இலங்கை
வடக்கு – கிழக்கு அபிவிருத்தி 8 ஆண்டுகளுக்கு 500 மில். டொலர் உலக வங்கி வழங்கும்

வடக்கு – கிழக்கு அபிவிருத்தி 8 ஆண்டுகளுக்கு 500 மில். டொலர் உலக வங்கி வழங்கும்
வடக்கு – கிழக்கு மாகாணத்தில் உலக வங்கியால் பெரும் அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்காக, 500 மில்லியன் டொலர் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2026ஆம் ஆண்டுதொடக்கம் 2034ஆம் ஆண்டுவரை மூன்று கட்டங்களாக இந்த அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
உலக வங்கியின் நிபுணத்துவக் குழுவுக்கும், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றபோது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.
இதன்போது போரால் வடக்கு மாகாணம் கடந்த மூன்று தசாப்தங்களாகப் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டிய வடக்கு ஆளுநர் கிராமங்கள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
தொழிற்சாலைகள் வடக்கில் மூடப்பட்டுள்ளமையால் இளையோர் வேலை வாய்ப்புக்களை இழந்துள்ளனர் எனத் தெரிவித்த ஆளுநர், விவசாயம் மற்றும் மீன்பிடி வடக்கின் முக்கிய துறைகளாகவுள்ள நிலையில் உற்பத்திப் பொருட்களைப் பெறுமதி சேர் பொருட்களாக மாற்றி ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் அதிகளவானோருக்கு வேலை வாய்ப்புக்களை வழங்க முடியுமெனவும் சுட்டிக்காட்டினார்.
அதற்கு நிபுணத்துவக் குழுவினர் சாதகமான பதிலை வழங்கினார்கள். சுற்றுலாத்துறை, தகவல் தொழில்நுட்பத்துறை, விவசாயம், மீன்பிடி ஆகிய துறைகள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தவுள்ளதாக சுட்டிக்காட்டினர்.