இலங்கை
நீதிமன்றங்களின் தீர்ப்புகளால் தேர்தல் ஆணைக்குழு குழப்பம்

நீதிமன்றங்களின் தீர்ப்புகளால் தேர்தல் ஆணைக்குழு குழப்பம்
சிக்கலைத் தீர்க்க சட்டமா அதிபரிடம் தஞ்சம்
உள்ளூராட்சிச் சபைத் தேர்தலுக்கான நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பாக உயர் நீதிமன்றமும், மேன்முறையீட்டு நீதிமன்றமும் வெவ்வேறு தீர்ப்புகளை வழங்கியுள்ள நிலையில், உயர்நீதிமன்றில் மேன்முறையீடு செய்து தீர்வினைப் பெற்றுத்தர வேண்டும் என்று சட்டமா அதிபரிடம் தேர்தல்கள் ஆணைக்குழு கோரியுள்ளது.
உள்ளூராட்சிச் சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களில் வேட்பாளர்களின் பிறப்புச் சான்றிதழ்கள் பிரதேச செயலகங்கள் ஊடாக அத்தாட்சிப்படுத்தப்படாமையால் ஒரு தொகை வேட்புமனுக்கள் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களால் நிராகரிக்கப்பட்டிருந்தன. இது தொடர்பாக உயர் நீதிமன்றத்திலும், மேன்முறையீட்டு நீதிமன்றத்திலும் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
வழக்குகளை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்தக் காரணத்துக்காக நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தீர்ப்பளித்தது. ஆனால் இதே காரணத்துக்காக உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இது தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் சட்டத்தரணி அமீர் பாயிஸ் கருத்துத் தெரிவித்தபோது, ஒரே விடயத்தில் நீதிமன்றங்களின் இரு நிலைப்பாடுகளால் குழப்பம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இந்தவிடயத்தில் ஒரு நிலைப்பாட்டை எடுத்து அதற்கேற்ப செயற்படவே தேர்தல்கள் ஆணைக்குழு விரும்புகின்றது என்று தெரிவித்துள்ள அவர், இந்த விடயத்தில் உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்து தீர்வைப் பெற்றுத்தர வேண்டும் என்று சட்டமா அதிபரிடம் தேர்தல்கள் ஆணைக்குழு கோரியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஒருவாரகாலமாக இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளபோதும், சட்டமா அதிபரால் இன்னமும் மேன்முறையீடு செய்யப்படவில்லை. ஆயினும் அதற்குரிய முயற்சிகளை நாம் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றோம்- என்றும் அவர் தெரிவித்துள்ளார்.