
நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer
Published on 31/03/2025 | Edited on 31/03/2025

‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘ஐ’, ‘ஒன்பதுல குரு ’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் காமெடி நடிகராக நடித்து ரசிககள் மத்தியில் பிரபலமானவர் பவர் ஸ்டார் சீனிவாசன். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவமனையின் சிகிச்சை பெற்றார். இப்போது மீண்டும் படம் நடிக்க தொடங்கியுள்ளார். அவர் புதிதாக ‘பெர்ஃப்யூம்’ என்ற தலைப்பில் ஒரு படம் நடிக்க கமிட்டாகியுள்ள நிலையில் படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அவர், பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் விஜய் அரசியல் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “ஜோசப் விஜய் அவர்களே, உங்களை நான் மிகவும் மதிக்கிறேன். உங்களிடம் என் கூட பிறந்த தம்பி மாதிரிதான் ஒன்பதுல குரு பட ஆடியோ வெளியீட்டு விழாவில் சந்தித்தேன். நம்ம இரண்டு பேரும் அரை மணி நேரம் தனியா பேசினோம். அப்போ நீங்க சொன்னீங்க, எனக்கு உலகம் முழுக்க ரசிகர்கள் இருக்காங்க, ஆனால் என் பையன் உங்க ரசிகர்-ன்னு சொல்லி சந்தோஷப்பட்டீங்க. நானும் சந்தோஷம் பட்டேன்.
ரொம்ப அமைதியா இருந்தவரு இன்னைக்கு மேடையில பயங்கரமான வசனம் பேசுகிறார். களத்துக்கு வாங்க… வந்தால்தான் வெற்றியோ தோல்வியோ தெரியும். எனக்கும் தான் ஏகப்பட்ட பேர் ரசிகர்கள் இருக்கிறார்கள். நானும் கட்சி ஆரம்பிக்க தீவிர முயற்சி எடுத்தேன். கடைசியில் என்னை சூழ்நிலை இப்படி தள்ளிவிட்டது. அதனால் என் அருமை தம்பி 2026 தேர்தலில் எங்கே நின்றாலும் அங்கே அவரை எதிர்த்து நிற்கத் நான் தயாராக இருக்கிறேன். அவர் தயாரா எனக் கேட்டுக்கொள்ளுங்கள். பெரிய கட்சி கூப்பிட்டால் கண்டிப்பாக நிற்பேன். இல்லையேல் சுயேட்சையாக நிற்பேன். தி.மு.க.வில் வாய்ப்பு கொடுத்தால் நிச்சயம் நிற்பேன். அரசியலில் எதிரியும் கிடையாது, நண்பனும் கிடையாது. நாளைக்கு விஜயே பெரிய கட்சி கூட்டணிக்கு அழைத்தால் அங்கு சென்றுவிடுவார்.
விஜய் மக்களுக்கு என்ன செய்யப்போகிறார், அவருடைய கொள்கை என்ன… இதெல்லாம் சொல்லாமல் எடுத்தவுடனே நான் அவருக்கு எதிரி, அவரை அழிச்சிடுவேன் என பேசுவது தப்பு. அப்படியெல்லாம் பேசக்கூடாது. முதல்வர் ஸ்டாலினின் அனுபவம் தான் இவருக்கு வயசு. அதனால் கூட்டம் இருப்பதால் எடுத்தோம் கவுத்தோம் என மேடையில் பேசக்கூடாது. நான் தமிழக முதல்வரை மானசீகமாக நேசிக்கிறேன். அவரை விஜய் விமர்சித்ததும் வேதனைப் பட்டேன். ஒரு நடிகர் இப்படி பேசலாமா எனப் பார்த்தேன். முதலில் அவர் சினிமா தொழில்நுட்ப கலைஞர்களுக்கு உதவி செய்யட்டும். அதை விட்டுவிட்டு மக்களுக்கு அதை பண்ணுகிறேன், இதை பண்ணுகிறேன் என சொல்கிறார். முதலில் அவர் களத்தில் இறங்கி வேலை பார்க்க வேண்டும். அதுதான் என் ஆசை.
அவரை அவரது ரசிகர்கள் ஆதரிப்பார்கள். ஆனால் ரசிகர்கள் வேறு, வாக்காளர்கள் வேறு. எனக்கும் விஜய்யை விட அதிக கூட்டம் இருந்தது. அதனால் நானும் கட்சி ஆரம்பித்தேன், எம்.பி. தேர்தலுக்கு நின்றேன். விஜயுடைய தந்தை தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவருக்கு போட்டியிட்டார். அவரை எதிர்த்து நான் நின்றேன். இப்போது அவரது மகனை எதிர்த்து நிற்கிறேன். நான் அவரை எதிர்த்து பேசுவதால் அவருடைய ரசிகர்கள் என்னை தாக்க நினைக்கலாம். அதற்கு முதல்வர் பாதுகாப்பு கொடுக்க வேண்டும். என்னை ஏகப்பட்ட பேர் மிரட்டியிருக்காங்க. கடத்தவும் செஞ்சிருக்காங்க. அதெல்லாம் தனிப்பட்ட முறையில் நடந்தது. விஜய் இப்போது ஒரு கட்சியின் தலைவர். அதனால் எதுவாக இருந்தாலும் சந்திக்க தயாராக இருக்கிறேன்” என்றார்.