியாம் லிவிங்ஸ்டோன் இருக்கிறார். இவரும் மேக்ஸ்வெல் போன்ற வீரர்தான். ‘பட்டா பாக்கியம் படலேனா லேகியம்’ என்பது போல் தான் ஆடுவார். ஒரு கேப்டனாக மட்டுமல்லாமல் ஸ்பின் ஹிட்டராகவும் ரஜத் படிதார் இருக்கிறார். அவரின் ரோல் அணிக்கு ரொம்ப முக்கியம். ஆர்.சி.பி அணியினர் பவுலிங்கில் மாற்றம் கொண்டு வந்துள்ளனர். ஜோஷ் ஹேசில்வுட், புவனேஷ்வர் குமார் போன்றோரை எடுத்திருப்பது, அனுபவம் அளவில் வலு சேர்க்கும். ஆனால், இவர்களுக்கும் ஸ்பின் தான் பிரச்சனையாக இருக்கிறது. சுயாஷ் சர்மாவை அவர்கள் கே.கே.ஆர் அணியில் இருந்து எடுத்து இருந்தாலும், அவர் மேட்ச் வின்னரா என்று பார்த்தால் அதில் சந்தேகம் தான். அவரால் வருண் சக்கரவர்த்தி, குலதீப், சாஹல் போன்றவர்கள் போல் ஆட்டத்தை திருப்ப முடியுமா? என்றால், அது சந்தேகம் தான். க்ருணால் பாண்டியா ஐ.பி.எல் போட்டியில் விக்கெட் எடுப்பவராக இருந்ததில்லை. ஒருபோட்டியில் அதிக விக்கெட் வீழ்த்தக்கூடிய ஆல்ரவுண்டர் அவர் இல்லை. ஆனால், கட்டுப்பாட்டுடன் வீசியிருக்கிறார். அதிக  வலது கை பேட்ஸ்மேன்கள் இருந்தால், இடது கை பேட்ஸ்மேனான அவரை டாப்  ஆடரில் பேட்டிங் ஆடச்  சொல்வார்கள். அதுபோன்ற பொறுப்பைத்தான் இப்போது அவருக்கு  கொடுப்பார்கள்.” என்று   வர்ணனையாளர் பிரதீப் முத்து கூறினார்.    Ipl | Kolkata Knight Riders | Royal Challengers Bangalore 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன