இலங்கை
வீதி மின்விளக்குகளுக்கு ரூ.620 மில்லியன் நிலுவை

வீதி மின்விளக்குகளுக்கு ரூ.620 மில்லியன் நிலுவை
இருளில் மூழ்குமா வடக்கு?
வடக்கு மாகாணத்தில் 63 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீதி மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ள நிலையில் அவற்றுக்காக வருடமொன்றுக்கு 620 மில்லியன் ரூபா கட்டணம் செலுத்தப்படவேண்டும். இந்தக் கட்டணம் இன்னமும் செலுத்தப்படாது நிலுவையிலுள்ளது என்று இலங்கை மின்சாரசபையின் வடமாகாண பிரதிப் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
வடக்கிலிலுள்ள பெரும்பாலான வீதிகளில் அண்மைக்காலமாக வீதி மின்விளக்குகள் இரவு வேளைகளில் ஒளிராதுள்ளதாகவும் அதனால் மக்கள் நெருக்கடியை எதிர்கொள்வதாகவும் அவரைத் தொடர்புகொண்டு கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
ஆரம்பகாலத்தில் வீதி விளக்குகள் மின்சாரசபையால் பொருத்தப்பட்டு, அதற்குரிய பராமரிப்புகள் மற்றும் மின்சாரப் பட்டியல் பணத்தை ஒவ்வொரு மின் பாவனையாளர்களும் செலுத்துகின்ற மின்பட்டியலில் சிறுதொகையை மேலதிகமாக அறவிடப்பட்டு செலுத்தப்பட்டது.
எனினும் வீதி விளக்குகள் பொருத்தப்படாத பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் இதனால் பாதிக்கப்படுவதால் உள்ளுராட்சி சபைகள் தமது சபை எல்லைக்குட்பட்ட மக்களிடம் வரி வசூலிப்பதனால் உள்ளூராட்சிசபைகள் மின்சாரசபை ஊழியர்களை ஒப்பந்த அடிப்படையில் பெற்று வீதி விளக்குகளை பொருத்துதல், பராமரித்தல் மற்றும் மின் கட்டணங்களை செலுத்தும் வகையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன.
அந்தவகையில் தற்போது வடக்கு மாகாணத்தில் பொருத்தப்பட்டுள்ள 63 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீதி விளக்குகளுக்கு வருடம் ஒன்றுக்கு 620 மில்லியன் ரூபா கட்டணம் செலுத்தவேண்டும். இந்தக் கட்டண மின்பட்டியல் மின்சாரசபையால் உள்ளுராட்சி சபைகளுக்கு தொடர்ச்சியாக வழங்கப்படுகின்றபோதிலும் பல்வேறு காரணங்களைக் கூறி இதுவரையில் வடமாகாணத்தில் உள்ள எந்த உள்ளூராட்சி சபையும் மின்கட்டணம் செலுத்தவில்லை– என்றார்.