உலகம்
சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க மெக்சிகோவுடன் பேச்சு!

சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க மெக்சிகோவுடன் பேச்சு!
அமெரிக்காவுக்குள் இடம்பெறும் சட்ட விரோதக் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்துவது குறித்து மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் உடன் கலந்துரையாடியுள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்ட் ட்ரம்ப் எதிர்வரும் ஜனவரி 20 ஆம் திகதி பதவியேற்க உள்ளார்.
இதற்கிடையே மெக்சிகோ மற்றும் கனடா நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தலா 25 சதவீதம் கூடுதல் வரி விதிக்க திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளில் இருந்தும் போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் சட்ட விரோத குடியேற்றம் என்பன நடக்கிறது என்றும் அதை அந்த நாடுகளின் அரசாங்கம் தடுக்க நடவடிக்கை எடுக்கும் வரை இந்த வரிவிதிப்பு அமுலில் இருக்கும் என்றும் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
இதற்கு மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில் சட்ட விரோத குடியேற்றத்தை தடுக்க மெக்சிகோவுடன் ஒப்பந்தம் செய்யப்படும் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, நான் மெக்சிகோ ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ளேன். அவர் மெக்சிகோ வழியாக இடம்பெயர்வதை தடுக்க ஒப்புக்கொண்டார்.
இது மிகவும் பயனுள்ள உரையாடலாக இருந்தது. எங்கள் தெற்கு எல்லையை மூடுவதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. போதைப்பொருள் கடத்தலை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.