பொழுதுபோக்கு
மறைந்த பெற்றோர், மனைவிக்காக கோவில் கட்டிய மதுரை முத்து – நெகிழ்ச்சி சம்பவம்!

மறைந்த பெற்றோர், மனைவிக்காக கோவில் கட்டிய மதுரை முத்து – நெகிழ்ச்சி சம்பவம்!
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள அரசப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மதுரை முத்து. காமெடி நடிகரான இவர், டி.வி. நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். சின்னத்திரை நகைச்சுவை கலைஞரும், நகைச்சுவை பட்டிமன்ற நடுவருமான மதுரை முத்து அடிக்கும் ஜோக்குகளுக்கென தனி ரசிகர் பட்டாளம் தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ளனர். இவருடைய பெற்றோர் ராமசாமி, முத்து இருளாயி. இருவரும் இறந்துவிட்டனர். சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்தில் மதுரை முத்துவின் மனைவி லேகா பலியானார். இந்நிலையில், திருமங்கலம் அருகே அரசபட்டி கிராமத்தில் மறைந்த தனது தாய், தந்தை மற்றும் மனைவி அவர்களுக்கு மார்பளவு உருவசிலை அமைத்து கோவில் ஒன்றை பிரதிஷ்டை செய்திருக்கிறார் மதுரை முத்து. அதிகாலையில் வழக்கம்போல யாகங்கள் வளர்க்கப்பட்டன. மதுரை முத்துவுடன் இணைந்து சின்னத்திரையில் அசத்தி வரும் பல்வேறு நகைச்சுவை பிரபலங்களும், சின்னத்திரை நடிகர்களும், அரசியல் பிரமுகர்களும் நேரில் வந்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மதுரை முத்து, பெற்றோரை அவமதிப்பது, அவர்களுடைய பேச்சை கேட்காமல் இருப்பது, போதைகளுக்கு அடிமைப்பட்டு பெற்றோரை அவதூறாக பேசுவது போன்ற செயல்களில் இளைஞர்கள் ஈடுபடுவதை தவிர்க்கும் வகையிலும், இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், பெற்றோரை மதித்து வணங்குதல் எவ்வளவு சிறப்பு என்பதை உணர்த்தும் வகையிலும் எனது பெற்றோருக்கு சிலை அமைத்து உள்ளேன். அதேபோல் எனது மனைவி சிலையையும் ஒன்றிணைத்து கோவிலாக்கி உள்ளேன் என்றார்.சித்திரை முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டு தினத்தில், நடந்த கோவில் திறப்பு விழாவை ஒட்டி, 1000-க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம், கைம்பெண் மற்றும் முதியோருக்கு வேட்டி சேலை, மாணவர்களுக்கு உடைகள், நோட்டு புத்தகம், மரக்கன்றுகள் உள்ளிட்டவையும் அவர் வழங்கினார்.