பொழுதுபோக்கு
HBD TMS: மூச்சு விடாமல் பாடிய முதல் பாடகர்; டி.எம்.ஸ்-க்கு முதல் வாய்ப்பு கிடைத்தது எப்படி?

HBD TMS: மூச்சு விடாமல் பாடிய முதல் பாடகர்; டி.எம்.ஸ்-க்கு முதல் வாய்ப்பு கிடைத்தது எப்படி?
தனது இனிமையான குரலால், மற்ற நடிகர்களுக்கு பாடியிருந்தாலும், திரையில் பார்க்கும்போது அந்த நடிகர்களே பாடுவது போன்று தனது குரலில் வித்தியாசம் காட்டி பாடிய பாடகர் டி.எம்.சௌந்திரராஜன் பிறந்த தினம் இன்று.1922-ம் ஆண்டு மதுரையில் பிறந்தவர் டி.எம்.சௌந்திரராஜன். சௌராஷ்டிரா பிராமணர் குடும்பத்தை சேர்ந்த இவர், குடும்பத்தில் 2-வது மகன். தனது 7 வயதில், பாடல் பாடுவதற்காக தன்னை தயார்படுத் தொடங்கிய டி.எம்.சௌந்திரராஜன், கர்நாடக இசையை கற்றுக்கொண்டு தனது 23 வயதில் முதல் மேடை கச்சேரியில் ஏறினார். 1945-ம் ஆண்டு மதுரை சத்குரு சமாஜனத்தில் நடைபெற்ற இந்த இசை நிகழ்ச்சில், பிரபல வயலின் கலைஞர் சி.ஆர்.மணி, மற்றும் மிருதங்க எஸ்.எஸ்.விஜய் ரத்னம் ஆகியோர் வாசித்தனர்.ஆரம்பத்தில் டி.எம்.எஸ் பாரம்பரிய பாடகரும் நடிகருமான எம்.கே.தியாகராஜ பாகவதரின் பாடல்களை பாட தொடங்கினார். அதன்பிறகு சினிமாவில் பாட வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்த டி.எம்.எஸ், பல கம்பெனிகளில் நிராகரிக்கப்பட்டாலும், சினிமாவில் பாட வேண்டும் என்ற அவரது முயற்சியை கைவிட மனமில்லாததால், சென்ட்ரல் ஸ்டூடியோவில் இயக்குனராக இருந்த சுந்தர் ராவ் நட்கர்னியின் வீட்டில் வேலைக்கு சேர்ந்துள்ளார். அங்கிருந்து பாடுவதற்காக வாய்ப்புகளையும் தேடியுள்ளார்.டி.எம்.சௌந்திராஜனுக்கு திரைப்படத்தில் முதல் வாய்ப்புஇயக்குனர் சுந்தர் ராவ் நட்கர்னி, இசையமைப்பாளர் எம்.எஸ்.சுப்பையா நாயுடுவிடம், டி.எம்.எஸ்.-ஐ அறிமுகம் செய்து வைத்துள்ளார், அவர் மூலமாக 1946-ம் ஆண்டு தொடங்கப்பட்ட கிருஷ்ண விஜயம் என்ற படத்தில் டி.எம்.எஸ்.க்கு பாடல் பாட வாய்ப்பு கிடைத்துள்ளது, சுந்தர் ராவ் நட்கர்னி இயக்கிய இந்த படத்தில் டி.எம்.எஸ். 3 பாடல்களை பாடியுள்ளார். 1946—ம் ஆண்டு இந்த படத்தின் பாடல்கள் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் 4 வருடங்களுக்கு பிறகு 1950-ம் ஆண்டு தான் இந்த படம் வெளியாகியுள்ளது.எம்.ஜி.ஆர் படத்தில் டி.எம்.எஸ் பாடல்கிருஷ்ண விஜயம் 1946-ம் ஆண்டு தொடங்கி 1950-ம் ஆண்டு வெளியானதால் அதற்கு முன்பே வெளியான மந்திரி குமாரி என்ற படம் டி.எம்.எஸ். பாடல் பாடி வெளி வந்த முதல் படமாக மாறியது. கருணாநிதி கதை வசனத்தில் உருவான இந்த படத்தை ஆங்கில இயக்குனர் எல்லிஸ் ஆர் டங்கன், டி.ஆர்.சுந்தரம் ஆகியோர் இயக்கியிருந்த நிலையில், எம்.ஜி.ஆர் இந்த படத்தில் நாயகனாக நடித்திருந்தார். இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.அதன்பிறகு தேவகி சர்வதிகாரி ஆகிய படங்களில் பாடல்கள் பாடிய டி.எம்.சௌந்திரராஜன், 1952-ம் ஆண்டு வெளியான கல்யாணி என்ற படத்தில், 3 பாடல்கள் பாடியிருந்தார். இது தான் கண்ணதாசன் எழுதிய பாடலை டி.எம்.எஸ். பாடிய முதல் படமாகும். அதேபோல் அடுத்து வெளியான வளையாபதி படத்தில், பாரதிதாசன் எழுதிய 2 டூயட் பாடல்களையும் டி.எம்.எஸ். பாடியிருந்தார். இந்த படத்திற்கு தட்சினா மூர்த்தி இசையமைத்திருந்தார்.எம்.ஜி.ஆரை வியப்பில் ஆழ்த்திய டி.எம்.எஸ்1954-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களின் அச்சுறுத்தலால் தியேட்டரை விட்டு வெளியேறிய படம் தான் கூண்டுக்கிளி. டி.ஆர்.ராமண்ணா, டி.ஆர்,ராஜகுமாரி இணைந்து தயாரித்த இந்த படத்தில் எம்.ஜி.ஆர் சிவாஜி இருவரும் இணைந்து நடித்திருந்தனர், இந்த படம் தான் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த முதலும் மற்றும் கடைசி படமாகும். கே.வி.மகாதேவன் இசையமைத்த இந்த படத்தில் டி.எம்.எஸ். 4 பாடல்களை பாடியிருந்தார்.இந்த படத்தில் முதலில் கோரஸ் பாடவே அழைக்கப்பட்ட டி.எம்.எஸ், பாடல் பாடுவார் என்று, கவிஞர் தஞ்சை ராமையா தாஸ் சிபாரிசு செய்து அவருக்கு ஒரு டூயட் பாட வாய்ப்பு வாங்கி கொடுத்துள்ளார், இந்த படத்தில் ‘’கொஞ்சும் கிளியான பெண்ணை’’ என்ற பாடலை பதிவு செய்தபின் அதை கேட்ட எம்.ஜி.ஆர் டி.எம்.எஸ். நமக்கு பாடினால் சரியாக இருக்கும் என்று அடுத்து தனது படங்களில் அவரை பாட வைத்துள்ளார்.சிவாஜிக்கு இலவசமாக பாட தயாரான டி.எம்.எஸ்.1954-ம் ஆண்டு வெளியான தூக்கு தூக்கி படம் தான் டி.எம்.எஸ். சிவாஜிக்காக பாடிய முதல் படம். இந்த படத்தில் அவரை ஒப்பந்தம் செய்திருந்தாலும், அதற்கு முன்பு சிவாஜிக்கு தொடர்ச்சியாக சி.எஸ்.ஜெயராமன் தான் பாடியிருந்தார். இதனால் இவரது குரல் சிவாஜிக்கு பொருந்துமா என்று தயங்கியுள்ளனர். இதை கேட்ட டி.எம்.எஸ், முதலில் 3 பாடல் இலவசமாக பாடுகிறேன். சரியாக இருந்தால் வைத்தக்கொள்ளுங்கள். இல்லை என்றால் சம்பளம் தர வேண்டாம் நான் இனிமேல் பாடவே மாட்டேன் என்று கூறியுள்ளார்.அதன்பிறகு டி.எம்.எஸ். பாடியுள்ளார். பாடுவதற்கு முன்பாக, சிவாஜியுடன் பேசிக்கொண்டிருந்த டி.எம்.எஸ்., அவரது குரல் வளத்தை பற்றி தெரிந்துகொண்டு அதற்கு ஏற்படி பாடியுள்ளார். அந்த படத்தில் அனைத்து பாடல்களும் பெரிய ஹிட் பாடல்களாக அமைந்தது. அதன்பிறகு தொடர்ந்து எம்.ஜி.ஆர், சிவாஜி, முத்துராமன், ஜெமினி கணேசன், ஜெய்சங்கர் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருக்காக பாடல்கள் பாடிய டி.எம்.சௌந்திரராஜன், 1985-ம் ஆண்டு வரை முன்னணி பாடகராக இருந்துள்ளார்.மூச்சுவிடாமல் பாடிய முதல் பாடகர்நடிகர்களின் வயதுக்கு ஏற்றது போல் குரலில் பாடுவதில் டி.எம்.எஸ்க்கு நிகர் அவர்தான். அதேபோல் தனது குரலை அவரே ரசிப்பார். அதேபோல் அம்பிகாபதி என்ற படத்தில் வடிவேலும் மயிலும் என்ற பாடலை மூச்சுவிடாமல் பாடியிருப்பார். தமிழ் சினிமாவில் முதன் முதலில் மூச்சுவிடாமல் பாடிய முதல் பாடகர் டி.எம்.எஸ் தான்.அதேபோல், உயர்ந்த மனிதன் படத்தில் வரும் அந்த நாள் ஞாபகம் பாடலில், முதலில் மூச்சு வாங்குவது போல் இருக்க வேண்டும் என்பதற்காக ஸ்டூடியோவை சுற்றி ஓடி மூச்சு வாங்க வந்து பாடியுள்ளார். வசந்த மாளிகை படத்தில், யாருக்காக பாடலில், கடைசியில் எக்கோ இருந்தால் தான் சரியாக இருக்கும் என்று கூறியுள்ளார். இதை வைக்க படக்குழு மறுத்தாலும், டி.எம்.எஸ். வற்புறுத்தலின்பேரில் அதை வைத்துள்ளனர். அதன்பிறகு பாடல் பெரிய ஹிட்டடித்துள்ளது.எம்.ஜி.ஆருடன் மோதல், இளையராஜாவுடன் சர்ச்சைஎம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான அடிமைப்பெண் திரைப்படத்தில் வரும் ஆயிரம் நிலவே வா என்ற பாடலை எஸ்.பி.பாலசுப்பிரமணியன் பாடியிருந்தார். இந்த பாடல் முதலில் டி.எம்.எஸ். பாடுவதாக இருந்தது. ஆனால், தனது மகளின் திருமணத்திற்காக மதுரை செல்வதாவகும், திரும்பி வந்து பாடி கொடுப்பதாக கூறியுள்ளார். ஆனால் அதுவரை பொருக்க முடியாத எம்.ஜி.ஆர், எஸ்.பி.பி.க்கு அந்த வாய்ப்பை கொடுத்துள்ளார்.அதன்பிறகு அதே படத்தில் தாயில்லாமல் நானில்லை என்ற பாடலையும் மற்ற பாடகர்களை வைத்து பாட வைத்துள்ளார் எம்.ஜி.ஆர். ஆனால் எதுவும் சரியாகவராததால், மீண்டும் டி.எம்.ஸை தேடி சென்றுள்ளார். ஆனால் இந்த முறை டி.எம்.எஸ்.தனக்கு ஒரு பாட்டுக்கு ரூ1000 சம்பளம வேண்டும் என்று கூறியுள்ளார். அதன்படி அன்றில் இருந்து ஒரு பாடலுக்கு டி.எம்.ஸ். ரூ1000 சம்பளமாக பெற்றுள்ளார் என்று தகவல்கள் உள்ளது.தமிழ் சினிமாவின் இசைஞானி என்று அழைக்கப்படும் இளையராஜா அறிமுகமான அன்னக்கிளி படத்தில் டி.எம்.எஸ். பாடல்கள் பாடியிருந்தார். அதன்பிறகு ஒரு சில படங்களில் இருவரும் இணைந்து ஹிட் பாடல்கள் கொடுத்திருந்தாலும், ஒரு கட்டத்திற்கு மேல் டி.எம்.எஸ்.க்கு வாய்ப்பு கொடுக்காத இளையராஜா, எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு அதிகமாக வாய்ப்பு கொடுத்தாக தகவல்கள் இன்றும் வெளியாகி வருகிறது. இளையராஜா டி.எம்.எஸ். இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு தான் இதற்கு காரணம் என சமீபத்தில் டி.எம்.எஸ். மகள் கூறியிருந்தார்.நாகேஷ்க்கு ஹிட் கொடுத்த டி.எம்.எஸ்நாகேஷ்க்கு பெரிய வெற்றிப்படமாக அமைந்த சர்வர் சுந்தரம் படத்தில் அனைத்து பாடல்களும் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படத்தில் வரும் அவளுக்கென அழகிய முகம் பாடலை நாகேஷ்காக டி.எம்.எஸ், பாடிய இந்து பாடல் பெரிய ஹிட் பாடலாக அமைந்து நாகேஷ் என்றாலே இந்த பாடல் தான் நினைவுக்கு வரும். அந்த அளவிற்கு டி.எம்.எஸ்.நாகேஷ்க்கு குரல் கொடுத்து அசத்தியிருப்பார்.1985-ம் ஆண்டு சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான பந்தம் என்ற படத்தில், ஒரு பாடல் பாடிய டி.எம்.எஸ், 1991-ம் ஆண்டு எம்.எஸ்.வி இசையில் ஞானபார்வை என்ற படத்தில் ஒரு பாடலை பாடியிருந்தார். இதுவே அவர் திரைப்படத்தில் பாடிய கடைசி பாடலாக அமைந்துது. 2010-ம் ஆண்டு ஏ,ஆர்.ரஹ்மான் இசையில் செம்மொழியான தமிழ்மொழியாம் என்ற பாடலை பாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.