இந்தியா
மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் வேறு துறைக்கு மாற்றம்: புதுச்சேரி அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்

மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் வேறு துறைக்கு மாற்றம்: புதுச்சேரி அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்
புதுச்சேரியில் கடந்த 1981–ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, பின்னர் 1986–ஆம் ஆண்டு முதல் புதுச்சேரி அரசு கலை பண்பாட்டுத் துறை மூலம் இயங்கி, பல்வேறு முனைவர்களை உருவாக்கிய புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தை வேறு துறைக்கு மாற்றும் புதுச்சேரி அரசின் செயலை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில், புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவன பாதுகாப்புக் குழுவினர் கலந்து கொண்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்மாமணி முனைவர் வேல்முருகன் தலைமை வகித்தார். மேலும், முனைவர்கள் சுந்தர முருகன், சடகோபன், தி.மு.க இலக்கிய அணி அமைப்பாளர் சீனு. மோகன்தாசு, கலைமாமணி பாலசுப்ரமணியம், தமிழ்ச்சங்க துணைத் தலைவர் திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா கலந்து கொண்டு பேசினார். அப்போது, “தமிழ் மொழியின் அடையாளமாக, இந்த மக்களின் உணர்வாக, கலாச்சாரத்தின் வெளிப்பாடாக இருக்கக் கூடிய மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தை மூட அரசு நினைத்திருக்கிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். புதுச்சேரி மக்கள் வெகுண்டு எழுந்தார்கள் என்றால் அதற்கு அரசு பதில் சொல்ல வேண்டி இருக்கும். புதுச்சேரியை ஆளுகின்ற என்.ஆர். காங்கிரஸ் அரசு தனது உண்மை முகத்தை காட்ட வேண்டும். முதல்வர் ரங்கசாமி தமிழரா? இது தமிழர்களுக்கான ஆட்சியா? மொழிக்கான ஆட்சியா? என்பதை தெரிவிக்க வேண்டும். பல்வேறு ஆராய்ச்சி மாணவர்களை உருவாக்கிய இந்நிறுவனத்தை சிதைத்துள்ளது வெட்ககேடானது” என்று கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.