இந்தியா
பாம்பன் பால கட்டிடத்தின் உறுதி தன்மையில் குறைபாடா..? ஆய்வில் கிடைத்த ஷாக்கிங் ரிப்போர்ட் என்ன..?

பாம்பன் பால கட்டிடத்தின் உறுதி தன்மையில் குறைபாடா..? ஆய்வில் கிடைத்த ஷாக்கிங் ரிப்போர்ட் என்ன..?
பாம்பன் பால கட்டிடத்தின் உறுதி தன்மையில் குறைபாடா..? ஆய்வில் கிடைத்த ஷாக்கிங் ரிப்போர்ட்
பாம்பன் புதிய ரயில் பாலத்தினை இறுதியாக ஆய்வு செய்த ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ரயிலை இயக்கலாம் என்று தெரிவித்து, பல்வேறு குறைபாடுகள் குறித்தும் தெரிவித்துள்ளார். இந்தாண்டு இறுதிக்குள் ரயில் சேவை தொடங்கப்படும் என காத்திருந்த மக்களுக்கு, ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் தகவல் அதிர்ச்சியை அளித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலில் ரூ.550 கோடி மதிப்பீட்டில் புதிய ரயில் பாலம் செங்குத்து தூக்கு பாலத்துடன் அமைக்கப்பட்டு, 100 சதவீதம் பணிகள் முடிந்து பாலத்தில் பல்வேறு கட்ட சோதனைகள் நடைபெற்றது. இதில் கடந்த நவம்பர் -13,14 ம் தேதி இரண்டு நாட்கள் முழுமையாக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம். சவுத்ரி ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் பல அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளது. முதலாவதாக, புதிய ரயில் பாலத்தினை திட்டமிடுவதற்கு முன்பு தொழில்நுட்ப ஆலோசனை குழுவை ரயில்வே வாரியம் அமைந்திருக்க வேண்டும். ஆனால், இந்த நடைமுறை பின்பற்றவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடல் உப்பு காற்றினால் துருப்பிடித்து ஏற்படும் அரிப்பு போன்றவைகளுக்கு தீர்வு காண போதுமான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் செங்குத்து பாலத்தினை ஆய்வு செய்து, அதன் அறிக்கையை ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், பாம்பனில் 58 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும்போது ரயில் இயக்க கூடாது. பொதுவாக பாலத்தில் ரயிலை 70 கிலோமீட்டர் வேகத்திலும், செங்குத்து பாலத்தில் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இயக்கலாம் என்று அறிக்கையின் வாயிலாக கூறியுள்ளார்.
இந்த அறிக்கை பெரும் சர்ச்சைக்குள்ளான நிலையில், புதிய பாலத்தின் வடிவமைப்பு தெற்கு ரயில்வேயால் அங்கீகரிக்கப்பட்டது. சென்னை மற்றும் மும்பையின் ஐஐடியின் சான்று பெற்று, புகழ்பெற்ற சர்வதேச ஆலோசகரின் முறையான ஆதாரத்தின் அடிப்படையில் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளதாகவும், அதிநவீன வடிவமைப்பு மற்றும் சிறந்த கட்டுமான நடைமுறைகளுடன் பாலம் கட்டப்பட்டுள்ளது என்பது உறுதி செய்யப்பட்டு, ரயில்வே பாதுகாப்பு ஆணையரால் ரயிலை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே அறிக்கை வெளியிட்டுள்ளது.
பாலத்தில் ரயில் 70 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல அனுமதி வழங்கி உள்ளார். 100 சதவீதம் முழுமையாக எந்தவொரு பணியும் செய்ய இயலாது. இதனால், இந்த கட்டமைப்பில் உள்ள சில தவறுகள் சுட்டிக்காட்டி, அதனை சரிசெய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். தினமும் 10,000 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பாலத்தின் பயணம் செல்ல உள்ளனர். இப்படிப்பட்ட சூழலில், பாலம் பலவீனமானதாக இருந்தால் 70 கிலோமீட்டர் வேகத்தில் ரயிலை இயக்க அனுமதி அளித்திருக்க வாய்ப்பில்லை. வருங்காலத்தில், மூத்த பொறியாளர்களை வைத்து வேகம் அதிகரிக்கலாம் என்றும் அறிக்கையில் கூறியுள்ளார்.
ஆசியாவிலேயே முதல் முறையாக செங்குத்து பாலம் பாம்பனில் தான் உள்ளது. மிகவும் மோசமான வானிலையில் தான் கட்டமைப்பு நடைபெற்றது. உலகத்திலேயே மிகவும் வேகமாக துருப்பிடிக்க கூடிய இடமாக பாம்பன் உள்ளது. இயற்கைக்கு மாறாக எதுவும் செய்ய முடியாது. அதற்கான வழிமுறைகளையும் கட்டுமான பணியாளர்கள் பின்பற்றி தான் கட்டமைப்பு செய்துள்ளனர்.
உலகத்திலேயே அதிகமாக துருப்பிடிக்கும் இடத்தில் பயன்படுத்தப்படும் ‘பாலி சிலிக்கான்’ வகை பெயிண்ட் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவை 35 ஆண்டுகள் வரை துருப்பிடிக்காமல் பாதுகாக்கும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இந்நிலையில், தற்போது இப்பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், 5 பேர் கொண்ட தொழில்நுட்ப குழு அமைத்து விசாரணைக்கு ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே, தினந்தோறும் 10,000க்கும் அதிகமான சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் பயணிக்க கூடிய ரயில் பாலத்தில் உள்ள குறைபாடுகளை சரிசெய்து, விரைவில் ரயில் சேவை தொடங்க வேண்டும் என்பது ராமேஸ்வரம் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கையாக உள்ளது.