வணிகம்
யு.பி.ஐ. பரிவர்த்தனைகளுக்கு 18% ஜி.எஸ்.டி.யா..? – மத்திய அரசு விளக்கம்

யு.பி.ஐ. பரிவர்த்தனைகளுக்கு 18% ஜி.எஸ்.டி.யா..? – மத்திய அரசு விளக்கம்
UPI எனும் யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் இன்று மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்டது. இதனை அறிமுகம் செய்யும்போது மக்கள் இதை ஏற்பார்களா என்ற கேள்வி மக்கள் மத்தியில் மட்டும் அல்லாமல் நாடாளுமன்றத்திலும் எழுப்பப்பட்டது. அறிமுகம் செய்த காலத்தில் ஜியோ, ஏர்டெல் அறிமுகம் செய்த மலிவான மொபைல் டேட்டா திட்டங்களும், 4ஜி சேவையும், மோடி அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை யூபிஐ பயன்பாட்டை ராக்கெட் வேகத்தில் உயர்த்தியது.தற்போது பெட்டிக்கடை முதல் நகை கடை, கார் ஷோரூம் வரையில் யூபிஐ சேவை உள்ளது. இதை எளிதாக பயன்படுத்த முடியும் என்பதால் இளம் தலைமுறையினர் முதல் மூத்த குடிமக்களும் பயன்படுத்துகின்றனர். UPI சேவை தற்போது கட்டணம் ஏதுமின்றி பணப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ள முடிவதால், பலதரப்பட்ட நிதிப் பரிமாற்றங்களுக்கு யூபிஐ வாயிலாக செய்யப்படுகிறது.கடந்த மார்ச் மாதத்தில் மட்டும், இந்தியாவில் யுபிஐ மூலம் நடைபெற்ற பரிவர்த்தனைகளின் மொத்த மதிப்பு ரூ.24.77 லட்சம் கோடி. நாடு முழுவதும் யுபிஐ சேவை பரவலாக, அனைத்து தரப்பு மக்களும், அனைத்து தரப்பினரும் பயன்படுத்தப்பட்டு வரும் வேளையில் இதன் மீது ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.டைம்ஸ் நவ் வெளியிட்டுள்ள செய்தியில், 2,000 ரூபாய்க்கு அதிகமான தொகை கொண்ட யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு 18% GST விதிக்கப்படுவது குறித்து மத்திய அரசு ஆலோசனை செய்து வருவதாகத் தகவல் பரவியுள்ளதாக தெரிவித்துள்ளது. இன்னும் சில செய்திகளில் 5% ஜிஎஸ்டி என்றும், டிஜிட்டல் வேலெட் சேவை பரிமாற்றத்திற்குதான் ஜிஎஸ்டி வரி என்றும் தகவல் வெளியாகியுள்ளது.மத்திய அரசு பல முறை யூபிஐ சேவை மீது வரி விதிப்பது குறித்து கருத்து எழுந்த போது அதை மறுத்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு முறை யூபிஐ மீது ஜிஎஸ்டி விதிக்கும் கருத்து காட்டுத்தீ போல் பரவி வருகிறது. யூபிஐ சேவை மூலம் மக்கள் கையில் பணப்புழக்கம் என்பது குறைந்து வருவதை பார்க்க முடிந்தாலும் பணமதிப்பிழப்புக்குப் பின்பு மக்கள் மத்தியில் பண புழக்கம் 3 மடங்கு அதிகரித்துள்ளது.யூபிஐ மீதான ஜிஎஸ்டி தகவல் வெறும் வதந்தியாக மட்டுமே இருக்க வேண்டும் என பலரும் எதிர்பார்க்கின்றனர், இதேபோல் மத்திய நிதியமைச்சகமும் இதுகுறித்து எவ்விதமான கருத்துகளையும் வெளியிடாத நிலையில் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது மத்திய நிதியமைச்சகம்.விளக்கம்: மத்திய நிதியமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையை PIB பொதுமக்களுக்கு வெளியிட்டது. இதில் மத்திய நிதியமைச்சகம் யூபிஐ மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பு செய்திகளை “பொய்யானவை, தவறானவை மற்றும் எந்தவித ஆதாரமும் இல்லாதவை” என்று குறிப்பிட்டுள்ளது, அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.அந்த அறிக்கையில் “ரூ.2,000க்கு மேற்பட்ட UPI பரிவர்த்தனைகளுக்கு சரக்கு மற்றும் சேவை வரி (GST) விதிக்க அரசாங்கம் பரிசீலித்து வருகிறது என்ற தகவல்கள் முற்றிலும் பொய்யானவை, தவறானவை மற்றும் எந்தவித அடிப்படையும் இல்லாதவை. தற்போது, அரசாங்கத்தின் முன் இத்தகைய எந்த பரிந்துரையும் இல்லை.” என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் UPI பரிவர்த்தனைகளுக்கு எந்தவித GST வரியும் விதிக்கப்படாது என்பதை அரசு அதிகாரப்பூர்வ அறிக்கை உறுதிப்படுத்துகிறது.ஃபோன்பே (PhonePe), கூகிள் பே (Google Pay), பேடிஎம் (Paytm) போன்ற யுபிஐ கட்டண சேவைகளை வழங்கும் தளங்கள் கட்டணம் வசூலிக்கத் தொடங்க வாய்ப்புள்ளது. அப்படி ஒரு கட்டணம் வசூலிக்கப்பட்டால், அந்த கட்டணத்தின் மீது 18% சேவை கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும் என்று மிரா மணியின் (MIRA Money) இணை நிறுவனர் ஆனந்த் கே.ரதி கூறினார்.