பொழுதுபோக்கு
எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா டெஸ்ட் படம்; ரசிகர்களுக்கு விருந்தான மாதவன் – நயன்தாரா கெமிஸ்ட்ரி!

எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா டெஸ்ட் படம்; ரசிகர்களுக்கு விருந்தான மாதவன் – நயன்தாரா கெமிஸ்ட்ரி!
எஸ். சசிகாந்த் இயக்கத்தில் நடிகர் ஆர். மாதவன், நயன்தாரா, சித்தார்த் மற்றும் மீரா ஜாஸ்மின் போன்ற நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள டெஸ்ட் திரைப்படத்தை நெட்ஃபிளிக்ஸ் நேரடியாக வெளியிட்டுள்ளது. டெஸ்ட் திரைப்படம் கிரிக்கெட் விளையாட்டின் மீதுள்ள இந்தியர்களின் மோகத்தை, அதிகார மட்டத்தில் நடக்கும் காய் நகர்த்தல்களை, சில விஷயங்கள் எப்படி ரவுடிக் கும்பலால் கட்டுப்படுத்தப்படுகின்றன என்பதையும் ஒரு சுவாரஸ்யமான கோணத்தில் சொல்லியிருக்கிறது. நடிகர்கள் ஆர். மாதவன், நயன்தாரா, முதன்முறையாக சேர்ந்து நடித்துள்ள அதே நேரத்தில், மீரா ஜாஸ்மின் நீண்ட இடைவெளிக்கு பிறகு, தமிழ் சினிமாவுக்கு திரும்பி வந்துள்ள திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதைப் பார்ப்போம் வாருங்கள்.’டெஸ்ட்’ திரைப்படம், வழக்கமான கிரிக்கெட் கதையல்ல. இது, மைதானத்தில் பந்துவீசும் வேகத்தை விட, வெளியே நடக்கும் தந்திரங்களின் வேகம் அதிகம் என்பதை அழுத்தமாகச் சொல்லும் ஒரு பரபரப்பான நாடகம். ஆர். மாதவன், நயன்தாரா, சித்தார்த் மீரா ஜாஸ்மின் நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்திருக்கும் இந்த ‘டெஸ்ட்’, நம்மை கிரிக்கெட்டின் இருண்ட பக்கத்திற்கு அழைத்துச் செல்கிறது. அதே நேரத்தில் ரசிகர்கள் மத்தியில் ஒரு கலவையான விமர்சனங்களையும் கருத்துகளையும் பெற்றுள்ளது.இயக்குனர் சசிகாந்த், முதல் படத்திலேயே ஒரு தேர்ந்த திரைக்கதை ஆசிரியராக நம்மை வியக்க வைக்கிறார். கிரிக்கெட் என்ற போர்வையில், மனிதர்களின் பேராசை, பொறாமை, வெற்றி பெற வேண்டும் என்ற வெறி என பல உணர்வுகளை அழகாகப் பின்னி இருக்கிறார். படம் முழுக்க பல திருப்பங்கள் இருந்தாலும், அவை கதையின் ஓட்டத்தை தடை செய்யாமல், ஆர்வத்தை தூண்டிக்கொண்டே இருக்கின்றன.ஆர். மாதவன், சரவணன் என்ற கதாபாத்திரத்தில் மிரட்டியிருக்கிறார். ஒருபுறம் தேசத்திற்காகப் புதுமை செய்யத் துடிக்கும் விஞ்ஞானியாகவும், மறுபுறம் தனது இலக்கை அடைய தவறான பாதையைத் தேர்ந்தெடுக்கும் ஒரு சிக்கலான மனிதனாகவும் அவர் வெளிப்படுத்தும் நடிப்பு அபாரம். அவரது ஒவ்வொரு அசைவிலும், வசனத்திலும் அந்த கதாபாத்திரத்தின் ஆழம் தெரிகிறது.நயன்தாரா, குமுதாவாக அழுத்தமான நடிப்பை வழங்கியுள்ளார். கணவனின் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாத, அதே நேரத்தில் வாழ்க்கையின் யதார்த்தத்தை உணர்ந்த ஒரு பெண்ணாக அவர் திரையில் தோன்றும் ஒவ்வொரு காட்சியிலும் நம்மை ஈர்க்கிறார். சித்தார்த்தின் அர்ஜுன் கதாபாத்திரம், ஒரு கிரிக்கெட் வீரனின் தடுமாற்றத்தையும், சூழ்நிலைக்கு ஏற்ப மாறும் மனநிலையையும் சிறப்பாக வெளிப்படுத்துகிறது. இவர்களுடன் மீரா ஜாஸ்மினும் தனது முதிர்ச்சியான நடிப்பால் படத்திற்கு வலு சேர்க்கிறார்.’டெஸ்ட்’ வெறும் கிரிக்கெட் ஆட்டத்தைப் பற்றியது மட்டுமல்ல. இது, வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே உள்ள மெல்லிய கோட்டைப் பற்றியது. ஒவ்வொரு கதாபாத்திரமும் தங்களது பார்வையில் நியாயமானவர்களாகத் தோன்றினாலும், அவர்களின் செயல்கள் ஏற்படுத்தும் விளைவுகள் நம்மை யோசிக்க வைக்கின்றன. ‘வெற்றி பெறுபவனே எல்லாம்’ என்ற தத்துவத்தை இப்படம் ஆழமாக ஆராய்கிறது.தமிழ் சினிமாவில் நடிகர் ஆர். மாதவன் 25 ஆண்டுகளுக்கு மேலாக நடித்துக்கொண்டிருக்கிறார். அதே போல, நடிகை நயன்தாராவும் 25 ஆண்டுகளுக்கு மேலாக நடிக்கிறார். ஆனால், இவர்கள் எந்த படத்திலும் ஜோடியாக சேர்ந்து நடித்ததில்லை. ஆனால், இவர்கள் சேர்ந்து நடித்த முதல் படமான டெஸ் படத்தில் பல படங்கள் சேர்ந்து நடித்த மாதிரி ஒரு கெமிஸ்ட்ரி வெளிப்பட்டுள்ளது. தமிழ் சினிமா இயக்குநர்களுக்கு இவ்வளவு காலம் இவர்களை ஜோடி சேர்க்கத் தோணாமல் போய்விட்டது என்று கேட்கத் தோண்றுகிறது.காதலித்து திருமணம் செய்துகொண்ட நயன்தாரா- மாதவனுக்கு இடையிலான உறவு, ஆசிரியையான நயன்தாரா பள்ளியில் எதிர்கொள்ளும் பிரச்னை, கடன் வாங்கிவிட்டு, ரவுடிகளிடம் மாட்டிக்கொள்ளும் மாதவனின் நிலைமை, கிரிக்கெட் போர்டுடன் பிரச்சினையை எதிர்கொள்ளும் சித்தார்த் என முதல் பாதிவரை மிகுந்த எதிர்பார்ப்புடன் செல்கிறது டெஸ்ட் படம். இந்த இடங்களில் எல்லாம் ஆர். மாதவன், நயன்தாரா, சித்தார்த், மீரா ஜாஸ்மின் ஆகியோர் தங்கள் நடிப்பின் மூலம் ஸ்கோர் செய்து படத்தை தூக்கி நிறுத்துகிறார்கள். ஆனால், கிரிக்கெட்டில் டெஸ்ட் மேட்ச்சில் 2-ம் பாதிதான் விறுவிறுப்பாக இருக்கும். ஆனால், டெஸ்ட் படத்தின் 2-வது பாதி திரைக்கதை வேறு ஒரு மனநிலைக்கு செல்வதால் அவை த்ரில்லர் மனநிலையையும் தரவில்லை. படத்தின் நீளம் சற்று சோர்வடையவே செய்கிறது. இதைத்தான் ரசிகர்கள் படம் மிகவும் பொறுமையாக செல்கிறது என்கிறார்கள். விராஜ் சிங் கோஹிலின் ஒளிப்பதிவு மற்றும் சக்தி ஸ்ரீ கோபாலனின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் உயிரோட்டம் கொடுக்கின்றன. கிரிக்கெட் களத்தின் பரபரப்பையும், கதாபாத்திரங்களின் உணர்வுப் போராட்டத்தையும் அவை கச்சிதமாகப் பிரதிபலிக்கின்றன. இருப்பினும், சில இடங்களில் திரைக்கதை இன்னும் கொஞ்சம் இறுக்கமாக இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. மொத்தத்தில், நெட்ஃபிலிக்ஸின் இந்த ‘டெஸ்ட்’, கிரிக்கெட் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, நல்ல சினிமா பார்க்க விரும்பும் அனைவருக்கும் ஒரு விருந்து. வழக்கமான மசாலா திரைப்படங்களில் இருந்து விலகி, ஒரு யதார்த்தமான கதையை சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கும் இந்த ‘டெஸ்ட்’, நிச்சயம் உங்கள் நேரத்தை வீணாக்காது. கிரிக்கெட் களத்தில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் பல ‘டெஸ்ட்’களை நாம் சந்திக்க வேண்டியிருக்கிறது என்பதை இப்படம் உணர்த்துகிறது! தவறவிடக்கூடாத ஒரு ‘டெஸ்ட்’ இது!